Published:Updated:

13 வருடமாக தண்ணீரில்லாத கரூர் பஞ்சப்பட்டி ஏரி... தீர்வு சொல்லும்? மாணவர்களின் ஆய்வு!

ஏற்கெனவே இயற்கை அமைத்த வாய்க்கால்கள் மூலமா எளிதாக பஞ்சப்பட்டி ஏரிக்குத் தண்ணீர் கொண்டு போக முடியும். பஞ்சப்பட்டி ஏரியில நிரம்பி மீதமாகும் உபரி நீரை, புதுக்கோட்டை மாவட்டத்துக்கும் கொண்டுபோய், அங்கு தரிசா கிடக்கும் 28 ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கும் பாசனம் தர முடியும்.

13 வருடமாக தண்ணீரில்லாத கரூர் பஞ்சப்பட்டி ஏரி... தீர்வு சொல்லும்? மாணவர்களின்  ஆய்வு!
13 வருடமாக தண்ணீரில்லாத கரூர் பஞ்சப்பட்டி ஏரி... தீர்வு சொல்லும்? மாணவர்களின் ஆய்வு!

``நம்ம ஊரு ஏரி தமிழகத்திலேயே பெரிய ஏரியாமே சார்? இங்கிருந்து 17 கிலோ மீட்டர்லதான் காவிரி ஓடுது. இந்த வருஷம் அதுல மூணு லட்சம் கன அடி வரை தண்ணீர் போணுச்சு. ஆனா, இந்த ஏரியில ஏன் தண்ணீர் நிரம்பலை? இவ்வளவு பெரிய ஏரி வறண்டு கிடப்பதால, ஐம்பது கிராமங்கள்ல விவசாயத்துக்கும், குடிக்கவும் தண்ணீர் கிடைக்காம மக்கள் அல்லாடுறாங்களா சார்" என்று இரண்டு மாணவர்கள் அடுக்கடுக்காய் கேட்ட கேள்விகள், அரசுப் பள்ளி ஆசிரியரின் உதவியோடு தேசிய அளவிலான மாநாட்டுக்குத் தேர்வாகும் அளவுக்கான அசத்தல் ஆய்வைச் செய்யவைத்திருக்கிறது. "இதன்மூலம், எங்க ஊர் ஏரியின் நிலைமை மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்குப் போய், ஏரியில் தண்ணீர் நிரம்பப் போகிறது" என்று அந்தக் கிராம மக்களை புதுநம்பிக்கை கொள்ள வைத்திருக்கிறது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கிறது பஞ்சப்பட்டி. இந்த கிராமத்தில் 1,820 ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கிறது பஞ்சப்பட்டி ஏரி. தமிழகத்தில் மூன்றாவது பெரிய ஏரியான இந்த ஏரி, தற்போது பாலைவனமாக வறண்டு கிடக்கிறது. அதையொட்டி பஞ்சப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாவது படிக்கும் காயத்ரி, மணீஸ்வரர் என்ற மாணவர்களுக்கு எழுந்த ஐம்பது கேள்விகள், பஞ்சப்பட்டி ஏரிக்குத் தண்ணீர் கொண்டுவருவது சம்பந்தமான அசத்தல் ஆய்வைச் செய்ய வைத்தது. அந்த ஆய்வும் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்றதோடு தேசிய அளவிலான இரண்டு மாநாடுகளுக்குத் தேர்வாகிச் சிறப்புச் சேர்த்திருக்கிறது.

இதுபற்றி, வழிகாட்டு அறிவியல் ஆசிரியர் ஜெய்குமார் உதவியோடு இந்த ஆய்வை மேற்கொண்ட மாணவர்களான காயத்ரி மற்றும் மணீஸ்வரிடம் பேசினோம். ``எங்க அப்பாக்களெல்லாம் விவசாயிங்கதான். சொந்தமா நிலம் இருக்கு. ஆனா, பல வருஷமா விவசாயம் பார்க்காம கரூர்ல உள்ள டெக்ஸ்டைல்ஸுக்கு வேலைக்குப் போயிட்டு வர்றாங்க. எங்க ஊர்ல உள்ள மத்தவங்களும், பக்கத்தூருல உள்ளவங்களும் இப்படித்தான் விவசாயத்தை துறந்துட்டு, கரூருக்கு வேலைக்குப் போறாங்க. காரணம் கேட்டப்பதான், சுத்தியுள்ள பல கிராமங்களுக்கும் நீராதாரமா இருந்த பஞ்சப்பட்டி ஏரி, வறண்டு பாலைவனமா இருக்கிறதுதானு சொன்னாங்க. கடைசியா 2005-லதான் ஏரி நிறைஞ்சதாவும் சொன்னாங்க. உடனே, எங்க வழிகாட்டி ஆசிரியர் ஜெய்குமார்கிட்ட சொன்னோம். `தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி அனுமதியுடன் அதைப்பற்றி ஆய்வு பண்ணுவோம்'னு சொன்னார். `இந்த ஏரியில் நீர் நிரப்ப வழிவகை பண்ணணும்'னு பல வருஷமா கிராமப் பெரியவர்கள் போராடிக்கிட்டு வர்றாங்க. அதனால, இந்த ஏரி சம்பந்தமா நாங்க ஐம்பது கேள்விகள் தயார் பண்ணினோம். `இந்த ஏரி இங்கே ஏன் அமைஞ்சது, பஞ்சப்பட்டினு இந்த ஊருக்கு ஏன் பெயர் வந்தது, இந்த ஏரியைவெச்சு எப்படியெல்லாம் விவசாயம் நடந்தது'னு அந்த ஐம்பது கேள்விகளைத் தயார் பண்ணினோம். 


 

அந்தக் கேள்விகளைவெச்சு கிராம விவசாயிகளிடம் ஆய்வு பண்ணினோம். அப்போதான், 1837-ம் வருடம் இந்தப் பகுதியில கடுமையா மழை பேஞ்சு, வெள்ள நீரில் பஞ்சப்பட்டியும் சுற்றியுள்ள 25 ஊர்களும் மூழ்கிடுச்சாம். அதனால, அப்படி இயற்கை மழைநீரைத் தேக்கி, இந்தப் பகுதியைக் காப்பாத்த வெட்டப்பட்டதுதான் அந்த ஏரினு தெரிய வந்துச்சு. இந்தப் பகுதி, சுற்றியுள்ள 50 கிராமங்களுக்குப் பாசனம் தந்திருக்கு. 20,000 ஏக்கர் வரை பாசனம் தந்திருக்கு. இந்த ஏரியால கிராமப் பகுதிகளில் உள்ள கிணறுகளும், இதர குளங்களும் நிரம்பி இருக்கு. இந்தப் பகுதி வண்டல், கரிசல் மண்ணைக் கொண்டவை. அதனால, கரும்பு, நெல் நல்லா விளையுமாம். அதோட, இலவம் பஞ்சு இங்கே அதிகமாக விளைஞ்சு, அதனாலேயே கரூரில் டெக்ஸ்டைல்ஸ் தொழில் உருவாகி இருக்கு. பஞ்சு அதிகம் விளைஞ்ச ஊருங்கிறதால, ஊருக்கு பஞ்சப்பட்டினு பேர் வந்திருக்கு. ஆனா, எல்லாம் 2005-ம் வருஷத்தோடு முடிவுக்கு வந்துட்டு.

பஞ்சம் நிறைந்த ஊருங்கிறதால பஞ்சப்பட்டிங்கிறமாதிரி காரணம் மாறிட்டு. காரணம், தண்ணீரின்றி பஞ்சப்பட்டி ஏரி வத்திப்போனதுதான். இந்தப் பஞ்சப்பட்டி ஏரிக்கு மேற்கே 35 கிலோமீட்டர் தூரத்துல உள்ள வெள்ளியணைவரை வரும் குடகனாறிலிருந்து இந்த ஏரிக்கு தண்ணீர் வந்து நிரம்பி இருக்கு. ஆனால, குடகனாறிலிருந்து பஞ்சப்பட்டி ஏரிக்கு வரும் வாய்க்கால்கள் மூடப்பட்டிருக்கு. அதனால, பஞ்சப்பட்டி ஏரி வறட்சிக்கு உட்பட்டிருக்கு. அதனால, எங்க ஆய்வில் வெள்ளியணை குடகனாறில் ஓர் அணை கட்டி, வாய்க்கால்களைச் சரி பண்ணினால், பஞ்சப்பட்டி ஏரி மழைக்காலங்களில் எளிதாக நிரம்பும்னு கண்டறிஞ்சோம். அதேபோல், கரூரில் பாயும் காவிரியும், அமராவதி ஆறும் சங்கமிக்கும் இடம் திருமுக்கூடலூர். பஞ்சப்பட்டியிலிருந்து 47 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது திருமுக்கூடலூர். அந்த இடத்தில் காவிரியில் 7.5 மீட்டர் உயரத்தில் தடுப்பணை கட்டினால், 2 டி.எம்.சி தண்ணீரைத் தேக்க முடியும். 

அதை ஏற்கெனவே இயற்கை அமைத்த வாய்க்கால்கள் மூலமா எளிதாக பஞ்சப்பட்டி ஏரிக்குத் தண்ணீர் கொண்டு போக முடியும். பஞ்சப்பட்டி ஏரியில நிரம்பி மீதமாகும் உபரி நீரை, புதுக்கோட்டை மாவட்டத்துக்கும் கொண்டுபோய், அங்கு தரிசா கிடக்கும் 28 ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கும் பாசனம் தர முடியும். அதோடு, 100-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். இப்போது காவிரியிலிருந்து பஞ்சப்பட்டி ஏரி 6 மீட்டர் உயரத்தில் இருப்பதால், கால்வாய் வெட்டி கொண்டு போக முடியாது. பம்பிங் திட்டம்மூலம் கொண்டுபோனாதான் உண்டு. ஆனா, அதைவிட திருமுக்கூடலூரில் அணை கட்டுவதுதான் சிறப்பானது. எங்களின் இந்த ஆய்வைத்தான் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், தேசியக் குழந்தைகள் அறிவியல் இயக்கமும் சேர்ந்து நடத்திய போட்டியில் சமர்பித்தோம். மாவட்ட, மாநில அளவுகளில் தேர்வான இந்த ஆய்வு, வரும் 27, 28 மற்றும் 29 ஆகிய மூன்று தேதிகளில் ஒடிசா, புவனேஸ்வரில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான மாநாட்டில் கலந்துகொள்ளத் தேர்வாகி இருக்கு. அதோடு, வரும் ஜனவரி மாதம் பஞ்சாபில் நடைபெறும் தேசிய அளவிலான மாநாட்டிலும் பங்கேற்கத் தேர்வாகி இருக்கு. இந்த ஆய்வைப் பார்த்து அசந்த தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த அதிகாரிகள், பஞ்சப்பட்டி ஏரியை வந்து பார்த்தாங்க. `தமிழக மற்றும் மத்திய அரசுகள் கவனத்துக்கு மாணவர்களின் ஆய்வைக் கொண்டுபோய், பஞ்சப்பட்டி ஏரிக்கு நீர் கிடைக்க வழி பண்ணுகிறோம்' என்று சொன்னாங்க. எங்க ஆய்வு எங்க ஊர் ஏரிக்கும், விவசாயத்துக்கும் பயன் தந்துச்சுன்னா, அதைவிட சந்தோஷம் வேறு இல்லே" என்று கூறி நம்மை அசத்தினார்கள்.
 

வழிகாட்டு ஆசிரியர் ஜெய்குமார், ``இந்த ஏரியில் தண்ணீர் நிரப்புவதற்காக காமராஜர் ஆட்சிக் காலத்திலேயே முடிவுசெய்யப்பட்டதாம். அதற்காக மாயனூர் காவிரியாற்றில் 7.5 மீட்டர் உயரத்தில் அணை கட்டி தண்ணீரைத் தேக்கினால், அதன்மூலம் பஞ்சப்பட்டி ஏரியில் தண்ணீர் நிரம்புவதோடு, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கும் தண்ணீர் கொண்டு போகும் திட்டத்தைச் செயல்படுத்த முடியும் என்று நினைத்தார்களாம். ஆனா, என்ன காரணத்தாலோ அந்தத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. பத்து வருஷத்துக்கு முன்னாடி அதே மாயனூரில் கதவணை கட்டுனாங்க. ஆனா, 5 மீட்டர் உயரத்தில் மட்டும் அந்தக் கதவணையைக் கட்டியதால், பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டுபோக முடியவில்லை. அதனால், நாங்க செய்த ஆய்வின்படி வெள்ளியணை குடகனாறில் அணை கட்டுவது மூலமும், திருமுக்கூடலூர் காவிரி ஆற்றில் 7.5 மீட்டர் உயரத்தில் அணை கட்டுவது மூலமும் பஞ்சப்பட்டி ஏரியில் நீர் நிரப்ப முடியும். பஞ்சப்பட்டி ஏரி வறண்டதால், இந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் 1,000 அடிக்குக் கீழே போய்விட்டது. பஞ்சப்பட்டி ஏரியில் இந்தத் திட்டங்கள் மூலம் உத்தேசமாக 500 கோடி ரூபாயில் அணை அமைத்து, தண்ணீரைக் கொண்டு வரலாம். இதனால், பஞ்சப்பட்டி ஏரியில் 2,000 கன அடி தண்ணீரைத் தேக்க முடியும். 20,000 டன் மீன் வளர்த்து அரசு வருமானம் பார்க்கலாம். அதோடு, இந்த ஏரிக்கு புறத்தில் 300 ஏக்கர் நிலம் காலியா இருக்கு. அவற்றில் பறவைகள் சரணாலயம், ஏரியில் போட்டிங்குனு அமைத்து, இந்த ஏரியைச் சுற்றுலாத்தலமாக அறிவித்தால், தமிழக அரசுக்குப் பெருத்த வருமானம் கிடைக்கும். அதோடு, `கரூர் மாவட்டத்தில் ஒரு சுற்றுலாத்தலமும் இல்லை' என்கிற மக்களின் அங்கலாய்ப்பும் நீங்கும்" என்றார்.

பஞ்சப்பட்டி ஏரிக்காக தொடர் போராட்டங்களை நடத்திவரும் அழகப்பன், ``நாங்க 13 வருஷமா, `இந்த ஏரிக்கு பம்பிங் திட்டம் மூலம் காவிரியிலிருந்து தண்ணீர் கொண்டு வாங்க'னு போராடிக்கிட்டு வர்றோம். ஆனா, எதுவும் நடக்கலை. ஆனா, எங்க ஊர் பிள்ளைங்க ஆசிரியர்களின் உதவியோடு, இந்த ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர இரண்டு வழிகளை தங்கள் ஆய்வும் மூலம் கண்டுபிடிச்சிருக்காங்க. இந்தத் திட்டங்களை அரசு செயல்படுத்தினால், நூற்றுக்கணக்கான கிராமங்கள் வறட்சியிலிருந்து மீளும். எங்களால் முடியாததை எங்க பிள்ளைகளின் ஆய்வு செய்யும்ங்கிற நம்பிக்கை எங்களுக்கு மலையளவு ஏற்பட்டிருக்கு" என்றார் மகிழ்ச்சி பொங்க!.