Published:Updated:

``ஸ்டெர்லைட் விளக்கங்களில் உண்மையில்லை. ஆனால், தீர்ப்பு அவர்களுக்குச் சாதகமாகலாம்!’’ #StatusUpdate

``ஸ்டெர்லைட் விளக்கங்களில் உண்மையில்லை. ஆனால், தீர்ப்பு அவர்களுக்குச் சாதகமாகலாம்!’’ #StatusUpdate
``ஸ்டெர்லைட் விளக்கங்களில் உண்மையில்லை. ஆனால், தீர்ப்பு அவர்களுக்குச் சாதகமாகலாம்!’’ #StatusUpdate

அரசு கூறுவதைப்போல ஸ்டெர்லைட் விவகாரம் முடிந்துவிடவில்லை இன்னும் திறந்த அத்தியாயமாகத்தான் இருப்பதாக நித்யானந்த் ஜெயராமன் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், கடந்த மே மாதம் தீவிரமடைந்தது. போராட்டத்தின் 100வது நாள் பேரணியில் ஏற்பட்ட கலவரத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்கிற கோரிக்கை அனைத்துத் தரப்பிலிருந்தும் வலுப்பெற்றதையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அரசாணையின் மூலம் உத்தரவிட்டு ஆலைக்கு சீல் வைத்தது.

தற்காலிகமாக ஆலை மூடப்பட்டிருந்தாலும், 'ஆலையை மீண்டும் தொடங்குவதற்கான சட்டபூர்வமான பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவோம்' என 'வேதாந்தா குழுமம்' தெரிவித்து வந்தது. டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திலும் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து தற்போது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையே, `ஸ்டெர்லைட் நிறுவனம் பொதுவெளியில் சரிந்துவரும் தன் பெயரைக் காப்பாற்றிக்கொள்ள பொய்யான தகவல்களைக் கூறி பல கோடி ரூபாய் செலவு செய்து பரப்புரை செய்து வருகிறது. அவர்கள் கூறும் மறுப்புகளில் எந்த விதமான உண்மையும் இல்லை' எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் மற்றும் ஓய்வுபெற்ற ஐ.ஐ.டி பேராசிரியர் சுவாமிநாதன் ஆகியோர் நேற்று மாலை பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர்.

அப்போது பேசிய நித்யானந்த் ஜெயராமன், ``1996-ல் ஆலை தொடங்கப்பட்டதிலிருந்தே சட்டபூர்வமாகச் செயல்பட்டு வருவதாகவும் எந்தவொரு திரவக் கழிவும் ஆலையிலிருந்து வெளியேற்றப்படவில்லை எனவும் ஸ்டெர்லைட் கூறிவருகிறது. ஆனால், 2006-ம் ஆண்டில் ஸ்டெர்லைட் தன் உற்பத்தி திறனை 900 டன்னிலிருந்து 1,200 டன் என விரிவாக்கம் செய்வதற்கு விண்ணப்பித்தது. இந்த விரிவாக்கத்துக்கு தேவையான 172.17 ஹெக்டேர் நிலம் தங்கள் வசம் இருப்பதாகக் கூறி, மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடமிருந்து நவம்பர் 2006-லும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடமிருந்து ஆகஸ்ட் 2007-லும் விரிவாக்க உரிமத்தைப் பெற்றுக்கொண்டனர். ஆனால், ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் இருப்பது வெறும் 102.3 ஹெக்டேர் நிலம்தான். 

'பசுமைப் போர்வை பராமரிப்பு, மழை நீர் சுத்திகரிப்பு என மாசுக்கட்டுப்பாடு வாரியம் விதித்த எந்தவொரு நிபந்தனையையும் ஸ்டெர்லைட் நிறைவேற்றவில்லை' என 2011-ம் ஆண்டு வெளியிடப்படிருந்த `நீரி கமிட்டி’ அறிக்கையும் குறிப்பிட்டிருக்கிறது” என்றார்.

அடுத்து பேசிய பேரா.சுவாமிநாதன், “ஸ்டெர்லைட் நிறுவனம் வெளியிட்டுள்ள கணக்குகள் அனைத்தும் தவறானவை. ஓர் ஆலையிலிருந்து வெளிவரும் மாசுக் கட்டுப்பாட்டை குறைப்பதற்கு புகை போக்கிகள் அவசியமானது. சட்டப்படி அமில உற்பத்தி ஆலை ஒன்றில் புகைபோக்கியின் உயரம் 83.5 மீட்டர் உயரம் இருந்தாக வேண்டும். ஆனால், ஸ்டெர்லைட் வசம் இருப்பது வெறும் 60 மீட்டர் உயரம் கொண்ட புகைபோக்கிதான். இதுபோன்ற உயரம் குறைவான புகைபோக்கி கொண்டு ஓர் ஆலை சரியான முறையில் இயங்கினாலே சுற்றுப்புறத்தில் ’சல்பர் டையாக்ஸைடு’ அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகரித்துவிடும். ஸ்டெர்லைட் ஆலை அனைத்து சுற்றுச்சூழல் விதிமுறைகளையும் மீறி செயல்பட்டு சுற்றுச்சூழலில் சல்பர் டையாக்ஸைடு மாசுபாட்டை அதிகரித்திருக்கிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய நித்யானந்த ஜெயராமன், ``2011-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சுகாதார கண்காணிப்பு ஆய்வு ஒன்றை நடத்த வேண்டும் என ஸ்டெர்லைட்டுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி தற்போது வரை 12 ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும், ஆனால், ஒன்றுகூட நடத்தப்படவில்லை. அவ்வப்போது வெகு சில மக்களை மட்டும் வைத்து சுகாதார முகாம்களை நடத்தி அதை ஆய்வறிக்கையாகக் காட்ட முயன்று வருகிறது. மேலும், 2006-ல் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், `ஆண்டுக்கு ஒருமுறை சுற்றுச்சூழல் தணிக்கை நடத்தப்பட வேண்டும்' என நிபந்தனை விதித்திருந்தது. ஆனால், இன்று வரை ஒரு தணிக்கைகூட செய்யப்படவில்லை” என்றார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை வலுவானதில்லை என்றும், அந்த ஆலை மூடப்பட வேண்டும் என்பதை கொள்கை முடிவாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் எனவும் பல அரசியல் கட்சிகளும் சட்ட நிபுணர்களும் கோரிக்கை வைத்தனர். ``மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், `தமிழக அரசு ஏன் இந்த ஆணையைக் கொள்கை முடிவாக அறிவிக்கக் கூடாது’ எனப் பரிந்துரைத்தபோது, `இது அரசின் கொள்கை முடிவுதான்’ எனத் தமிழக அரசு பதிவுசெய்திருந்தது. ஆனால், அமைச்சரவையைக் கூட்டி அப்படியொரு முடிவு எடுக்கப்படவில்லை, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் செய்திருக்கும் மேல்முறையீட்டில் இந்த அரசாணை ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. எனவே, அரசு கூறுவதைப்போல ஸ்டெர்லைட் விவகாரம் முடிந்துவிடவில்லை இன்னும் திறந்த அத்தியாயமாகத்தான் இருப்பதாக நித்யானந்த் ஜெயராமன் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு