Published:Updated:

"முக்கொம்பு அணை..கொள்ளிடம் பாலம் மட்டுமல்ல இன்னும் இருக்கிறது!" - ஆற்று நீரும், மணல் கொள்ளையும்

"முக்கொம்பு அணை..கொள்ளிடம் பாலம் மட்டுமல்ல இன்னும் இருக்கிறது!" - ஆற்று நீரும், மணல் கொள்ளையும்
"முக்கொம்பு அணை..கொள்ளிடம் பாலம் மட்டுமல்ல இன்னும் இருக்கிறது!" - ஆற்று நீரும், மணல் கொள்ளையும்

ந்த வருடம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர் திறக்கப்பட்டதும், 'விளைச்சல் அமோகமாக இருக்கப் போகிறது' என்று கனவு காணாத தமிழக விவசாயி யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால், இந்த கனவு பொய்யாகப் போகிறது என்பதை உணர்த்துகிறது ஒரு சில நிகழ்வுகள். 84 வருட பழைமையான மேட்டூர் அணை இவ்வருடம் 39வது முறையாகத் தனது முழுக் கொள்ளளவை எட்டி இருக்கிறது. இருந்தும் என்ன பயன் என்று தான் கேட்கத் தோன்றுகிறது?

கடந்த இரண்டு வருடங்கள் காவிரிக்காக நடந்த பிரச்னைகளையும், போராட்டங்களையும் ஒரு நிமிடம் கண்முன் நிறுத்தி யோசித்துப் பாருங்கள். எவ்வளவு போராட்டம், எத்தனை முறை நீதிமன்ற களம், எத்தனைக் கலவரங்கள். ஆனால், கடந்த மாதம் தமிழகத்தில் காவிரி தண்ணீர் பெரும்இரைச்சலுடன் புகுந்தது. ஒகேனக்கலில் ஐந்தருவியே தெரியாத அளவுக்கு நீர் பெருக்கெடுத்தது. இந்த நிலையில் காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு வந்து ஒருமாதம் ஆகும் முன்னரே பல இடங்களில் குறிப்பாக காவிரி நீர் செல்லும் கடைமடைப் பகுதிகளில் நீர் வறண்டு விட்டது. ஆற்றில் கரை தெரியுமளவுக்குத் தண்ணீர் வற்றிவிட்டது. இதில், இன்னும் கொடுமை கடைமடைப் பகுதிகளின் வாய்க்கால்களுக்குக் காவிரி நீர் இன்றுவரை எட்டிப்பார்க்கவில்லை. முன்னரே தூர்வாராததாலும், புதர்மண்டிக்கிடப்பதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புலம்பித் தீர்க்கின்றனர். 'இன்னும் விதையே போட்ட பாடில்லை, அதற்குள் தண்ணீர் எல்லாம் வறண்டு விட்டால் விளைச்சலுக்கு என்ன செய்வது?' என்ற புலம்பல்கள் மீண்டும் நம் டெல்டா விவசாயிகளிடம் எழத் தொடங்கிவிட்டன. சரி.. ஆற்று தண்ணீர் தான் கடலோடு கலந்தது, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து இருக்குமா என்று யோசித்தால் அதிலும் பல கேள்விக்குறிகளே மிச்சம் இருக்கிறது. 

சமீபத்தில் முக்கொம்பு மேலணையில் உடைந்து விழுந்த 9 மதகுகள் பற்றி பலரும் வைக்கக்கூடிய முக்கியக் குற்றச்சாட்டு, 'கட்டுப்படுத்த முடியா வண்ணம் நடந்த மணல் கொள்ளையே' என்பது. உண்மையில் காவிரி நீர் விவகாரத்தில் 'மணல் கொள்ளை' மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியிருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை. மணல் கொள்ளையில் இருந்து எந்த தமிழக ஆறுகளும் தப்பிக்கவில்லை என்பது வேறு விஷயம்.

வெறும் முக்கொம்பு அணை மதகுகள் உடைப்பு, கொள்ளிடம் இரும்புப் பாலம் உடைப்போடு மணல் கொள்ளையின் லீலைகள் நின்றுவிடவில்லை. ஆற்றுப் படுகைகளின் நாளங்கள் அறுக்கப்பட்டதன் விளைவுகள் இனி நிறையவே தெரியவரும்.

ஆற்றுக்குப் பக்கத்தில் வீடு இருக்கும் பலரும் ஒரு விஷயத்தை மறந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் அனைவருக்கும் ஆற்று நீரில் ஊற்று எடுத்து தாகம் தனித்த அனுபவம் நிச்சயம் இருக்கும். ஆற்றுப்படுகையில் எங்கு குழி தோண்டினாலும் தண்ணீர் ஊற்றெடுத்து வரும். நம் இன்று Purifier (சுத்திகரிப்பு) போட்டு குடித்தாலும் அத்தனை சுத்தமான தண்ணீர் கிடைக்க வாய்ப்பே இல்லை. ஆறுகளில் உள்ள ஊற்றில் இருந்து அப்படிப்பட்ட தூய்மையான தண்ணீர் கிடைத்ததற்குக் காரணம் இன்று இவர்கள் வாரிச்சுருட்டியுள்ள ஆற்று மணல்தான். ஆற்று மணலை எப்போதும் 'இயற்கை வடிகட்டி' என்று குறிப்பிடுவதுண்டு. அதற்குக் காரணம் ஆற்றின் மேற்பரப்பு மணலில் எப்போதும் அதிகளவில் இருக்கும் உறிஞ்சக்கூடியத் துளைகள்தான் (Porosity). இதன் காரணத்தால் ஆற்று நீர் அவ்வளவு சீக்கிரம் ஓடிவிடமால் இந்தத் துளைகள் நீரின் போக்குவரத்தைத் தடுத்து நெடுக இழுத்துக் கொள்ளும். இதனால், கடலுக்கு ஓடிச் சேரும் நீரின் வேகமும், நேரமும் குறைந்து நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

சொல்லப் போனால் இந்த மணல்தான் ஆற்றுக்கான பெருமையை இத்தனை நாட்கள் தாங்கிப்பிடித்து வந்திருக்கின்றன. 'ஆற்றில் நீர் வந்தால் கிணற்றில் நீர் ஊரும்' என்று சொல்வார்களே, அதற்குக் காரணமும் இந்த மணல்பரப்புதான். 1000 அடிக்கு போர் போட்டாலும் நீரே வராத தற்போதைய நிலையில் ஊற்று தண்ணீரைப் பற்றி பேசினாலே முட்டாள்களாகத்தான் தெரிவோம். இதில் எங்கே கிணற்றில் ஊற்று எடுப்பது எல்லாம். ஆற்றில் தண்ணீர் வந்தால் குளம், குட்டை, கண்மாய் எல்லாம் நிரம்பும் என்று சொல்வார்கள். ஆனால், அவையும் பெரிய அளவில் நிரம்பியபாடில்லை. சொல்லப் போனால் பெருக்கெடுத்த ஆற்று நீர் கடைமடை விவசாயிகளுக்கு பெரும் பயன் எதுவும் தரவில்லை என்பதே உண்மை.

ஆற்று நீரை உபயோகப்படுத்தும் வகையில் நம்மிடம் அதிகளவில் தடுப்பணைகள் இல்லாததும், காசுக்கு கூறுபோடப்பட்ட ஆற்று மணலும்தான் இன்றைய நிலைக்கு முக்கியக் காரணம். காவிரியை வைத்து நூற்றாண்டு காலமாக அரசியல் செய்யும் அரசாங்கங்கள், கர்நாடகாவிடம் இருந்து போராடி தண்ணீர் வாங்குவது மட்டும் சாதனை இல்லை. நீர் மேலாண்மையுடன் அதைக் கடை மடை விவசாயிகளுக்குக் கொண்டுச் சேர்ப்பதும், சேமித்து வைப்பதும்தான் முக்கிய சாதனை.