Published:Updated:

``தொலைந்துகொண்டிருப்பது கென்யா மட்டுமல்ல..!” - தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் 9

மூலப் பொருள்களுக்கும் இறுதிச் சரக்குக்கும் இடையிலிருக்கும் இந்த இடைவெளி மிகப்பெரிது. முதலாளித்துவக் கோட்பாடுகள் நுகர்வோரிடம் அந்த இடைவெளியை அப்படியே வைத்திருக்கிறது.

``தொலைந்துகொண்டிருப்பது கென்யா மட்டுமல்ல..!” - தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் 9
``தொலைந்துகொண்டிருப்பது கென்யா மட்டுமல்ல..!” - தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் 9

கென்ய மக்களின் தண்ணீரைச் சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள் கார்ப்பரேட்டுகள். அவர்களின் நுகர்வுப் பசிக்காக மக்களின் தாகத்தை விலைபேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் தண்ணீரைத் திருடிக்கொண்டிருப்பது கென்ய ரோஜாக்கள் மட்டுமல்ல. அது ஒரு துளி மட்டுமே.

புவியின் வடகோளத்தில் வாழ்பவர்களைப் பொறுத்தவரை மற்ற இயற்கை வளங்களைப் போலவே தண்ணீரும் இயற்கை கொடுத்த ஒன்று அவ்வளவே. இந்தக் கருத்தைத் தாண்டி தண்ணீர் குறித்த எந்தக் கவலைகளும் அவர்களுக்கில்லை. குழாயைத் திறந்தால் கொட்டுகிறது. அதைப் பற்றி அவர்கள் ஏன் சிந்திக்கவேண்டும். அது எங்கேயிருந்து வருகிறது. அந்தக் குடிநீரை உருவாக்குவதற்கான மழை சுழற்சி, கடந்துவரும் மலைகள், ஆறுகள், ஏரிகள், மனிதக் கட்டுமானத்தில் உருவான குழாய்கள் என்னென்ன, எங்கெங்கு உள்ளது, என்பதுபோன்ற கேள்விகள் அவர்களுக்கில்லை. அவர்களைப் பொறுத்தவரை சூப்பர் மார்க்கெட்டில் பேக்கிங் செய்யப்பட்ட மாமிசத்தை வாங்குவது போலத்தான் தண்ணீரும். உயிருடனிருந்த கோழியோ அதன் மரணமோ அதற்குப் பிறகு அது வந்துசேர்ந்த இடமோ சாப்பிடுபவர்களுக்கு எப்படித் தேவையில்லாததோ, தண்ணீரும் அவர்களுக்கு அப்படியே. கடைக்குப் போனால் மாமிசம் கிடைக்கிறது. பணம் கட்டிவிட்டுக் குழாயைத் திறந்தால் தண்ணீர் கிடைக்கிறது.

மூலப் பொருள்களுக்கும் இறுதிச் சரக்குக்கும் இடையிலிருக்கும் இந்த இடைவெளி மிகப்பெரிது. முதலாளித்துவக் கோட்பாடுகள் நுகர்வோரிடம் அந்த இடைவெளியை அப்படியே வைத்திருக்கிறது. அதனால்தான் ஒரு குளிர்பானத்தைக் குடிப்பதற்குமுன் அதைத் தயாரிக்க எத்தனை லிட்டர் தண்ணீர் எங்கு கிடைத்தது என்றும், அது கிடைத்த நாட்டில் வாழும் மக்களுக்கான அடிப்படைப் பயன்பாடு பூர்த்தியானதா என்ற சிந்தனையும் மக்களுக்கு உதிக்காமல் பாதுகாக்க அவர்களால் முடிகிறது.

அப்படிச் சிந்திக்கக் கூடாதென்று மறைத்து வைக்கப்பட்டிருப்பதுதான் கென்ய ரோஜாக்களைப் போல் ஆப்பிரிக்காவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருள்களின் உற்பத்தி விவரங்கள். ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல, தென்னமெரிக்கா, ஆசியா, தென்கிழக்கு ஆசியா என்று உலகின் பல்வேறு பகுதிகளில் இது வெகு சாதாரணமாக நடக்கிறது.

ஆப்பிரிக்காவில் நிலவிவரும் தண்ணீர்த் தட்டுப்பாடு எதேச்சையானதல்ல. வஞ்சனையாக உண்டாக்கப்பட்டது. அங்கு முன்னேற்றம் என்ற பெயரில் கையகப்படுத்தப்படும் நிலங்கள் தனியார்மயமாக்கப்படுகின்றன. அது புதுவகையான காலனியாதிக்கத்தை உருவாக்கி வருகிறது. அதில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளோடு சௌதி அரேபியா, கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளும் அவற்றின் பன்னாட்டு நிறுவனங்களும் அடக்கம். ஆப்பிரிக்காவின் அரசியல்வாதிகள் சந்தைப் பொருளாதாரத்தில் தங்கள் பங்கை அதிகரிப்பதிலேயே முனைப்பு காட்டி வருகின்றனர். ஆனால், அந்நாட்டு மக்களும் அந்த நாடுகளின் நிலைமையும் மேல்நாட்டுப் பொருளாதாரப் போட்டிகளில் பங்கெடுக்கும் அளவுக்குச் சிறப்பாக இல்லை. சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் ஆப்பிரிக்க அரசியல்வாதிகள் அவசியமற்ற பொருளாதாரப் பந்தயத்தில் தங்கள் நாடுகளைப் பணயம் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

முன்னேற்றம் என்பது பொருளாதார வளர்ச்சியை வைத்தே பார்க்கப்பட வேண்டுமென்றால் அது அரசு நிர்வாகத்துக்கும் குடிமக்களுக்கும் இடையிலான உறவை விரிசலடையச் செய்துவிடும். ஏனென்றால் ``பொருளாதார வளர்ச்சி மட்டுமே நாட்டின் முன்னேற்றம்" என்பது அடிப்படை மனித உரிமைகளையும் குடிகளின் பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்கும். ஒரு நாட்டின் முன்னேற்றத்தை வெறும் பொருளாதார வளர்ச்சியை வைத்துக் கணக்கிடமுடியாது. பொருளாதாரம் வளர்ச்சியடைவதே உள்நாட்டு உற்பத்திப் பொருள்களை மக்கள் நுகர்வதால்தான். அதனால் அந்த மாதிரியான பொருளாதாரப் பார்வை சரியே என்கிறது ஒரு கூட்டம். அதுவும் உண்மையே, தனது உள்நாட்டு உற்பத்தி தனது நாட்டிலேயே பயன்படுத்தப்படும் பட்சத்தில். ஆனால், ஆப்பிரிக்காவில் அப்படி நடப்பதில்லை. பன்னாட்டு நிறுவனங்கள் ஆப்பிரிக்க நாடுகளை ஓர் உற்பத்தித் தொழிற்சாலையாகவே பார்க்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை தொழிற்சாலையிலிருந்து சரக்குகள் வெளியே வந்துதானே ஆகவேண்டும்.

சாதாரணமாக மாலி (Mali) தேசத்தில் முறையாக மழை பெய்வதில்லை. அதனால் அங்கு ஏற்கெனவே தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ளது. இது போதாதென்று அங்கிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் வேறு அவர்களின் வளங்களை மேலும் சுரண்டுகிறார்கள். மாலியிலிருக்கும் கிடல் (Kidal) என்ற சிறுபட்டணத்தில் மக்கள் தினசரி பத்துக் கிலோமீட்டர் தண்ணீர் தேடி நடக்கவேண்டும். அதிகாலை ஐந்து மணிக்கே வரிசையில் நின்றாகவேண்டும். தண்ணீர் கிடைக்க எத்தனை மணிநேரமாகும் என்பதெல்லாம் அது கைக்குக் கிடைக்கும்போதே முடிவாகும். அவ்வளவு தூரம் நடந்துபோய்க் காத்திருந்து அவர்கள் வாங்கும் தண்ணீரின் குறைந்தபட்ச விலை ஒரு மாதத்துக்கு ஏழு யூரோக்கள். அதாவது மாலி பணத்தில் 4591 பிராங்குகள்.

மாலியில் ஐ.நா-வின் 10,732 பாதுகாப்புப் படை வீரர்களும், 1,250 ஐ.நா போலீஸ், 1,246 ஐ.நா அதிகாரிகளும் இருக்கின்றார்கள். மாலியில் ஒருங்கிணைந்த ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பால் இவர்கள் அங்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள். ஆனால், இந்தப் பற்றாக்குறையை நீக்குவதற்கான எந்தவித நடவடிக்கையும் இவர்கள் மேற்கொள்ளவில்லை. குறைந்தது கிடைக்கும் தண்ணீரையாவது இலவசமாகக் கிடைக்கும் வகையில் அவர்கள் செய்திருக்கவேண்டும். இதுவரை செய்யவில்லை. மாலியிலிருக்கும் தண்ணீர்ப் பிரச்னைகள், அதை வாங்க முடியாமல் போவது போன்ற காரணங்களால் அங்கு 10 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை இறந்துகொண்டிருக்கிறது.

நிலம் கையகப்படுத்துதல், தண்ணீர் தனியார்மயம் என்று இரண்டையுமே மாலியின் குடிமக்கள் அனுபவித்து வருகின்றனர். அதுவும் அதன் அண்டை நாடான நைஜரும் ஏழை நாடுகள். தண்ணீரை விலைகொடுத்து வாங்குமளவுக்கு அந்த மக்களின் நிதிநிலை இல்லை. இருப்பினும் அவர்களிடம் தண்ணீர் தனியார்மயமாக்கப்பட்டு விற்கப்படுகின்றது. வேறுவழியின்றித் தங்கள் வருமானத்தில் பாதியை அடிப்படைத் தேவைக்காகச் செலவு செய்துவருகிறார்கள். இது மோசமான விளைவுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. அவர்கள் ஏன் தண்ணீரை விலைகொடுத்து வாங்கவேண்டும்?

அங்குதான் மேலைநாடுகளின் தந்திரம் வேலைசெய்கிறது. அந்நாடுகளுக்கு உலக வங்கியிலிருந்தும் சர்வதேச நிதியத்திலிருந்தும் கடன்கள் தரப்பட்டுள்ளன. ஒரேயொரு நிபந்தனையின்பேரில்.

அதாவது அவர்களின் அன்றாடப் பயன்பாட்டுப் பொருள்களை தனியார் விற்பனைக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே அந்த நிபந்தனை, தண்ணீர் உட்பட. தண்ணீர் தனியார்மயம் என்பது ஜி-8 நாடுகளின் மிக முக்கியமான நிபந்தனையாக முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1992 முதல் இதுவரை பெரியளவிலான ஆறு தனியார்மய ஒப்பந்தங்கள் தென்னாப்பிரிக்காவோடு கையெழுத்திடப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலானது பிரான்ஸோடு. தண்ணீர் அடிப்படை உரிமையாக இருப்பதால் யாரெல்லாம் பயனடைவார்களோ அவர்கள் அனைவரும் இதனால் பாதிக்கப்பட்டார்கள், படுகிறார்கள். அவர்களின் அடிப்படை உரிமை நிராகரிக்கப்பட்டது. தண்ணீரைத் திருடவேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டார்கள். தண்ணீரை லாபத்துக்கு விற்கும் மாஃபியாக்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் உண்டு. ஆனால், அது அந்நாட்டு அரசாங்கத்துக்குத் தெரியவில்லை. இவர்களும் அதே வரிசையில் தண்டிக்கப்படுகிறார்கள். இறுதியில் நடந்ததெல்லாம் ஒன்று மட்டுமே. அந்த மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியானது. அதோடு அவர்களின் சுயமரியாதை மறந்து தண்ணீரைத் திருடவும் தொடங்கிவிட்டார்கள்.

இதே தனியார்மயம் கானாவில் (Ghana) ஏற்பட்ட பின்னர் அங்கு தண்ணீரின் சராசரி விலையே முன்பைவிட 95% அதிகரித்தது. அந்நாட்டு மக்கள் தொகையில் மூன்றிலொரு பங்கு மக்கள் இன்னமும் தண்ணீரின்றி அவதிப்பட்டு வருகிறார்கள். சுதந்திரம் அடைந்தவுடன் அந்நாட்டு அதிபர் கவாமே இன்க்ருமா (Kwame Nkrumah) தேசியமயமாக்கல் கொள்கையை அறிவித்தார். ஆனால், 1990-களில் வந்த உலகமயமாக்கலினால் அந்நாடு தனியார்மயக் கொள்கைக்குள் வலிய இழுக்கப்பட்டார்கள். ஏழை மக்களின் வாழ்க்கையை மோசமாக்குவது மட்டும் அதன் விளைவு இல்லை. பன்னாட்டு நிறுவனங்கள் அம்மக்களின் வளங்களைக் கொள்ளையடிக்கிறார்கள். அவர்களின் அடிப்படைத் தேவைகளை விற்பனைச் சரக்காக மாற்றுகிறார்கள். இது மக்களின் நிலையை மேலும் மோசமடையச் செய்கிறது.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் நெஸ்ட்லே (Nestle). தண்ணீர்ச் சுரண்டலில் அனைத்துப் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தலைவரைப் போன்றது இந்நிறுவனம். அதற்கு உலகளவில் 67 தண்ணீர் பேக்கிங் தொழிற்சாலைகள் உள்ளன. நெஸ்ட்லே 130 நாடுகளில் தனது தண்ணீரை விற்பனை செய்கிறது. பாகிஸ்தானில் ப்ளூ பிரின்ட் தொழிற்சாலை (Blue-print Factory) என்ற வகை தொழிற்சாலையை உருவாக்கியது. அந்தவகைத் தொழிற்சாலைகளை அவர்களால் உடனடியாக உலகின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் கொண்டுசெல்ல முடியும். ஒருவேளை பாகிஸ்தானில் அவர்களுக்குத் தடைபோட்டால் அதை அப்படியே பிரித்தெடுத்துத் தூக்கிக்கொண்டுவந்து இந்தியாவில் நிறுவி விடுவார்கள். நிறுவனத்துக்கு எந்த நஷ்டமுமில்லை. நிம்மதியாக அடுத்த நாட்டிலிருக்கும் தண்ணீரைக் குடித்துக் கொள்ளலாம். ஆப்பிரிக்கா, தென்னமெரிக்கா போன்ற நாடுகளை, ``வளங்களை அவற்றின் அதன் இயல்பிலேயே எடுத்துக்கொள்ளக்கூடிய இடம்" என்றுதான் இவர்கள் அழைக்கிறார்கள். இப்போது நெஸ்ட்லே உலகின் ஒவ்வொரு கண்டத்திலும் தண்ணீரைத் தனக்குச் சொந்தமாகவும் வைத்துள்ளது. விற்பனையும் செய்கின்றது. தற்போது அவர்களின் பார்வை தென்னமெரிக்கா மீது!

- தொடரும்.