Published:Updated:

நாளொன்றுக்கு 1,000 டன் குப்பைகள்! சுகாதாரச் சீர்கேட்டால் அவதிப்படும் கோவை மக்கள்!

நாளொன்றுக்கு 1,000 டன் குப்பைகள்! சுகாதாரச் சீர்கேட்டால் அவதிப்படும் கோவை மக்கள்!
நாளொன்றுக்கு 1,000 டன் குப்பைகள்! சுகாதாரச் சீர்கேட்டால் அவதிப்படும் கோவை மக்கள்!

நாளொன்றுக்கு 1,000 டன் குப்பைகள்! சுகாதாரச் சீர்கேட்டால் அவதிப்படும் கோவை மக்கள்!

மேற்குத் தொடர்ச்சி மலையின் மெல்லிய காற்றையும், சிறுவாணி ஆற்றின் சிறப்பான சுவையையும் கொண்டிருக்கும் கோவை நகரம், தற்போது வெள்ளலூர் குப்பைக்கிடங்கினால் சுகாதாரச் சீர்கேட்டுக்கு ஆளாகியிருக்கிறது.

``உலக அளவில் கழிவுகளின் மேலாண்மைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இந்தியாவில் அதன் நீட்சியாகவே திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2000-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டன. ஆனால், 2003-ல் வெள்ளலூரில் இந்தக் குப்பைக்கிடங்கு நிறுவப்பட்டபோது அந்த விதிகள் எல்லாம் காற்றில் பறந்துபோய்விட்டன. DTCP அங்கீகாரம் பெற்ற இருப்பிடங்கள், அதைத் தொட்டுநிற்கும் குட்டையான காம்பவுண்ட் சுவர், அதற்குள் குவிந்திருக்கும் குப்பைக் குவியல்கள் என அனைத்தும் மீறப்பட்ட விதிகளுக்குச் சான்றாக இருக்கின்றன. மொத்த மாநகரத்தின் குப்பையையும் குவித்துவரும் அந்தக் குப்பைக்கிடங்கை நீக்க வலியுறுத்தி இங்குள்ள மக்கள் பலரும் தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனாலும் எந்தப் பயனும் இல்லை. வியாதி மட்டுமே மிஞ்சுகிறது" என்கின்றனர், அங்குள்ள குடிசைவாசிகள்.

அந்த ஊரைச் சேர்ந்த ராஜேஷ்வரி, ``லட்சக்கணக்கில் செலவுசெய்து இந்த மாடி வீட்டை, மிகுந்த ஆசையுடன் என்னுடைய கணவரும் நானும் கட்டிமுடித்தோம். இதிலிருந்து வரக்கூடிய வாடகையை வைத்து எங்களது கடைசிக்காலத்தை கழிக்கலாம் என்றெண்ணி இருந்தோம். ஆனால், இங்குக் கொட்டப்படும் குப்பைகளால் எங்கள் கனவே தகர்ந்துபோய்விட்டது. இங்குவந்து வீடுகளைப் பார்ப்போர், பின்னணியில் இருக்கும் இந்தக் குப்பை மலையைப் பார்த்துவிட்டு வந்த வழியே சென்றுவிடுகின்றனர். எங்களுடைய மகள்களும் இங்கு வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். காரணம், இங்கு வருகிற நீரினைப் பயன்படுத்தினால் அவர்களுக்கு அலர்ஜி ஆகிறது. எங்களுக்கும் அலர்ஜி ஏற்படுகிறது. ஆண்டுக்கு, பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் அதிகமாக வரி செலுத்துகிறோம். ஆனால், அதற்கேற்ற வசதிகள் எதுவுமில்லை. இந்த நிலை எப்போதுதான் மாறப்போகிறதோ" என்றார், சற்றே வேதனையுடன். 

வெள்ளலூர் மக்களின் சுகாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிய இந்தக் குப்பைக்கிடங்கினை எதிர்த்து அங்கு ஓர் எதிர்ப்புக் குழுவும் செயல்படுகிறது. அந்தக் குழுவைச் சேர்ந்த டேனியல், ``இங்கு, நாளொன்றுக்குக் கிட்டத்தட்ட 1,000 டன் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால், இயற்கைச் சூழல்களுக்கு மட்டுமல்லாது, இங்கு வாழும் மக்களுக்கும் பலவிதங்களில் நோய்த்தொற்று ஏற்படுகிறது. ஈக்கள், கொசுக்களைத் தாண்டி நாய்களின் எண்ணிக்கையும் அச்சுறுத்தும் அளவுக்கு அதிகரித்துவிட்டது. இந்தப் பகுதியில் நீர் மாசுபாட்டால் கிட்னி பாதித்தவர்களும், காற்று மாசினால் ஆஸ்துமா வந்தவர்களும் அதிகம் இருக்கின்றனர். குப்பைக்கிடங்கின் முறையற்ற மேலாண்மையும் நிர்வாகமுமே இத்தகைய பாதிப்புகளுக்கான முக்கியக் காரணமாக இருக்கிறது. உதாரணத்துக்கு, இந்தக் கிடங்கில் மர்மமான முறையில் அடிக்கடி தீ பிடிப்பதுண்டு. இதற்குக் காரணமாகக் கழிவுகளிலிருந்து வெளியேறும் மீத்தேன்மீது அதிகாரிகள் பழிசுமத்தி, அவர்களைத் தற்காத்துக் கொள்கின்றனர். மேலும், மக்களிடமிருந்து குப்பைகளைத் தரம் பிரித்து வாங்கிவந்து இங்குவைத்து உரம் தயாரிக்க வேண்டும். ஆனால், அவை நடப்பதற்கான குறியீடுகள் எதுவுமே இங்கில்லை.

இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்டபோதும், அதற்கான கோப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்தக் கிடங்குக்குள் என்னென்ன எடுத்து வரப்படுகின்றன, அவற்றைவைத்து முறையாக உரம் தயாரிக்கிறார்களா அல்லது எப்படியேனும் அழித்துவிட வேண்டும் என்ற நோக்கில் அவர்களே தீவைத்துவிடுகிறார்களா உள்ளிட்ட கேள்விகளுக்கு இன்றுவரை விடை கிடைக்கவில்லை. பிரதமர் மோடிக்கு இதுகுறித்து கடிதம் எழுதினோம். அங்கிருந்து வரப்பட்ட கடிதத்தில், `உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' எனப் பதில் வந்தது. ஆனால், அதுவும் காகிதத்திலேயே தங்கிவிட்டதை நினைக்கும்போது மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது" என்றார், கவலையுடன். 

ம.தி.மு.க-வைச் சேர்ந்த ஈஸ்வரன், ``வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டிருந்தது. விமானங்கள் தரையிறங்கக்கூட இயலாத அளவுக்குக் கரும்புகை எங்கும் சூழ்ந்திருந்தது. மக்களும் வீடுகளைவிட்டு வீதிக்கு வந்து போராட்டங்களை நடத்தினர். அதே சமயம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்தக் குப்பைக்கிடங்கினை எவ்வித முறையான அனுமதியின்றி நிறுவியுள்ளனர் என்பதையும் கண்டறிந்தோம். அந்த முகாந்திரத்தில் 2013-ம் ஆண்டு இந்தக் குப்பைக்கிடங்கை நீக்க வலியுறுத்தி பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தோம். 650 ஏக்கரில் அமைந்துள்ள இந்தக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றியமைத்தலில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில்கொண்டு, பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில் முக்கியமாகக் கூறப்பட்டவை இரண்டு. முதலாவது, அடுத்த ஒரு வருடத்துக்குள்ளாக அங்கிருக்கும் 15.5 லட்சம் கனமீட்டர் அகற்றப்படாத பழைய குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். இரண்டாவதாக, நான்கு மாதங்களுக்குள் கோவை மாநகரம் முழுவதிலும், பரவலாகக் குறைந்தது 65 இடங்களில் குப்பைகளை அகற்றுவதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும். இவையல்லாது, நடைமுறைச் சிக்கல்களை எடுத்துவைப்பதற்கு ஏதுவாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் ஒரு குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இவை அனைத்தும் விரைந்து செயல்பட்டால் மட்டுமே இதற்கு வழிபிறக்கும்" என்றார், தீர்க்கமாக.

குப்பைகள் அகற்றப்பட்டு குடிசைவாசிகளைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையல்லவா?

அடுத்த கட்டுரைக்கு