Published:Updated:

``குடும்பத்தோடு ஒண்ணாப் புகைப்படம் எடுத்து 18 வருஷமாச்சு!" - சூழலியல் போராளி முகிலன்

``மக்கள் எக்காலத்திலும் வன்முறையில் இறங்கியதில்லை. ஒருவேளை மக்கள் வன்முறையில் இறங்கியிருந்தால் இங்கு அரசாங்கமே இருந்திருக்காது!”

``குடும்பத்தோடு ஒண்ணாப் புகைப்படம் எடுத்து 18 வருஷமாச்சு!" - சூழலியல் போராளி முகிலன்
``குடும்பத்தோடு ஒண்ணாப் புகைப்படம் எடுத்து 18 வருஷமாச்சு!" - சூழலியல் போராளி முகிலன்

`சரியா 373 நாள்கள் சிறையில் இருந்தாச்சுங்க' என்று பேச்சைத் தொடங்குகிறார் சூழலியலாளர் தோழர் முகிலன். `தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கான உபயோக நீர் சட்ட விரோதமாக நிலத்தடி நீரிலிருந்து கொள்ளையடிக்கப்படுகிறது' என்றுகூறிப் போராடிய முகிலன் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு, என்ன வழக்கு போடுவதென்றே தெரியாமல் ஒவ்வொரு காவல்நிலையமாக நள்ளிரவில் அலைக்கழிக்கப்பட்டு, பிறகு 13 வழக்குகள் பதியப்பட்டு மதுரை மத்திய சிறைச்சாலையில் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டார். அனைத்து வழக்குகளிலும் பிணை கிடைத்து நேற்று சிறையிலிருந்து வெளியே வந்த அவரிடம் பேசியதிலிருந்து…

``ஒரு வருடச் சிறை வாழ்க்கை, அதுவும் தனிமைச் சிறை, மனதளவில் ஒருவரைப் பலவீனப்படுத்தும் என்கிறார்களே?"

``நிச்சயம். ஒரு மனிதன் தொடர்ந்து 20 நாள் தூங்கவில்லை என்றால் என்ன ஆகும்? ஒரு மனிதனுக்கு முழுமையான உறக்கம் ஒரு வருடத்துக்கும் மேலாகக் கிடைக்கவில்லை என்றால் என்ன ஆகும்? அத்தனையும் எனக்குத் தற்போது இருக்கிறது. தனிமைச்சிறையில், போட்டிருக்கும் வெள்ளைச் சட்டை சிகப்பாகும் அளவுக்குக் கொசுக்கடிக்கும். ஒவ்வொரு முறை நீதிமன்றத்துக்குச் செல்லும்போதும் நீதிபதியிடம் கொசுக்கடித்த சட்டையைக் காண்பிப்பேன். சிறையில் கைதிகளுக்கு மட்டுமல்ல, சில சமயம் சிறைக்காவலர்களுக்குக்கூடப் பாதுகாப்பு இருப்பதில்லை. அங்கே எந்த ஒரு விஷயமும் சிறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் நடப்பதில்லை. அவர்கள் சிறையை யாருக்குச் சார்பாகவும் நடத்தவேண்டாம். ஆனால், சிறைவிதிகளின்படி நடத்தினாலே போதும். அதைக்கூட அவர்கள் செய்வதில்லை. இதுவரை பத்துமுறை சிறைக்குச் சென்றிருக்கிறேன், அந்த அடிப்படையில் சிறைகளுக்கான 25 கோரிக்கைகளை நீதிபதியிடம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புவோம்".

``போராளிகளும், போராட்டங்களும் ஜனநாயக ரீதியாக நடப்பதில்லை என்று அதிகாரத்தரப்பு குற்றச்சாட்டு வைக்கிறதே?"

``ஜல்லிக்கட்டுப் போராட்டம் முடிவுக்கு வந்ததும், தமிழக முதல்வராக அப்போது இருந்த ஓ.பன்னீர்செல்வம், `போராடியவர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும்' என்றார். ஆனால், நான் வரும் அக்.5-ந் தேதி அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்காக சி.பி.சி.ஐ.டி தொடர்ந்த வழக்கில் ஆஜராகவுள்ளேன். 8 வழிச் சாலை திட்டத்தால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று முதலில் தெரிவித்தனர். ஆனால், அவர்கள்தான் தற்போது பல போராட்ட எதிர்ப்புகளுக்குப் பிறகும் அந்தத் திட்டத்தைத் திரும்பப்பெறாமல் மாற்றி அமைத்திருக்கிறார்கள். ஸ்டெர்லைட் போராட்டத்தில் பொதுமக்கள் ஜனநாயக ரீதியாக, முறையாக அனுமதி கேட்டுத்தான் ஒன்று கூடினார்கள். ஆனால், அவர்கள் மீது நியாயமற்ற முறையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதனால்தான், இன்றுவரை துப்பாக்கிச் சூட்டுக்கு ஆணை பிறப்பித்தது யார் என்பது பற்றி அரசு மூச்சுவிட மறுக்கிறது. மணல்கொள்ளையைத் தடுக்கச் சென்ற என்னை 10 பேர் கொண்ட கும்பல் காரில் வைத்தே தீர்த்துக்கட்ட முயற்சி செய்ததை காவல்துறையினரிடம் புகாராக அளித்தபோது, என்னைக் கொலை செய்ய வந்தவர்களிடமே பதில் புகார் பெற்றுக்கொண்டு என் மீது வழக்குப் பதிவு செய்தார்கள். அரசாங்கம்தான் கொள்ளைக்கும், கொலைக்கும் துணை போகிறது. `போராளிகளை எதிர்க்கிறேன்' என்கிற பெயரில் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்காக, எங்கள் மீது அச்சுறுத்தல் விடுக்கிறது. மக்கள் எக்காலத்திலும் வன்முறையில் இறங்கியதில்லை. ஒருவேளை மக்கள் வன்முறையில் இறங்கியிருந்தால் இங்கு அரசாங்கமே இருந்திருக்காது".

``ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அவர்கள் நிலத்தடி நீரைக் கொள்ளையடிப்பதாகப் போராடிக் கொண்டிருந்தபோதுதான் நீங்கள் கைது செய்யப்பட்டீர்கள். பிறகு அது பெரிய அளவிலான மக்கள் போராட்டமாக வெடித்ததையும் ஆலை நிரந்தரமாக மூடி `சீல்’ வைக்கப்பட்டதையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?”

``போராட்டம் குறித்த தகவல்களை என்னைச் சிறையில் சந்திக்க வந்த நபர்கள் அவ்வப்போது எனக்குத் தெரியப்படுத்தினார்கள். ஆலை மூடப்பட்டாலும் மக்கள் போராட்டம் இன்னும் முடியவில்லை. ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிய பேரணியில் துப்பாக்கிச் சூடு இருக்கும் என்று முதல்நாளே என்னைச் சந்திக்க வந்தவர்கள் மூலம் சிறையிலிருந்து எச்சரித்தேன். இதுபோன்ற பேரணிகளில் அரசாங்கம் எந்தவகையில் அடக்குமுறைகளை ஏவிவிடும், வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடும் என்பதை உணர்ந்தவன் நான். என்றாலும், நான் போராட்டக்காரர்களை எச்சரிக்கை செய்தும் அவர்கள் மீது திணிக்கப்பட்ட துப்பாக்கிச் சூடு வன்முறையை என்னால் தடுக்க முடியவில்லை. வன்முறைக்கு எதிரான நீதியையும், நியாயத்தையும் அரசிடமிருந்து பெறாமல் எப்படிப் போராட்டம் நிறைவடையும்?".

``அடுத்து உங்கள் போராட்ட நகர்வுகள் எதைநோக்கி இருக்கும்?"

``இயற்கைவளக் கொள்ளை, கனிமவளக் கொள்ளை, வாழ்வாதாரக் கொள்ளை மற்றும் மாநில எல்லைக்கோடுகள் கொள்ளையடிக்கப்படுவதற்கு எதிராக மக்களை, ஒரு அமைப்பாய் உருவாக்குவதை நோக்கி..."

``குடும்பத்தைச் சந்தித்து விட்டீர்களா?"

``இனிமேல்தான் சந்திக்க வேண்டும். எனக்கும் என் மனைவி பூங்கொடிக்குமான திருமணம் வித்தியாசமான முறையில் நடைபெற்றது. `தனி நலனைக் குடும்பநலனுக்காக அர்ப்பணிப்பது குடும்பநலனைச் சமுதாய நலனுக்காக அர்ப்பணிப்பது' என்கிற உறுதிமொழியை ஏற்றுக்கொண்டுதான், நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். சிறையில் இல்லாத நாள்களிலும் மக்கள் போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் அவ்வப்போதுதான் வீட்டுக்குச் செல்வேன். நான் சிறையில் அடைக்கப்பட்ட மறுநாளே, என்னுடைய மனைவிக்கு விபத்து ஒன்றில் கால்முறிவு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்றுவந்தார். அதனால், அவரால் ஓராண்டாக என்னைச் சிறையில் வந்து சந்திக்க முடியவில்லை. என் மகன் மட்டும்தான் என்னைப் பார்த்துவிட்டுச் செல்வார். 18 ஆண்டுகளாக என்னிடமிருந்து எவ்வித உதவியும் இல்லாமல்தான், மனைவி பூங்கொடி எங்களுடைய குடும்பத்தைக் கவனித்து வந்தார். அவருடைய உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, உடனிருந்து கவனித்துக் கொள்ளமுடியவில்லையே என்கிற மனவருத்தம் இருக்கிறது. என்னைக் குடும்பத்தினர் நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள். உயர் கல்வியை வெளியூரில் படிக்கவேண்டும் என்று என் மகன் நினைத்திருந்தான். ஆனால், பொருளாதாரச் சூழல் மற்றும் குடும்பச் சூழல் காரணமாக, என்னால் உதவமுடியவில்லை. இறுதியாக 2000-வது ஆண்டில் என் மகனுக்கு இரண்டு வயது இருக்கும்போது, நாங்கள் குடும்பமாகச் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு சரி. 18 வருடங்களாக நாங்கள் சேர்ந்து ஒரு புகைப்படம்கூட எடுத்துக்கொள்ளவில்லை. மக்களுக்கான போராட்டங்கள், களப்பணிகள் என்று வரும்போது இதெல்லாம் பெரிதாகத் தோன்றவில்லை".