Published:Updated:

"தண்ணிக்காகத் தினமும் காலிக் குடங்களுடன் அலைகிறேன்!" - கலங்கும் கரூர் மனிதர்

"இந்தப் பாழாபோன தண்ணியத் தேடித்தேடியே எங்க ஜீவன் கரையுது. அரசாங்கம் எங்க ஊருக்கு நிரந்தரமா தண்ணி கிடைக்குறமாதிரி ஏதாவது ஏற்பாடு பண்ணணும்."

"தண்ணிக்காகத் தினமும் காலிக் குடங்களுடன் அலைகிறேன்!" - கலங்கும் கரூர் மனிதர்
"தண்ணிக்காகத் தினமும் காலிக் குடங்களுடன் அலைகிறேன்!" - கலங்கும் கரூர் மனிதர்

னிதத் தேவைகளில் முக்கியமான விஷயம், தண்ணீர்.... மானுடத்துக்கு இயல்பாக, இயற்கையாகக் கிடைக்க வேண்டிய அடிப்படை விஷயமும்கூட. ஆனால், இயற்கையைச் சிதைத்தொழித்த மனிதர்களாகிய நமது பொல்லாத சுயநலம், குடிநீருக்கான ஆதாரமான நிலத்தடி நீரை அதலபாதாளத்துக்குப் போக வைத்துவிட்டது. ஆறு, குளம், ஏரி, கண்மாய் என்று நமக்கு, திகட்டத் திகட்ட நீரை, பாலூட்டும் தாயாக அள்ளித் தந்த நீர்நிலைகளைக் கழிவுகள் சங்கமிக்கும் இடமாக மாற்றிவிட்டோம். விளைவு... காசுக்கு புட்டிகளில் அடைக்கப்பட்ட தண்ணீரை வாங்கி அருந்தத் தொடங்கிவிட்டோம். எங்கோ நகரங்களில் கேள்விப்பட்ட இந்த `கேன் வாட்டர்' வாங்கும் கலாசாரம், தமிழகத்தின் கடைக்கோடி கிராமம்வரை இப்போது பரவிவிட்டது.

தமிழகத்தில் ஆங்காங்கே மக்கள், `தண்ணீர் தண்ணீர்' என்று காலிக் குடங்களோடு, போராட்டத்தில் குதிக்கும் அவலங்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. `மூன்றாம் உலகப் போர் என்று ஒன்று உருவானால், அது கண்டிப்பாகத் தண்ணீருக்கான யுத்தமாகத்தான் இருக்கும்' என்று அச்சமூட்டி, நம்மை வேர்க்க விறுவிறுக்க வைக்கிறார்கள் உலகளாவியலான சூழலியாளர்கள். தென்னாப்பிரிக்காவின் கடற்கரை நகரமான கேப்டவுன், ஒரு சொட்டுகூடத் தண்ணீர் இல்லாத நகரமாகி நரகமாகிவிட்டது. சமீபத்தில், ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வறட்சியில் முப்பதுக்கும் மேற்பட்ட குதிரைகள் இறந்து மடிந்த சோகம் உலகை உலுக்கியது. பெரிதாக உலகளாவிய அளவில் ஏற்படப் போகும் தண்ணீர்ப் பஞ்சத்தின் பலமான எச்சரிக்கைகள் இவை. அவ்வளவு தூரம் எதற்கு...? தமிழகத்தின் மையப் பகுதியான கரூர் மாவட்டத்தில் இப்படிப் பல கிராமங்கள் அப்படி வறட்சியின் பிடியில் சிக்கி இருக்கின்றன. இதன் மீட்சி தண்ணீரை அரசியலாக்குவதிலிருந்து மீள்வதில், இயற்கை நீராதாரங்களைக் காப்பதின் துரிதத்தில் இருக்கிறது.

இந்த நிலையில், தண்ணீருக்காகத் தினமும் ஓட்டை உடைசல் சைக்கிளில் காலிக் குடங்களை கட்டிக்கொண்டு, எட்டுத் திக்கும் பயணிக்கிறார், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரணாம்பட்டி  பொம்மன். அவரிடம் பேசினோம்.

``எனக்கு வயசு 65 ஆவுது. நான் என் அனுபவத்துல எத்தனையோ வளர்ச்சியப் பார்த்துட்டேன். ஆனா, இன்னும் ஏழேழு யுகம் கடந்தாலும், எங்க ஊர்ல தண்ணீர் கஷ்டம் மட்டும் மாறவே மாறாது. நான் டவுசர் போட்ட காலத்துல இருந்து இன்னையவரைக்கும் தாகத்துல விக்கிக்கும் தொண்டைக்குழியை நனைக்கத் தண்ணீர தேடித்தேடியே எங்க ஊரு மக்கள், கால் தேஞ்சு போய்ட்டோம். இருபது வருஷத்துக்கு முன்னாடி வரை கம்மா, ஏரி, ஊர் குளத்துல தண்ணீர் எடுத்து தாகம் தீர்ப்போம். அதெல்லாம் வறண்டு போய்ட்டு இப்போ. இருபது வருஷத்துக்கு முன்னாடி போர் போட்டு, பஞ்சாயத்து சார்பா தெருவுக்குத் தெரு குழாய் போட்டு பைப்புகள்ல தண்ணி விட்டாங்க. ஆனா, வாய்ல வைக்க முடியாத அளவுக்கு உப்புத்தண்ணியா இருந்துச்சு. அதுக்கு மாத்தா, வேற போர்வெல் போடலை. அஞ்சு வருஷம் போராடித்தான் மறு போர்வெல் போட வச்சோம். அதுல அப்பப்போ தண்ணி வந்துச்சு. போகப்போக அதுவும் வத்திப் போச்சு. இருந்தாலும், அப்படி இப்படின்னு எப்படியோ காலத்தை ஓட்டினோம். 

ஆனா, கடந்த ரெண்டு வருஷமா தண்ணிக்காக நாங்க படுற பாடு கொஞ்சநஞ்சமில்லைங்க. பஞ்சாயத்து போர்வெல் ரிப்பேராயிட்டு. `மோடி கொடுத்த டேங்'னு இன்னொன்ன கட்டினாங்க. அதுலயும் நிரந்தரமா தண்ணி வரலை. என் பொண்டாட்டி, சொகப்படாத சீக்காளி. நாலு தப்படி நடக்கவே அவளுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும். பிள்ளைங்களுக்கு அவங்கங்க குடும்பங்களை கவனிக்கவே நேரம் பத்தாது. நான் ஒருத்தன் கூலி வேலைக்குப் போய்தான், கிடைக்கிற கொஞ்ச கூலியில எங்க ரெண்டு பேரோட வயித்துப்பாட்டைக் கழுவுறேன். ஆனா, தண்ணீருக்காக நான் ரெண்டு வருஷமா அலையுற அலைச்சல் இருக்கே... அதைச் சொல்லி மாளாது. மேற்கே இருக்கிற திண்டுக்கல் மாவட்டத்து ஊரான பாளையம், கிழக்கே 3 கிலோ மீட்டர் தூரத்துல இருக்கிற சிந்தாமணிப்பட்டினு எட்டுத் திக்கிலும் உள்ள ஊர்களுக்கு சைக்கிள்ல காலிக் குடங்களைக் கட்டிக்கிட்டுப் போவேன். ஆனா அங்க உள்ளவங்க, `எங்க பாடே பெரும்பாடா இருக்கு'னு என்னைத் துரத்துவாங்க. அதையும் மீறிக் கெஞ்சிக் கூத்தாடிதான் தண்ணி கொண்டு வருவேன். சில நாள்கள் ஒரு குடத்து தண்ணிக்காகப் பகல் முழுவதும் கால்கடுக்க நின்னுருக்கேன். பலநாள், இதனால என் பொழப்புக்கே வேட்டு விழுவுது. நான்னு இல்லை... என்னோட மொத்த ஊரு ஜனங்களுக்கும் இதுதான் கதி. கோடைக்காலங்களில் இந்தத் `தண்ணி தேடும்' கஷ்டம் இன்னும் அதிகமாயிரும். 

எங்க ஊரு எல்லையில காவிரி கூட்டுக் குடிநீர் திட்டக் குழாய் போவுது. அதுல, லேசா தண்ணி கசியும். அதுல, ஒரு குடம் புடிக்க 1 மணி நேரம் ஆவும். ஏன்னா, அவ்வளவு கம்மியாதான் தண்ணி கசியும். ஆனா, அதுல தினமும் ஊருசனம் மொத்தமும் தண்ணி பிடிக்கக் காத்துக் கிடக்கும். எம்.எல்.ஏ சீட்டுக்கூட வாங்கிடலாம். அங்கே ஒரு குடம் தண்ணி புடிக்கிறது ரொம்ப கஷ்டம். பக்கத்து மாவட்டத்துக்கெல்லாம் குழாய்ப் போட்டு இப்படித் தண்ணிகொண்டு போறாங்க. ஆனா, காவிரி ஓடுற சொந்த மாவட்டத்துல உள்ள எங்க ஊருக்கு அதுல இருந்து பைப் ஒண்ணை வச்சு, தண்ணி கொடுக்க யாருக்கும் மனசில்லை. இன்னைக்கு காலையில் 8 மணிக்குக் கஞ்சியக் குடிச்சுட்டு, மூணு குடங்களோட வந்தேன். இந்தா தண்ணி பிடிச்சுக்கிட்டு வீட்டுக்குக் கிளம்பறதுக்குள்ள மணி மூணாயிட்டு. இன்னைக்குப் பொழப்பு போயிட்டு. பொண்டாட்டிக்குச் சோறு ஆக்க முடியலை. இனிமேல் போய் எப்போ உலை வச்சு, எப்போ சோறாக்குறது? இந்தப் பாழாபோன தண்ணியத் தேடித்தேடியே எங்க ஜீவன் கரையுது. அரசாங்கம் எங்க ஊருக்கு நிரந்தரமா தண்ணி கிடைக்குறமாதிரி ஏதாவது ஏற்பாடு பண்ணணும்" என்று உடம்பில் வழிந்தோடும் வியர்வைத் துளிகளோடு, தண்ணீர்க் குடங்கள் சுமந்த சைக்கிளை உருட்டுகிறார்.

பொம்மன் அவர்களின் வார்த்தைகளில் உதிர்ந்த உஷ்ணத்தில் பூத்த கானல் நீர், அந்தப் பகுதியெங்கும் அப்போது வியாபிக்கத் தொடங்குகிறது. அதை பொம்மன்களின் தாகம் தீர்க்கும் நீராக மாற்றுவதுதான் யாரென்று தெரியவில்லை!