Published:Updated:

மருத்துவமனை சுவரெல்லாம் சித்திரங்கள் - மாற்றிக்காட்டிய தனி ஒருவன்

மருத்துவமனை சுவரெல்லாம் சித்திரங்கள் - மாற்றிக்காட்டிய தனி ஒருவன்

``ராத்திரி, பகல் பார்க்காம நான் வேலை செய்யறதைப் பார்த்து, டீக்கடையில் உள்ளவங்க, ஆட்டோக்காரங்க, கார் டிரைவர்ஸ்னு எல்லோருமே அந்த சுவர்ல யாரும் போஸ்டர் ஒட்டாத அளவுக்குப் பார்த்துக்கிட்டாங்க."

மருத்துவமனை சுவரெல்லாம் சித்திரங்கள் - மாற்றிக்காட்டிய தனி ஒருவன்

``ராத்திரி, பகல் பார்க்காம நான் வேலை செய்யறதைப் பார்த்து, டீக்கடையில் உள்ளவங்க, ஆட்டோக்காரங்க, கார் டிரைவர்ஸ்னு எல்லோருமே அந்த சுவர்ல யாரும் போஸ்டர் ஒட்டாத அளவுக்குப் பார்த்துக்கிட்டாங்க."

Published:Updated:
மருத்துவமனை சுவரெல்லாம் சித்திரங்கள் - மாற்றிக்காட்டிய தனி ஒருவன்

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும் என்பது பழமொழி. அதுவும் அரசு அலுவலகச் சுவர்களில் சித்திரங்களைப் பார்ப்பதென்பது அரிதான ஒன்றாகி விட்டது. சினிமா போஸ்டர்கள், அரசியல் பிரமுகர்களின் அலப்பரைகள், வணிக விளம்பரங்கள் எனப் பணம் ஒன்றைக் குறிக்கோலாகத் தேடி ஓடும் மனிதர்களின் மனஓட்டத்தைப் பிரதிபலிக்கும் இடமாகச் சுவர்கள் மாறத் தொடங்கிவிட்டன. தங்களின் வணிகப் புத்தியை போஸ்டர்களாக மாற்றி, அதை வலிமையான பசை கொண்டு சுவரில் ஒட்டுகிறார்கள். அதைத் தடுக்கவோ, கிழித்தெறியவோ யாருக்கும் மனம் இல்லை. அதற்கான நேரமும் இருப்பதில்லை. இதனால் பெரும்பாலான இடங்களில் சுவர் இருந்தும் சித்திரம் வரையமுடியாத நிலை உள்ளது. கல்லூரி மாணவர் ஒருவரின் விடாமுயற்சி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை சுவரை அழகாக்கியிருக்கிறது.

காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியைச் சேர்ந்தவர் நித்தியகுமார். சென்னை கேளம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். ஏரோநாட்டிகல் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஆயிரக்கணக்கானவர்கள் கடந்து செல்லும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை சுவரை தனிஒருவனாக அழகாக்கிய பெருமை அவருக்கு உண்டு.

``போன வருஷம் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலமா எங்க காலேஜ்ல ஒரு நிகழ்ச்சி நடந்தது. வீட்ல ஓய்வா இருக்கும்போது சுத்தம் செய்யும் பணியைச் செய்யலாம்னு சொன்னாங்க.. தூய்மைப் பணிகளை எப்படிச் செய்யணும்னு விளக்கமும் கொடுத்தாங்க. காலேஜ் முடிச்சுட்டு தாம்பரம் சானிட்டோரியம் வழியா வீட்டுக்கு வரும்போது, அங்கிருக்கும் சுவர்கள்ல உள்ள ஓவியங்களை பார்த்துக்கிட்டே வருவேன். அந்த ஓவியங்களைப் பார்க்கும் போதெல்லாம் இதுபோல எல்லா இடத்திலும் வரைஞ்சா நல்லாயிருக்குமே என நினைப்பேன். திடீர்னு ஒருநாள் நாமும் காஞ்சிபுரத்தில் இதுபோல செஞ்சா நல்லாயிருக்கும்னு நினைச்சேன். தூய்மை பற்றி மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தணும்னு நினைச்சேன். என்னோட ஆசையை எங்க அம்மாகிட்ட சொன்னேன். `உனக்கு நல்லதுன்னு தோனுறத யோசிக்காம செய். உனக்கு வேண்டிய உதவியைச் செய்யுறேன்’னு சொன்னாங்க. செலவுக்காக 5000 ரூபாயும் கொடுத்தாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்கூல் படிக்கும் போது நான் டிராயிங் கிளாஸ் போயிருக்கிறேன். அதனால் நானே இங்குள்ள சுவர்கள்ல ஓவியங்கள் வரையலாம்னு முடிவெடுத்தேன். இதற்காக என்னோட செமஸ்டர் விடுமுறை முழுவதையும் பயன்படுத்த ஆரம்பிச்சேன். காஞ்சிபுரம் மருத்துமனைக்குப் போய் ஆர்.எம்.ஓ., மருத்துவமனை இணை இயக்குநர் உள்ளிட்டவங்களைச் சந்திச்சு அனுமதி கேட்டேன். உடனே சரினு சொல்லி உற்சாகப்படுத்தினாங்க.

அப்புறம் அங்கிருந்த போஸ்டர்களை கிழிச்சி சுவரைச் சுத்தப்படுத்த ஆரம்பிச்சேன். ராத்திரி பகல் பாக்காம சுண்ணாம்பு அடிச்சேன். ஒருநாள், சுண்ணாம்பு அடிக்கும்போதே மழை பெஞ்சு எல்லாம் வேஸ்டாப்போச்சு. அதனாலா திரும்பவும் சுண்ணாம்பு அடிச்சு முடிச்சு, அதன்மேல் பிரைமர் அடிச்சு விட்டேன். இதுக்கு மட்டும் 15 நாள் செலவாச்சு. அதற்குப் பிறகு இங்குள்ள ஒரு ஹார்டுவேர் கடையில பெயின்ட் வாங்கினேன். நான் செய்யும் வேலைகளைச் சொன்னபோது, அந்தக் கடைக்காரர் எனக்காகத் தள்ளுபடியில் பெயின்ட் கொடுத்தார். அதைத் தொடர்ந்து அந்தச் சுவரில் ஓவியங்கள் வரைய ஆரம்பிச்சேன்.

ராத்திரி, பகல் பார்க்காம நான் வேலை செய்யறதைப் பார்த்து, டீக்கடையில் உள்ளவங்க, ஆட்டோக்காரங்க, கார் டிரைவர்ஸ்னு எல்லோருமே அந்தச் சுவர்ல யாரும் போஸ்டர் ஒட்டாத அளவுக்குப் பார்த்துக்கிட்டாங்க.

ராத்திரி நேரத்துல இந்த வழியாப் போறவங்கள்ள சிலர் என்னை யார், எதுக்கு இந்த வேலை செய்யறனு விசாரிச்சுட்டுப் போவாங்க. இன்னும் சில தினங்கள்ல இந்த வேலைகளை முடிச்சிடுவேன். என்னால முடிஞ்ச அளவுக்கு இந்தச் சமூகத்துக்கு ஏதாவது செய்யணும்னு ஆசை. யாரும் போஸ்டர் ஒட்டாம மருத்துவமனை நிர்வாகம் பார்த்துக்கிட்டா, அதைவிடப் பெரிய சந்தோஷம் என்ன வேணும்?” என்கிறார் நித்தியக்குமார்.

வணிக மனிதர்களின் மனவோட்டத்தைப் பிரதிபலித்த அந்தச் சுவர், தற்போது நித்தியகுமாரின் நல்ல மனதை பிரதிபலிக்க தொடங்கியிருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism