Published:Updated:

கஜா புயல்: தற்போது எப்படியிருக்கின்றன பாதிக்கப்பட்ட கிராமங்கள்?

``கீரைகளையும், காய்கறிகளையும் சந்தைகளில் பார்க்க முடியவில்லை. அப்படியே தப்பித்தவறி காய்கறிகள் வரத்து இருந்தாலும் யானை, குதிரை விலைக்கு விற்கப்படுகிறது. உணவுப்பொருள்கள் கிடைக்காததால், பல வீடுகளில் வத்தல் குழம்பு, கருவாட்டுக் குழம்பு, மீன் குழம்பு, ரசம் போன்ற உடனடிக் குழம்பு வகைகளே சமைக்கப்படுகின்றன."

கஜா புயல்: தற்போது எப்படியிருக்கின்றன பாதிக்கப்பட்ட கிராமங்கள்?
கஜா புயல்: தற்போது எப்படியிருக்கின்றன பாதிக்கப்பட்ட கிராமங்கள்?

காவிரி டெல்டா மாவட்டங்களை கஜா புயல் சூறையாடி, கிட்டத்தட்ட ஒரு மாதத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், இன்னும் அந்த மாவட்டங்கள் முழுமையான அளவில் மறுகட்டமைக்கப்படாமல் இருள் சூழ்ந்தே கிடக்கின்றன. குறிப்பாக, திருவாரூர் மாவட்டத்துக்குட்பட்ட பல கிராமங்கள் அரசின் எந்த உதவியும் முழுமையாகக் கிடைக்கப் பெறாமல் பரிதவிப்பில் இருக்கின்றன. அரசாங்கமும், பிற அமைப்புகளும் செய்யும் உதவிகள் பெரும்பாலும் அதிகளவில் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கே கிடைப்பதால், ஓரளவு பாதிப்புக்குள்ளான பல கிராமங்கள் இன்னும் புயலின் கோரத் தாண்டவத்திலிருந்து மீளாமல் சிக்கித் தவிக்கின்றன. ஏதோ அந்தக் கிராமத்திலிருந்து வெளியூர் சென்றிருக்கும் நபர்கள், தங்களின் நண்பர்கள் மூலமாக வசூலித்து அனுப்பும் சிறு சிறு உதவிகளே அவர்களுக்குக் கிடைத்துவருகிறது. அதிலும், முந்துபவர்களுக்கே. பாதிக்கப்பட்ட சில கிராமங்களில் விவரமறிவதற்காகப் படையெடுத்தோம்...

எடையூரைச் சேர்ந்த சதீஷ், ``திருவாரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை திருத்துறைப்பூண்டி வட்டத்தைச் சேர்ந்த கிராமங்களும், முத்துப்பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த கிராமங்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளுக்குப் பார்வையிட வரும் அதிகாரிகள் பலரும் மெயின் ரோட்டிலேயே பார்வையிட்டுச் சென்றுவிடுவதால், உள்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குள் வீடுகளும், தோட்டங்களும், நிலங்களும் பாதிக்கப்பட்டிருப்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. கூரையில்லாத குடிசைகள், ஓடில்லாத வீடுகள், சிமென்ட் (Asbestos) மற்றும் தகரம் வேய்ந்த (Roofing Sheet)  கூரைகள் என அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. அரசாங்க உதவியுடன் கட்டப்பட்ட தனி நபர் கழிப்பறைகளில் பொருத்தப்பட்ட மேற்கூரைகளும், கதவுகளும் கஜா புயலில் அடித்துக்கொண்டுபோனதால், மீண்டும் திறந்தவெளியில் மலம் கழிக்கும் சூழ்நிலைக்கு அந்தக் கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். சிமென்ட் ஷீட்களோ சுக்குநூறாக உடைந்துவிட்டன. தகர ஷீட்களோ குளம், குட்டைகளில் தூக்கியெறியப்பட்டு காணாமல் போய்விட்டன. பாட்டி, பாட்டன் காலத்தில் வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் வேரோடு சாய்ந்திருப்பதால், வீடுகளைச் சரிசெய்யும் பணிகள் பெரிதாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் வீட்டுக்கு வெளியிலேயே சமைக்க வேண்டியிருக்கிறது" என்றார். 

ஆரியலூரைச் சேர்ந்த ஐயப்பன், ``எங்கள் ஊரில் மட்டுமல்ல... இந்த ஊரைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் மின்சார வசதி முழுமையாகக் கிடைக்கவில்லை. குறிப்பாக, இங்கிருக்கும் நபர்கள் வெளியூரில் இருக்கும் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் பேசுவதற்காக  செல்போனில் சார்ஜ் செய்வதற்கு (இன்வெர்ட்டர்) பல கிலோ மீட்டர் தூரம் பயணிக்கின்றனர். ஒரு செல்போன் சார்ஜ் செய்வதற்கு ரூ.25 வசூலிக்கப்படுகிறது. அதற்கும் நீண்டவரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இதனால், சில சமயங்களில் செல்போன் வெடிக்கும் சம்பவங்களும், செல்போன் மற்றும் சார்ஜர்களை மாற்றியெடுத்துக்கொண்டு போகும் நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன. இரவு 10 மணி வரை நடமாடிக்கொண்டிருந்த இந்தப் பகுதி மக்கள் மின்சாரம் இல்லாததால் இரவு 7 மணிக்குள்ளேயே வீட்டில் முடங்கிவிடுகின்றனர். மாடிவீடுகள் முதல் தற்காலிகச் சிறு குடிசைகள்வரை என அனைத்திலும் இருள்சூழ்ந்திருப்பதால், அந்த வீடுகளில் எல்லாம் மெழுகுவத்தியின் வெளிச்சமும், மண்ணெண்ணெய் விளக்குகளின் ஒளியுமே தெரிகிறது" என்றார், சற்றே ஆதங்கத்துடன்.

கடுவெளியைச் சேர்ந்த ஆறுமுகம், ``எங்கள் பகுதியில் முற்றிலும் மின்சாரம் இல்லாததால் மிக்‌ஸி, கிரைண்டர் பிடித்த கரங்கள் எல்லாம் ஆட்டுக்கல்லையும், அம்மிக்கல்லையும் தேடி ஓடுகின்றன. சில வீடுகளில் மாவு அரைக்க வசதி இல்லாததால் இட்லியையும், சட்னியையும் பார்க்க முடியவில்லை. அதுபோல் கீரைகளையும், காய்கறிகளையும் சந்தைகளில் பார்க்க முடியவில்லை. அப்படியே தப்பித்தவறி காய்கறிகள் வரத்து இருந்தாலும் யானை, குதிரை விலைக்கு விற்கப்படுகிறது. உணவுப்பொருள்கள் கிடைக்காததால், பல வீடுகளில் வத்தல் குழம்பு, கருவாட்டுக் குழம்பு, மீன் குழம்பு, ரசம் போன்ற உடனடிக் குழம்பு வகைகளே சமைக்கப்படுகின்றன" என்றார் சற்றே வேதனையுடன். 

இப்படிச் சரியான உணவில்லாமல் தவிக்கும் மக்கள் ஒருபுறம் என்றால், மறுபுறம் சுற்றுப்புறச் சூழலாலும், சுகாதாரக் கேட்டாலும் அவதிப்படுகின்றனர் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள். ஆங்காங்கே விழுந்த மரங்களில் இன்னும் பெருமளவு அகற்றப்படவில்லை. இவை தவிர, காற்றில் அடித்துவரப்பட்ட குப்பைகளும் குவியல் குவியலாய்க் கிடக்கின்றன. மேலும், பள்ளமாய் உள்ள பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், கொசுக்கள் அதிக அளவில் பரவுகின்றன. கொசுவத்தி இல்லாமல் தூங்க முடியாத நிலைக்கு மக்கள் அன்றாடம் அவஸ்தைப்படுகின்றனர். இதை மையமாகவைத்தும், நிவாரண உதவிகளை அரசாங்கம் உடனே செய்யவேண்டும்; மின்சாரம் உடனே வழங்கிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வைத்து அந்தப் பகுதி மக்கள் நாள்தோறும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதைப் பார்க்கும்போது நமக்கே வேதனையாகத்தான் இருக்கிறது.

அதிகாரிகளும், ஆதரவளிக்கும் உள்ளங்களும் பாதிக்கப்பட்ட இதுபோன்ற கிராமங்களையும் கண்டுகொள்ள வேண்டும் என்பதுதான் பலருடைய குரலாக இருக்கிறது.