Published:Updated:

மாற்றுத் திறனாளிகளை காயப்படுத்திய தோட்டா, லத்தி..! சில தூத்துக்குடி உண்மைகள்

மாற்றுத் திறனாளிகளை காயப்படுத்திய தோட்டா, லத்தி..! சில தூத்துக்குடி உண்மைகள்
மாற்றுத் திறனாளிகளை காயப்படுத்திய தோட்டா, லத்தி..! சில தூத்துக்குடி உண்மைகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்கும் மேலாகிவிட்டது. துப்பாக்கிச் சூடு நடந்த அன்றைய நாள், ஈவுஇரக்கமின்றி செயல்பட்ட காவல்துறையினர் எந்த அளவுக்கு மோசமாக நடந்துகொண்டனர் என்றால், போராட்டத்துக்கு வந்த மாற்றுத்திறனாளிகளையும் சரமாரியாகத் தாக்கினர். ஒரு விபத்தில் ஏற்கெனவே கை பறிபோனவரை காவல்துறையினரின் தோட்டா துளைத்தது. பிறவிலேயே கால் ஊனமான மாற்றுத்திறனாளியை அவரின் நிலையைத் தெரிந்த பின்னரும் காலில் அடித்தனர். இன்னும் இதுபோல எத்தனையோ மாற்றுத்திறனாளிகள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது பாதிக்கப்பட்டனர். தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனின் விசாரணையும் நடந்துகொண்டிருக்கிறது. என்றாலும், பாதிக்கப்பட்டவர்களின் கதறலுக்குத் தீர்வு கிடைப்பது எப்போது?

தூத்துக்குடிப் போராட்டத்தில் கலந்துகொண்டு குண்டடிபட்ட மாற்றுத்திறனாளி பிரபு என்பவரிடம் பேசினோம். அவர், ``எனக்கு 36 வயசு ஆகுதுங்க. நான் ஒரு மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் கடலுக்குப் போனாத்தான், எங்க வீட்ல எல்லாருக்கும் சாப்பாடு. கடலுக்குப் போனா திரும்பிவர ஏழெட்டு நாள்கள்கூட ஆகும். எனக்கு கல்யாணம் ஆகலை. 11 வருஷத்துக்கு முன்னாடி என்னோட 25 வயசுல நடந்த ஒரு விபத்துல, என் வலதுகை துண்டிக்கப்பட்டது. ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சின்னஞ்சிறுசுங்க முதல் பெருசுங்கவரை எல்லோரும் போனோம். இந்த ஸ்டெர்லைட்டுனால ஏற்பட்ட பாதிப்புகள நாங்க சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணும்னு இல்லைங்க. இன்னிக்கு ஒரு முடிவோடதான் திரும்பணும்; முடிவு கிடைக்கலைன்னா ஆட்சியர் அலுவலகத்துலயே உக்காந்துடணும்னு திடமா இருந்தோம். 

நாங்க எல்லாரும் பேரணியா ஆட்சியர் அலுவலகம் நோக்கி போயிட்டு இருந்தோம். எல்லாம் அமைதியாத்தான் நடந்துட்டு இருந்துச்சு. காவல்துறை பேரணிய வழிமறிக்க ஆரம்பிச்சாங்க. ஆனா, நாங்க தடையையும் மீறி முன்னேறிப் போனோம். அப்போதான் காவல்துறைக்கும், பேரணியில் சென்ற மக்களுக்கும் இடையே சின்னதா உரசல் ஆரம்பிச்சுது. காவல்துறை போட்டு வெச்சிருந்த தடுப்புகளை மீறி, அவற்றையெல்லாம் நகர்த்திப் போட்டுட்டு முன்னேறிப் போய்க்கிட்டு இருந்தோம். திடீர்னு மக்களுக்கும் காவல்துறைக்கும் தள்ளுமுள்ளு நடந்துச்சு, மக்கள்ல சிலர் கல்லெறிஞ்சு தாக்க ஆரம்பிச்சாங்க. அதுக்கு அப்புறம் காவல்துறை தடியடி நடத்தியதால், சிலர் காவல்துறையினரின் வாகனங்களுக்குத் தீ வெச்சாங்க. அதன்பின்னர், திடீர்னு குண்டுமழை பெஞ்சது போல துப்பாக்கியால் சுட ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு ஏற்கெனவே பாதி துண்டான கையில குண்டு பாய்ஞ்சுருச்சு. 

நான்கூட மொதல்ல ரப்பர் குண்டாதான் இருக்கும்னு நினைச்சேன். ஆனா, போகப்போக கையில இருந்து முதுகுவரை வலி ரொம்ப அதிகமாகிடுச்சு. தொடர்ந்து இருமிகிட்டே இருந்தேன். என்னோட அம்மா நர்சு வேலை பாத்தவங்க. பொதுவா அடிபட்டாக்கூட வீட்லயேதான் தையல் போடுவாங்க. எனக்கு மனோதிடம் ரொம்ப அதிகம். கையில பாய்ஞ்ச குண்ட எடுக்ககுறதுக்காக, பக்கத்துல ஒரு தனியார் மருத்துவமனைக்கு போனப்போ 'இது போலீஸ் கேசு, கலெக்டர் ஆபீஸ் பிரச்னை, நாங்க நாளைக்கு கோர்ட்டுல கைகட்டி நிக்கணும். நாங்க யாரையும் அனுமதிக்க மாட்டோம்ன்னு' சொல்லிட்டாங்க. 

சுற்றிலும் எந்த ஆஸ்பத்திரிலயும் யாரையும் அனுமதிக்கல. குண்டடிப்பட்ட அன்னிக்கு நானே குண்ட எடுத்துடலாம்னு முதல்நாள் வீட்டுலயே இருந்துட்டேன். ரத்தம் வராம இருக்க, நானே முதலுதவி செஞ்சுக்கிட்டேன். குண்டு ஆழமா போயிருந்ததால என்னால எடுக்க முடியல. இரண்டாவது நாள் வீட்டுல உள்ள என்னோட அக்கா, தங்கச்சி எல்லாரும் பயந்து போயி தூத்துக்குடி பெரியாஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போனாங்க. ஆஸ்பத்திரியில மருத்துவம் பார்த்தது முழுக்க, முழுக்க மாணவர்களாத்தான் இருந்தாங்க. அங்க எக்ஸ்-ரே (X-Ray) எடுத்ததுல உள்ள இருக்குறது மெட்டல் குண்டுன்னு சொன்னாங்க. உடனே ஆபரேஷன் செஞ்சு குண்ட எடுத்துட்டாங்க.

அப்பறம் அங்கேயே வெச்சிருந்தாங்க, நைட்டு 12 மணிக்கு பெரிய டாக்டரு வந்து என்னை எழுப்பிட்டே இருந்தாரு. என்ன, ஏதுன்னு கேட்டதுக்கு மெட்டல் குண்டு பாஞ்சதுல அதுல இருக்குற பாய்ஸன் ரத்தத்துல கலந்து புகைமாதிரி நுரையீரல சுத்திகிட்டு இருக்குன்னு சொன்னாங்க. நடுசாமத்துல ஒரு மணிக்கு ஆபரேஷன் செய்யணும்னு சொன்னாங்க. 'பகல்ல ஆபரேஷன் செய்யலாம் இப்போ வேணாம்' அப்படின்னு சொன்னேன். அதுக்கு அவங்க 'இப்படியே விட்டா காலையில உயிரோட இருக்க மாட்டீங்க'ன்னு சொல்லிட்டாங்க. எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. பயந்து போயி கையெழுத்து போட்டுட்டேன். அன்னிக்கு நள்ளிரவு ஒரு மணிக்கு ஆபரேஷன் நடந்து முடிஞ்சுது. அதுக்கப்பறம் நிறைய அரசியல் தலைவர்கள் ஆஸ்பத்திரியில வந்து பாதிக்கப்பட்டவங்கள பார்த்தாங்க. அரசு சார்பா எனக்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுத்தாங்க. வேறு சில அரசியல் தலைவர்களும் உதவி செஞ்சாங்க. துப்பாக்கிச்சூட்டுக்கு முன்னாடி கண்ணீர் புகைகுண்டும் வீசல, தண்ணீய பீய்ச்சி அடிக்கவும் செய்யல. துப்பாக்கியால சுடப்போறோம்னு எச்சரிக்கையும் செய்யல. ஆனா இந்த இழப்பீடெல்லாம் எங்க வலிக்கு மருந்தில்ல. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தண்டனை கொடுக்கணும்" என்றார் கோபத்துடன். 

மாவட்ட ஊனமுற்றோர் சங்கம் சார்பில் போராட்டத்தில் கலந்துகொண்ட பிரதீப்பிடம் பேசினோம். அவர், ``எனக்குப் பிறவியிலேயே காலு ஊனம். தூத்துக்குடி முழுக்க கிட்டத்தட்ட 20 களத்துல போராட்டம் நடந்துட்டு இருந்துச்சு. மே 22-ம் தேதி கலெக்டர் ஆபீஸ முற்றுகையிடப் போறாங்கன்னு கேள்விப்பட்டேன். நானும் அதுல கலந்துக்கணும்னு இருந்தேன். மாவட்ட ஊனமுற்றோர் சங்கத்துல உள்ளவங்க எல்லாரும் மே 22-ம் தேதி போராட்டத்துல கலந்துக்கப் போறதா சொன்னாங்க. சங்க உறுப்பினர்களோட போராட்டத்துக்குப் போனோம். வி.வி.டி சிக்னல்கிட்ட போகும்போது போலீஸ்காரங்க எங்கள தடுத்து 'ஓடு இங்க நிக்காத'ன்னு  சொன்னாங்க.  'எனக்கு காலு ஊனம். என்னால ஓட முடியாதுன்னு' சொன்னேன். அதுக்கு அவங்க 'ஊனமா இருக்குற நீயெல்லாம் எதுக்கு இங்க வந்த'ன்னு சொல்லி பாதிக்கப்பட்ட காலிலேயே அடிச்சாங்க. என்னால தொடர்ந்து நடக்க முடியல. ரொம்பக் கஷ்டப்பட்டு நடக்க முடியாம நடந்து போனேன். 

அப்பறம் நண்பரோட இருசக்கர வாகனத்துல கலெக்டர் ஆபீஸ் வரை போயிட்டேன். அங்க துப்பாக்கிச் சூடு நடக்க ஆரம்பிச்ச அப்பறம், அங்கிருந்து வெளியவர முயற்சி பண்ணேன். என்னோட சித்தப்பா கிளாட்ஸ்டன் துப்பாக்கிச் சூட்டுல இறந்துட்டாருன்னு பதறி அடிச்சு போயி பெரியாஸ்பத்திரி போனேன். பிணவறையில சித்தப்பாவ பார்க்கப் போனோம், பெரியாஸ்பத்திரிக்குப் பின்னாலதான் பிணவறை. அங்க எங்கள உக்காரக் கூடாதுன்னு சொல்லி போலீஸார் மிரட்டுனாங்க. அப்பறம் மறுபடியும் 30 போலீஸ் வந்தாங்க. 'இங்கயே உக்காந்துட்டு இருந்தா உங்களையும் சுட்டுக் கொன்னுடுவோம்'ன்னு சொல்லி மிரட்டுனாங்க. எத்தனை பேரைச் சுடுவீங்க. எங்களயும் சுட்டுக்கோங்கன்னு சொல்லி அங்கேயே உக்காந்துட்டோம். அப்புறம் எல்லாரையும் அடிக்க ஆரம்பிச்சாங்க. மறுபடியும் என்னோட காலிலேயே அடிச்சாங்க. என்னோட கால் ஊனம்னு சொல்லி அடையாள அட்டைய காமிச்சேன். அதையும் மீறி காலாலேயே அடிச்சாங்க. அப்பறம் ஒரு வீட்டுக்குள்ள ஒளிஞ்சு, அங்கிருந்து தப்பிச்சு வந்தோம். அதனால நான் அடிபட்டதுக்குக்கூட ஆஸ்பத்திரி போகல. வீட்டுலயே வைத்தியம் பார்த்தோம். மீன்பிடி தொழில், பிளம்பிங் வேலைன்னு கிடைக்கிற வேலைய செஞ்சு பொழைச்சுகிட்டு இருக்கேன். என்ன நம்பி என் மனைவி இருக்கா. அடிபட்டதுல இருந்து 20 நாள் ரொம்ப அவஸ்தைப் பட்டுட்டோம். சம்பாத்தியமும் இல்ல. ஆஸ்பத்திரி போகாததுனால அரசு சார்பு உதவியும் கிடைக்கல" என்றார்.