Published:Updated:

ஈரோடு: `வெட்டப்பட இருந்த 14 மரங்களுக்கு வாழ்வு!’ - தன்னார்வலர்களின் அசத்தல் முயற்சி

வேரோடு பிடுங்கப்பட்ட மரம்
வேரோடு பிடுங்கப்பட்ட மரம்

கட்டுமானதந்துக்கு இடையூறாக இருந்த பழைமையான 14 மரங்களை, வேரோடு பிடுங்கி வேறு ஓர் இடத்தில் நட்டு உயிர் கொடுத்திருக்கின்றனர் ஈரோட்டைச் சேர்ந்த தன்னார்வலர்கள்.

ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையை மேம்படுத்துவதற்காக நிதி ஒதுக்கப்பட்டு கூடுதல் கட்டடங்கள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. மருத்துவமனையின் பின்புறம் கட்டடம் கட்டத் திட்டமிட்டிருந்த இடத்தில் 14 பெரிய மரங்கள் இடையூறாக இருந்திருக்கின்றன. இந்த மரங்களை வெட்டிச் சாய்க்க மனமில்லாத பில்டிங் கான்ட்ராக்டர், இதற்கு மாற்று வழி ஏதேனும் இருக்கிறதா என யோசித்திருக்கிறார். அவருடைய யோசனைக்கு `ஈரோடு சிறகுகள்’ என்னும் அமைப்பினர் கை கொடுத்தது. இதையடுத்து, ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் வெட்டப்பட இருந்த 14 மரங்களும், வேறு இடத்தில் நடப்பட்டிருக்கின்றன.

மரம் அகற்றப்பட்ட போது
மரம் அகற்றப்பட்ட போது

இந்த முயற்சியை முன்னெடுத்த ஈரோடு சிறகுகள் அமைப்பின் தலைவர் விமல் கருப்பணனிடம் பேசினோம். ```ஈரோடு அரசு மருத்துவமனையின் பின்புறம் கட்டடம் கட்ட 14 மரங்கள் இடைஞ்சலாக இருக்கிறது. அதை வேறு இடத்தில் மாற்றி நட முடியுமா’ என ஆர்.ஆர் துளசி பில்டர்ஸ் உரிமையாளர் சக்தி எங்களிடம் கேட்டார். ஏற்கெனவே, ஈரோடு கனி மார்க்கெட்டில் இருந்த பழமையான அரச மரத்தை வேரோடு சிப்காட் பகுதிக்கு மாற்றி உயிர் கொடுத்திருக்கிறோம். அந்தவகையில், அரசு மருத்துவமனையில் உள்ள 14 மரங்களையும் அகற்றி, வேறு இடத்தில் நட்டுவிடலாம் எனச் சம்மதித்தோம். ஜூலை 11-ம் தேதி காலை 7 மணிக்கு வேலையை ஆரம்பித்தோம். ஒவ்வொரு மரத்தையும் அதன் வேரோடு சேர்த்து பத்திரமாகப் பிடுங்கியெடுத்தோம். அந்தவகையில் 13 வேப்பமரங்கள் மற்றும் ஒரு அரச மரத்தைப் பிடுங்கியெடுத்து வேறு இடத்தில் நடவு செய்ய இரவு 11.45 மணி ஆகிவிட்டது” என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``அரச மரத்தை ஈரோடு சாஸ்திரி நகரில் டீக்கடை உரிமையாளர் ஒருவரின் கண்காணிப்பிலும், 13 வேப்ப மரங்களை பூந்துறையிலுள்ள விவசாயி ஒருவரின் நிலத்திலும் நட்டிருக்கிறோம். மரம் பிடுங்கப்பட்ட இடத்திலிருந்து எடுத்துவரப்பட்ட தாய் மண்ணோடு பஞ்சகாவ்யா, மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு போட்டு தண்ணீர் விட்டு பராமரித்து வருகிறோம். இந்த மரங்களையும் சேர்த்து இதுவரை 145 மரங்களை இதேபோல இடம் மாற்றி நடவு செய்திருக்கிறோம். அதில் சுமார் 25 மரங்கள் வளராமல் பட்டுப்போக, மீதமுள்ள மரங்கள் நல்லபடியாக இருக்கின்றன. இப்படி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு மாற்றி வைக்கப்பட்ட மரங்கள் தழைச்சு வர்றப்பதான், எங்களுக்கு உயிரே வரும். ஒரு டாக்டர் ஆபரேஷன் பண்ணி ஒரு உயிரைக் காப்பாத்தின மாதிரி மனசுக்குள்ள பெருமையா இருக்கும்.

வேரோடு எடுத்துச் செல்லப்பட்ட மரம்
வேரோடு எடுத்துச் செல்லப்பட்ட மரம்
ஒரே நாள்... 250 அமைப்புகள்... 
25 லட்சம் பனை விதைகள்...

ஒரு மரத்தை வெட்டுறதுக்கு முன்னாடி, அதற்கு மாற்று வழி இருக்கான்னு மக்கள் யோசிக்கணும். அசால்ட்டா 50 வருஷ மரத்தை நாம வெட்டிச் சாய்க்கிறோம். அந்த மரம் அதன் காலத்தில் எவ்வளவு ஆக்சிஜன் கொடுத்திருக்கும். மனிதர்களுக்கு நிழலையும், பல்வேறு உயிர்களுக்கு வாழ்விடமாகவும் இருந்திருக்கும். இப்படி மரத்தின் பெருமையறிந்த நாங்கள் எங்களுடைய ஈரோடு சிறகுகள் அமைப்பின் மூலமாக இதுவரை 1,52,000 மரங்களை நட்டிருக்கிறோம். 2 லட்சம் விதைப் பந்துகளை தூவியிருக்கிறோம். மரங்களை நட்டுவந்த நாங்கள், வளர்ந்த மரங்கள் வெட்டப்படாமலும் காத்து வருகிறோம். சம்பந்தப்பட்டவர்கள் ஜே.சி.பி இயந்திரம் மற்றும் உபகரணங்களைக் கொடுத்தால் ஈரோடு மாநகருக்குள் இப்படி மரங்களை பணம் வாங்காமல் இடம் மாற்றித் தரத் தயாராய் இருக்கிறோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு