Published:Updated:

``பெண்களுக்கு சுதந்திரம்தான் முக்கியத் தேவை!’’ - சூழலியல் ஆர்வலர் அர்ச்சனா சேகர்

``பெண்களுக்கு சுதந்திரம்தான் முக்கியத் தேவை!’’ - சூழலியல் ஆர்வலர் அர்ச்சனா சேகர்
``பெண்களுக்கு சுதந்திரம்தான் முக்கியத் தேவை!’’ - சூழலியல் ஆர்வலர் அர்ச்சனா சேகர்

பெண்ணியம் என்பது ஆணாதிக்கச் சமூகத்தில் சம உரிமை தரப்பட வேண்டும் என்ற விழிப்பு உணர்வை ஏற்படுத்துவது.

ர்ச்சனா சேகர். பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். தன்னுடைய கல்லூரிப் படிப்புக்காக புனே சென்றவர், படிப்பின் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் வேலை செய்ய வேண்டிய சூழலால் சென்னை வந்தார். `பன்யான்' என்ற அமைப்புடன் சேர்ந்து இயங்க ஆரம்பித்தார். அதன்மூலம் மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகி, மனநோயின் தீவிரத்தை உணர்ந்துகொண்டதும் `இங்கேயே செய்ய நிறைய வேலைகள் இருக்கின்றன. இதைவிட்டு புனேவில் நேரத்தை வீணாக்கிக்கொண்டிருக்கிறோமே’ எனத் தோன்றவே தன்னுடைய படிப்பை விட்டுவிட்டு சென்னையில் முழு நேரமாகச் செயல்படத் தொடங்கினார். கல்லூரிப் படிப்பைவிட்ட அந்த ஓராண்டில், பண்பாடு, நாட்டுப்புறக் கலைகள் மூலம் சூழலியல் விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் `டாப் சென்னை’ என்ற தன்னார்வல அமைப்புடன் சேர்ந்து செயல்பட ஆரம்பித்தார்.

சுற்றுச்சூழல் சார்ந்த போராட்டங்களை முன்னெடுப்பதும், முக்கியமான அரசியல் கேள்விகளை முன்வைப்பதுமாக இயங்கிய `வெட்டிவேர்’ கூட்டமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார். அதன் பிறகு, கடற்கரையைச் சுத்தமாக வைத்துக்கொள்வது, பால்புதுமையினர், பெண்ணிய உரிமைகள் பற்றிப் பேசுவது எனத் தன்னுடைய செயல்பாடுகளைச் சூழலியல் சார்ந்தும் சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்காகவும் மாற்றிக்கொண்டார்.

மனநலம் பாதிக்கப்பட்டு, வீடற்று தெருக்களில் வசிப்பவர்களுக்கான நட்பை ஏற்படுத்திக்கொடுப்பது, கொடைக்கானலில் பாதரசம் தொழிற்சாலை மூலம் ஏற்பட்ட மாசை எதிர்த்துக் குரல்கொடுப்பது எனப் பல்வேறு சமூகப் பிரசாரங்களின் மையமாக இருந்திருக்கிறார். அதேபோல ஐ.ஐ.டி மெட்ராஸில் முனைவர் கல்பனா கருணாகரனுடன் `ஜெண்டர் அண்டு லேபர்’ என்ற புராஜெக்டில் வேலைசெய்துள்ளார்.

தற்போது `ஜெண்டர் அண்டு மீடியா’ என்ற தலைப்பில் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் வாரம் ஒரு கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறார். தன்னை எழுத்தாளர், ஆய்வாளர் மற்றும் உரிமைகளுக்கான சமூகச் செயற்பாட்டாளர் என அறிமுகம்செய்துகொள்கிறார். கலை, நாடகம், தொல்லியல் மீது ஆர்வம்கொண்டவராகவும் இருக்கிறார். எந்த அமைப்பையும் சாராமல் தன்னார்வலராகச் செயல்பட்டுவரும் இவரிடம், தமிழகத்தில் இன்று இருக்கும் மிகப்பெரிய பிரச்னைகளான சூழலியல் மற்றும் பெண்கள் பிரச்னைகள் பற்றி உரையாடினேன். 

``பெண்ணியம் என்பதை எப்படிப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக நினைக்கிறீர்கள்?''

``ஆண்களை ஒடுக்குவதற்கான ஒன்றாக மட்டுமே பெண்ணியம் பார்க்கப்படுகிறது. இது தவறான எண்ணம். பெண்ணியம் என்பது, ஆணாதிக்கச் சமூகத்தில் சமஉரிமை தரப்பட வேண்டும் என்ற விழிப்பு உணர்வை ஏற்படுத்துவது. அந்தச் சம உரிமை என்பது வீட்டிலோ வெளியிலோ வேலை செய்யும்போது சம ஊதியம், பாதுகாப்பான வாழ்க்கை என்பதாகவே பார்க்கப்பட வேண்டும். இதுதான் பெண்ணியம்.''

``சூழலியலுக்கும் பெண்ணியத்துக்கும் என்ன தொடர்பு?''

``சூழலியல், சமூகநீதி இந்த இரண்டிலும் பெண்கள்தான் அதன் வேராக இருக்கிறார்கள். சுற்றுச்சூழலுக்கு ஒரு சீரழிவு ஏற்படுகிறது என்றால், பெண்கள், குழந்தைகள் மற்றும் விளிம்புநிலை மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள். ஏனென்றால், இவர்கள்தான் இயற்கைக்கு மிக நெருங்கியவர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்களை மையமிட்டதாகப் பேசப்படும்  சூழலியல் சிக்கல்கள், பெண்ணியம் சார்ந்த சிக்கல்கள், சமூகநீதிப் பிரச்னைகள் ஆகியவையே மிக முக்கியமனதாகப்படுகின்றன. சூழலியல் பெண்ணியம் என்பது, இந்த மூன்றையும் உள்ளடக்கியதுதான்.''

``பெண்கள் மீதான வன்முறை இப்போது அதிகரித்திருக்கிறதே?''

``பெண்கள் மீது நடக்கும் தாக்குதல், பாலியல் வன்கொடுமை ஆகியவை இப்போது தொடங்கியதல்ல. மனிதன் தோன்றிய காலம் முதலே இருந்திருக்கிறது. இன்று நாம் சந்தோஷப்பட வேண்டியது என்னவென்றால், இந்தப் பிரச்னை குறித்து இப்போது அதிகமாகவே வெளியில் பேச ஆரம்பித்துள்ளோம் என்பதுதான். அதுவும் இப்போது பெண்களோ, பாதிக்கப்பட்ட குடும்பமோ, வெளியில் வந்து பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு சமூக ஊடகமும் சமூக ஒத்துழைப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். அப்படி வெளியில் வந்து சொல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய நீதி கிடைக்கச் செய்வது நமது கடமை. இவ்வளவு பேசுகிறோம். ஆனால், இன்னும் வன்முறை குறையவில்லை என்று சொல்ல முடியாது. ஏனென்றால், செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கின்றன. அப்படிச் செய்யும்போது இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். முன்பைவிட அதிகம் பேச ஆரம்பித்துள்ளோம். அதனால்தான் முன்பைவிட இப்போது பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகமானதாகத் தோன்றுகிறது.''

``குழந்தைகள் மீதான வன்முறைகளையும் இப்படித்தான் பார்க்க வேண்டுமா?''

``எப்போதும் எதிர்த்துப் பேச முடியாத, அதிகாரம் இல்லாத ஒன்றின் மீது ஆதிக்கம் செலுத்துவதுதான் மனித இயல்பாக இருந்திருக்கிறது. அப்படித்தான் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையையும் பார்க்க வேண்டும். காரணம், குழந்தைகள் எதிர்த்து எதுவும் செய்ய முடியாது என்பதால்தான். இப்போது குழந்தை என்று வரும்போது `ஐயோ குழந்தை!' எனப் பதறுகிறோம். அதுவே குழந்தையாக இல்லாமல் பெண்ணாக இருந்திருந்தால் அந்தப் பெண் யார், யாரிடமெல்லாம் பேசுகிறாள், அந்தப் பெண்ணின் பின்புலம் என்ன என்று எல்லாம் பார்த்துவிட்டுத்தான் அடுத்து பேசவே தொடங்குவோம். ஆனால், குழந்தைக்கு என்றால், ஒரு பதற்றமும் கோபமும் தொற்றிகொள்கின்றன. இந்தப் பதற்றமும் கோபமும் எந்தப் பெண்ணுக்கு நடந்தாலும் ஏற்பட வேண்டும்.''

``இதற்கெல்லாம் என்ன தீர்வு?''

``நம்முடைய மிகப்பெரிய பிரச்னை, பாதுகாப்பதுதான். அந்தச் சொல்லை எல்லா மொழிகளிலும் இருந்து எடுக்க வேண்டும் என நினைக்கிறேன். பெண்களைப் பார்ப்பது போன்றுதான் சுற்றுச்சூழலையும் பார்க்கிறோம். ஒன்று, தெய்வநிலைக்குக் கொண்டுசெல்வது அல்லது அது நம்முடையது நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது. இது ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்னை என நினைக்கிறேன். நாம் முதலில் பெண்களை `நிலாவே', `நதியே' என இயற்கையோடு இணைத்துப் பேசும் சிந்தனையை மாற்றினாலே பல பிரச்னைகளுக்குத் தீர்வு வந்துவிடும்.

பெண்களுக்குப் பாதுகாப்பு தேவையில்லை. பெண்களுக்கு சுந்தந்திரம், மரியாதை, அவர்கள் வாழ்வை அவர்கள் தீர்மானிக்கும் உரிமை தேவை. இதற்கான செயல்பாடுகளில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். நம்முடைய மனநிலையிலும் பண்பாட்டு நிலையிலும் மாற்றங்கள் நிகழ வேண்டும். அப்படி நிகழுமானால் நிச்சயம் இதற்கொரு நல்ல தீர்வு ஏற்படும்.''

அடுத்த கட்டுரைக்கு