Published:Updated:

நீர்ப்பாசன மேலாண்மை சட்ட வழக்கு! தமிழக பொதுப்பணித்துறை செயலருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

நீர்ப்பாசன மேலாண்மை சட்ட வழக்கு! தமிழக பொதுப்பணித்துறை செயலருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
நீர்ப்பாசன மேலாண்மை சட்ட வழக்கு! தமிழக பொதுப்பணித்துறை செயலருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன மேலாண்மை அமைப்புச் சட்டத்தின் கீழ் தேர்தலை நடத்தக் கோரிய வழக்கில் தமிழக பொதுப்பணித்துறைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மதுரை மேலூரைச் சேர்ந்த ஸ்டாலின் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ``தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன மேலாண்மை அமைப்புச் சட்டம் கடந்த 2000-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் நடத்தப்பட்டு தலைவர், செயலர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்தலுக்கான அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முறையாகச் செய்து, ரகசிய வாக்குப் பதிவைப் பெற்று தேர்தலை நடத்த வேண்டும். இந்த அமைப்பே, நீர் மேலாண்மை, நீர்பங்கீடு, நீர்பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த அமைப்பு நீரைப் பயன்படுத்துவோர் சங்கம், நீர்பங்கீட்டுக்குழு, திட்டக்குழு என மூன்று நிலைகளாக இயங்கும். ஆனால், இந்த அமைப்பு தமிழகத்தில் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை. இதனால் நீர் மேலாண்மை உள்ளிட்டவை தன்னிறைவு அடையமுடியவில்லை. ஆகவே, தமிழகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன மேலாண்மை அமைப்புச் சட்டத்தின் கீழ் தேர்தலை நடத்தி 3 குழுக்களையும் அமைக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து தமிழக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.