Published:Updated:

மந்திர வித்தைக்காகக் கொல்லப்பட்ட 17,000 ஆந்தைகள்!- அதிர்ச்சிதரும் தகவல்

புனேயில் நடக்கவுள்ள இந்த மாநாட்டில், கனடா, சுவிட்சர்லாந்து, இஸ்ரேல், ஆஸ்திரேலியா, தென்அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தங்கள் ஆராய்ச்சிகளைப் பகிர்ந்துகொள்வார்கள்.

ஆந்தை
ஆந்தை ( Pixabay )

புனேயிலுள்ள இலா ஹேபிடேட் (Ela Habitat) என்ற லாபநோக்கற்ற நிறுவனம், சாவித்திரிபாய் பூலே புனே பல்கலைக்கழகம் (SPPU) மற்றும் மகாராஷ்டிரா வனத்துறையுடன் இணைந்து, ஆந்தைகள் குறித்த ஆறாவது விழிப்புணர்வு மாநாட்டை நவம்பர் 29 முதல் டிசம்பர் 2 வரை நான்கு நாள்களுக்கு, பல்கலைக்கழக வளாகத்தில் நடத்துகிறது. இது, இந்தியாவில் நடத்தப்படும் இரண்டாவது ஆந்தைகள் மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.

'இரவாடிப் பறவையான ஆந்தை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இவை தொடர்பாக நடக்கும் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கவும் இந்த மாநாடு நடைபெறுவதாக' இலா பவுண்டேஷனின் இயக்குநரும் உலக ஆந்தைகள் மாநாட்டின் செயலாளருமான முனைவர் சதீஷ் பாண்டே கூறியுள்ளார்.

இந்தியாவில் 2018-ம் ஆண்டில் மட்டுமே மந்திரவாதம் என்ற பெயரில் 17,000 ஆந்தைகள் கொல்லப்பட்டுள்ளன.

டிசம்பர் 3 மற்றும் 4 -ம் தேதிகளில், புனே மாவட்டத்தில் ஜெஸருக்கு அருகிலுள்ள பிங்கோரியில் நடத்தப்படும் ஆந்தைத் திருவிழாவையொட்டி இந்த மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும், "இந்தியா விவசாயம் சார்ந்த நாடு. ஆந்தைகள் விவசாயிகளின் நல்ல நண்பர்களாகக் கருதப்படுகின்றன. எலிகள், பாம்புகள், பூச்சிகளைக் கொன்று தின்று, பயிர்களைப் பாதுகாக்கின்றன. அபசகுனப் பறவையாகவும், மாய மந்திரத்தோடு சம்பந்தப்படுத்தப்படுகிற பறவையாகவும் மக்களால் மூடத்தனமாக நம்பப்படுகிறது. மருத்துவத்திற்காகவும் இவை வேட்டையாடப்படுகின்றன. மந்திரவாதம் என்ற பெயரில் 2018-ம் ஆண்டில் மட்டும் 17,000 ஆந்தைகள் கொல்லப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளார்.

புனேயில் நடக்கவுள்ள இந்த மாநாட்டில், கனடா, சுவிட்சர்லாந்து, இஸ்ரேல், ஆஸ்திரேலியா, தென்அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தங்கள் ஆராய்ச்சிகளைப் பகிர்ந்து கொள்வார்கள். பல்வேறு நாடுகளிலிருந்து வரும் ஆய்வாளர்களின் 46 ஆய்வுக் கட்டுரைகள், வேட்டையாடிகளான அவற்றை அழிவிலிருந்து பாதுகாப்பது பற்றி சமர்ப்பிக்கப்பட உள்ளன.

மாநாடு
மாநாடு
Pixabay

"சில ஆந்தை இனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. வேட்டையாடப்படுவதால், தகுந்த உணவு கிடைக்காததால் வைரஸ் நோய் தாக்கியதால், கடந்த 10 ஆண்டுகளில் ஆந்தைகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது" என்று உலக ஆந்தை மாநாட்டின் இணை செயற்பாட்டாளரான ஜேம்ஸ் டங்கன் கூறியுள்ளார்.

"ஆந்தைகள், மனித இனத்தின் நண்பர்கள் என்பதை விஞ்ஞான முறைப்படி எடுத்துரைப்பது இந்த மாநாட்டின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. இதில், ஆந்தைகளின் புகைப்படங்கள், போஸ்டர்ஸ், காணொளிகள், ஆயிரக்கணக்கான சிலைகள், ஓவியங்கள், கண்காட்சியில் இடம்பெறும்" என்றும் மாநாட்டு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.