Published:Updated:

வியர்வையிலிருந்து நதியை உருவாக்குவதுதான் உங்கள் கல்வியா? - சி.பி.எஸ்.இ.க்கு ஒரு கடிதம்

வியர்வையிலிருந்து நதியை உருவாக்குவதுதான் உங்கள் கல்வியா? - சி.பி.எஸ்.இ.க்கு ஒரு கடிதம்
வியர்வையிலிருந்து நதியை உருவாக்குவதுதான் உங்கள் கல்வியா? - சி.பி.எஸ்.இ.க்கு ஒரு கடிதம்

``நர்மதா நதி இப்படித்தான் உருவாகியதாம்’’ என்று என்னிடம் வியந்து சொல்லிக்கொண்டிருந்த மாணவருக்கு, வியர்வையிலிருந்தெல்லாம் நதிகள் உருவாகாது என்றும் நதிகள் உருவாகும் இயற்கை விதியையும் விளக்கினேன். அதன் பிறகும் அந்த மாணவர் ``சாமிதானே! அவரால் வியர்வையிலிருந்து ஆற்றை உருவாக்க முடியாதா?’’ என்று கேட்டார்.

நாட்டின் மிகச் சிறந்த மருத்துவர்களை உருவாக்குவதற்காக மத்திய அரசின் நீட் தேர்வுகளைத் தலைமையேற்று நடத்தும் அளவுக்குத் தகுதிபெற்ற சி.பி.எஸ்.இ என்னும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துக்கு...

பிள்ளைகளின் கனவுகள் மெய்ப்பட பள்ளிக்கூடங்கள்தான் வலுவான அடித்தளம் என்று நம்பும் பெற்றோர் எழுதும் கடிதம். உங்கள் பாடத்திட்டத்தை மையமாகக் கொண்டு சென்னையில் இயங்கும் ஒரு பள்ளியின் தேர்வுத்தாளை அண்மையில் காண நேர்ந்தது. அது ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடத்தின் இரண்டாம் காலநிலைத் தேர்வு ( Periodic Test 3 - Term 2). முதல் கேள்வியில் நர்மதா நதி உருவான புராணம் குறித்து விவரிக்கப்பட்டிருந்தது. விவரித்திருந்த புராணம் இதுதான்...

``முன்னொரு காலத்தில் மிகப்பெரும் வறட்சியொன்று வாட்டியது. வறட்சியால் ஆறுகளும் ஏரிகளும் காய்ந்து போயின. நிலங்கள் வெடித்துப்போயின. உயிரினங்கள் இதனால் துன்பத்துக்கு ஆளாகின. தங்கள் வாழ்வின் மீதான நம்பிக்கையற்று இருந்தார்கள். அப்போது மற்ற கடவுளும் மக்களும் கடவுள் சிவனிடம் சென்று முறையிட்டார்கள். சிவன் அமர்கண்டக் மலையுச்சிக்குச் சென்று தவமிருந்தார். அவர் தவம் கடுமையாக இருந்ததால் அவருக்கு வியர்க்கத் தொடங்கியது. அந்த வியர்வை மலையில் இருந்து ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. அது நிலங்களுக்கும் உயிர்களுக்கும் நம்பிக்கை கொடுக்கத் தொடங்கியது. சிவபெருமான் கண் விழித்துப் பார்த்தார். அந்த நதி பல உயிர்களுக்கு நம்பிக்கை அளித்திருப்பதைப் பார்த்து அதற்கு நர்மதை என்று பெயரிட்டார். நர்மதா என்றால் நம்பிக்கையைத் தருபவர் என்று பொருள்.’’ 

``நர்மதா நதி இப்படித்தான் உருவாகியதாம்’’ என்று என்னிடம் வியந்து சொல்லிக்கொண்டிருந்த மாணவருக்கு, வியர்வையிலிருந்தெல்லாம் நதிகள் உருவாகாது என்றும், நதிகள் உருவாகும் இயற்கை விதியையும் விளக்கினேன். அதன் பிறகும் அந்த மாணவர், ``சாமிதானே! அவரால் வியர்வையிலிருந்து ஆற்றை உருவாக்க முடியாதா?’’ என்று கேட்டார். அவரால் நான் சொன்ன இயற்கை விதியை ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அவருக்குள் அந்த நதி இப்படித்தான் உருவானது என்பதை உங்கள் கல்வி பதிவு செய்திருக்கிறது. கடவுள் தன் வியர்வையிலிருந்து ஆறுகளை உருவாக்கிக் கண்டதில்லை. ஆனால், கடவுள் என்கிற ஒருவர் இருந்திருந்தால் அவர் சிறுபிள்ளைகளிடம் கல்வியின் பெயரால் இப்படியான பொய் நம்பிக்கைகளை விதைத்திருக்க மாட்டார். 

உண்மையில், நர்மதா நதியே தற்போது நம்பிக்கையற்றுதான் இருக்கிறது. அதன் கடந்த ஆறு ஆண்டுக்கால வரலாற்றை உங்களுக்குச் சொல்கிறேன் கேளுங்கள்..  

2013, மத்தியப்பிரதேச மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையின்படி நர்மதா நதியின் தரம் Class C என வரையறுக்கப்பட்டது. அதாவது, குடிக்கத் தகுதியற்ற நீர் என்பதால் வழக்கமான முறையில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு பிறகு தொற்றுக்கிருமிகள் அகற்றப்பட்டு பிறகு குடிநீராக உபயோகப்படுத்தலாம். அதாவது, நர்மதா நதியின் கரையில் இருக்கும் 19 நகராட்சிகள் தங்களுடைய கழிவுகளை அந்த நதியில்தான் கொட்டுகிறார்கள்.19 நகராட்சிகளில் 52 நகரங்கள் அடக்கம். இதைத் தடுப்பதற்கு மத்தியப்பிரதேச அரசே முன்வந்து நதியின் கரைகளில் திடக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதற்கான திட்டங்களைக் கொண்டுவந்தது. ஆனால், அதன் நிலை என்ன என்று இன்று வரை தெரியவில்லை.

2014, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், நர்மதா நதி... குஜராத்தின் கருடேஷ்வர் தொடங்கி பரூச் வரையிலும், மத்தியப்பிரதேசத்தின் மண்ட்லா தொடங்கி நெமவார் வரையிலுமாக அசுத்தம் அடைந்திருப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த நீர் மாசினால் நதிநீரின் 23 சதவிகிதம் மட்டுமே மக்கள் உபயோகத்துக்காகப் பயன்படுத்தப்படுவதாகச் சொல்லப்பட்டது. 

2015, நர்மதா நீரில் மேற்கொள்ளப்பட்ட கணக்கீட்டின்படி அந்த நீரின் உயிரியல் ஆக்ஸிஜன் தேவை 7.1 மில்லிகிராம். ஆனால், வரையறுக்கப்பட்ட அளவு வெறும் 3 மில்லி கிராம் மட்டுமே. 

2016, மத்தியப்பிரதேச அரசுக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் முகேஷ் கடக்வார், சர்வதேசப் பத்திரிகை ஒன்றில் நர்மதா நதி தொடர்பான தனது ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், நீரில் கரைந்துபோன ஆக்ஸிஜன் அளவு (Dissolved Oxygen Level) மிகமிகக் குறைவாக இருப்பதால் நதிநீர் உயிர் வாழ்வதற்கும் மக்கள் உபயோகத்துக்கு ஏற்புடையதாக இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து மத்தியப்பிரதேசத்தின் கரையோரம் சில இடங்களில் தண்ணீர் பரிசோதனை நிலையங்களை மாநில அரசு நிறுவியது. 

2017, மத்திய மீன்பிடி நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியில் நர்மதாவின் குறுக்கே கட்டப்படும் அணைகளால் நீரின் தட்பவெப்பத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் நீரின் உயிர்ச்சூழலில் பெருத்த மாற்றம் ஏற்படும் என்றும் கூறப்பட்டது. அணைகட்டுவதற்கான அடிமட்டப் பணிகளால் நீரின் வண்டல் அளவு அதிகரித்துள்ளதாகவும் நர்மதாவின் ஆதார ஊற்று மட்டுமே இந்தப் பாதிப்பு ஏற்படாமல் தற்போது காப்பாற்றி வருகிறது. தற்போது அதுவும் மாசுபட்டு வருவதால் நிலைமை கேள்விக்குறியே என்று சொல்லப்பட்டது. அதே ஆண்டில்தான் நதியின் குறுக்கே கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. 

2018, உலகின் மிக உயரமான சிலையாகக் கருதப்படும் சர்தார் வல்லபபாய் பட்டேலின் வெண்கல சிலை நர்மதை நதிக்கரையோரம் திறக்கப்பட்டது. ஆனால், சிலைக்கான சுற்றுச்சூழல் ஒப்புதலை அரசு பெறவில்லை, மேலும் நதிப்படுகையிலேயே இந்தச் சிலை எழுப்பப்படுவது சூழலின் மீது திணிக்கப்படும் சாபம் என்று சூழலியலாளர்கள் 2015-ம் வருடம் அந்தத் திட்டம் தொடங்கப்பட்டது முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். 

வருடம் 2019, மேலே சொன்னது பற்றியெல்லாம் லட்சியம் செய்யாமல் நர்மதா நதி சிவனின் வியர்வையில் இருந்து உருவானதாகச் சொல்கிறது. உங்கள் பாடத்திட்டத்தின்படி இயங்கும் பள்ளியொன்றின் தேர்வுத்தாள். உண்மையில் மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது நதியின் வரலாற்றினையா அல்லது `நதி வியர்வையிலிருந்து உருவானது’ என்னும் கட்டுக்கதையையா?

 காலநிலைமாற்றம், தட்பவெப்பச் சீர்கேடு, 21-ம் நூற்றாண்டு பெரும் சுற்றுச்சூழல் அழிவுகளைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில் நாம் பிள்ளைகளுக்கு அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் கற்பிக்க வேண்டியது சூழலியல் வரலாறும் மேம்பாடும் பாதுகாப்புமே தவிர வியர்வைப் புராணங்கள் இல்லை. ஏனெனில், மேலே கூறப்பட்ட நிலை நர்மதா நதிக்கு மட்டுமல்ல பிரம்மபுத்திரா, அமராவதி, காவிரி, மகாநதி, கங்கை என பெரும்பாலான நீரோட்டங்களின் இன்றைய நிலை இதுதான். பாக்கெட் தண்ணீர் இரண்டு ரூபாய் என்று தனியார் விற்கிறார்கள், பாட்டில் தண்ணீர் 10 ரூபாய் என்று அரசே விற்கிறது. உயிர்வாழ்தலுக்கு காற்றும் நீரும் அத்தியாவசியம் என்பது அறிவியல். அத்தியாவசியங்கள் விற்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. தலைநகர் டெல்லியின் காற்று மாசை நொடிக்கொரு முறை பரிசோதனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். சென்னையின் தட்பவெப்ப நிலை அண்மைக்காலமாக மாறியிருக்கிறது. டெல்லி போன்று இது நிரந்தரமாகும் சாத்தியக் கூறுகள் இருப்பதாக வல்லுநர்கள் சொல்லுகிறார்கள். சூழல் அரசியல் 21-ம் நூற்றாண்டின் அத்தியாவசியக் கல்வியாக இருக்கும் நிலையில் நீங்கள் கடவுள் வியர்வையிலிருந்து நதி உருவானதாகப் பிள்ளைகளுக்குப் போதிக்கிறீர்கள். இதே  பாடத்திட்டத்தை உருவாக்கிய அறிவுஜீவிக் குழு உறுப்பினர்களிடம், “வியர்வையில் இருந்துதான் நதி உருவாகிறது!” என்று சொன்னால் ஏற்றுக்கொள்வார்களா? மத்திய பட்டியலில் கல்வியைச் சேர்த்திருக்கும் நிலையில் நீங்கள் கற்பிக்கப்போவது இவற்றைத்தானா? உங்கள் கல்வியை அடிப்படையாகக் கொண்டு படித்தவர்கள்தான் மத்திய அரசின் ஐ.ஐ.டி போன்ற தலைசிறந்த கல்வி நிறுவனங்களிலும் படிக்கிறார்கள். அப்படியென்றால் அடிப்படையில் உங்கள் கல்வித்தரம் எந்த மாதிரியான மாணவர்களை உருவாக்கி அனுப்புகிறது என்கிற கேள்வியையும் எழுப்புகிறது.

மற்றொன்றும், இப்படிப் புனிதப்படுத்தப்பட்ட யமுனை நதிதான் பிற்காலத்தில் சூழல் மாசின் காரணமாகத் தலைநகர் டெல்லியில் சிறு கால்வாய் போலச் சுருங்கி வறண்டுவிட்டது. இப்படிப் புனிதப்படுத்தப்பட்ட கங்கையில் இறந்தவர்களின் பிணங்கள் மிதந்துகொண்டு அதைச் சுத்தப்படுத்த தனியொரு வாரியம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதே நிலை நாளை நர்மதாவுக்கும் ஏற்படும். மற்ற எந்த நதிகளுக்கும் ஏற்படும். அப்போதெல்லாம் எங்கள்  பிள்ளைகள், `கடவுளுக்கு மீண்டும் வியர்க்கும் ஆறு மீண்டும் உருவாகும்’ என்று நம்பிக்கொண்டிருக்காமல் ஆறுகளைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் அறிந்துகொள்வதையே பெற்றோராக நாங்கள் விரும்புவோம். 

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு. 

 மாநிலக் கல்வித் திட்டத்தின் கீழ் நாங்கள் படித்தறிந்துகொண்ட திருக்குறள். மணலிலே தோண்டும் கிணற்றில், தோண்டிய அளவுக்கே நீர் ஊறும்; மாந்தருக்கும் அவரவர் முயன்று கற்றதன் அளவுக்கே அறிவும் ஊறிச் சுரக்கும் என்பதே இதன் பொருள். ஆனால், மத்தியக் கல்வி முறை போதிக்கும் இப்படியான கேள்விகளால் அறிவும் ஊற்றெடுக்காது நர்மதாவும் ஊற்றெடுக்காது.

பெண், இயற்கை என இங்கு புனிதப்படுத்தப்பட்ட எதுவும் மதிக்கப்பட்டதில்லை சிதைக்கப்பட்டிருக்கிறது. இரண்டையும் புனிதப்படுத்தாமல் புராணமும் புராதனமும் ஆக்காமல் காலத்தின் தேவையை உணர்ந்து உருவாக்கப்படும் கல்விமுறை மட்டுமே கல்வி, மற்ற எதுவும் ஏட்டுச் சுரைக்காயாக இருக்கக்கூட தகுதியற்றது.

இப்படிக்கு,

கல்வியை நம்பும் பெற்றோர் 

அடுத்த கட்டுரைக்கு