Published:Updated:

`இந்தியாவின் 43 நகரங்கள் ஆபத்தில் உள்ளன!' - சூழலியல் பேரிடரைச் சுட்டிக்காட்டும் புதிய ஆய்வறிக்கை

காற்று மாசுபாடு
காற்று மாசுபாடு

உலகளவில் மிகவும் ஆபத்தான நிலைமையிலுள்ள 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவில் இருக்கின்றன.

வெரிஸ்க் மேப்பிள்க்ராஃப்ட் (Verisk Maplecroft) என்ற சர்வதேச அமைப்பு கடந்த 13-ம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையில், உலகளவில் சுற்றுச்சூழல் சார்ந்த அபாயங்களில் சிக்கியுள்ள நகரங்களைப் பட்டியலிட்டது. அதில் பட்டியலிடப்பட்டுள்ள மிக மிக ஆபத்தான நிலைமையிலுள்ள நகரங்களின் பட்டியலில் 99 நகரங்கள் ஆசிய கண்டத்தில் அமைந்துள்ளதாக அது குறிப்பிடுகிறது. அதுமட்டுமன்றி, அந்த 99 நகரங்களில் 43 நகரங்கள் இந்தியாவிலும் 37 நகரங்கள் சீனாவிலும்தான் அமைந்துள்ளன.

சுற்றுச்சூழல், சமூகம், அரசியல் மற்றும் பொருளாதாரச் சிக்கல்கள் குறித்து பகுப்பாய்வு செய்யக்கூடிய பன்னாட்டு அமைப்புதான் வெரிஸ்க் மேப்பிள்க்ராஃப்ட். இந்த அமைப்பு, கடந்த 15 ஆண்டுகளாக தரவுகளைத் தொகுத்தல், வடிவமைத்தல், பகுப்பாய்வு செய்தல், அதன்மூலம் எதிர்கால அபாயங்களைக் கணித்தல் போன்ற வேலைகளைச் செய்துவருகிறது. இந்த அமைப்பு சமீபத்தில், உலகளவிலுள்ள நகரங்களில் எவையெல்லாம் சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பொறுத்தவரை ஆபத்தான நிலைமையில் உள்ளன என்பதைப் பகுப்பாய்வு செய்தது. அந்த அறிக்கை கடந்த 13-ம் தேதியன்று வெளியானது.

காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம்

உலகளவில் பசுமை இல்ல வாயு வெளியீட்டில் முதலிடத்தில் சீனாவும் மூன்றாம் இடத்தில் இந்தியாவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இரண்டு நாடுகளிலுமே மாசுபாட்டு அளவும் வெப்பநிலையும் கடந்த நூற்றாண்டில் இருந்ததைவிடப் பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், அதீத பசுமை இல்ல வாயு வெளியீட்டினால், காலநிலை மாற்றத்தின் தாக்கமும் இங்கு அதிகரித்துள்ளது. அதன்விளைவாக, கடந்த 20 ஆண்டுகளில் இந்த இரண்டு நாடுகளிலுமே இயற்கைப் பேரிடர்களும் அதிகரித்துள்ளன.

வெப்பநிலை, காற்று மற்றும் நீர் மாசுபாடு, இயற்கைப் பேரிடர்கள், சுகாதாரம், கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை, பேரிடர் மேலாண்மை, நிலவியல் அமைப்பு, மக்கள் தொகை நெருக்கடி போன்ற அளவுகோல்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, உலகளவில் மிகவும் ஆபத்தான நிலைமையிலுள்ள 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவில் இருக்கின்றன.

அந்த 13 நகரங்களிலும் நீர் மற்றும் காற்று மாசுபாடு மிகத் தீவிரமாக இருப்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லி இரண்டாம் இடத்திலும் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மூன்றாவது இடத்திலும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. மேலும், ஆக்ரா 6-வது இடம், கான்பூர் 10-வது இடம், ஜெய்பூர் 22-வது இடம், லக்னோ 24-வது இடம் பெங்களூரு 25-வது இடம், மும்பை 27-வது இடம் என்ற வரிசையில் இடம் பெற்றுள்ளன. இந்த நகரங்களில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிப்பதால், மக்கள் தொகை நெருக்கடியும் மிக அதிகமாகியுள்ளது. அதுவும், பேரிடர் காலங்களில் இழப்புகள் அதிகரிப்பதற்கு ஒரு முக்கியக் காரணம்.

நீர் மாசுபாடு
நீர் மாசுபாடு

அதோடு, இந்த நகரங்களிலுள்ள அதீத மக்கள் தொகை அடர்த்தி, மாசுபாட்டு அளவையும் அதிகப்படுத்துகிறது. உலகளவிலான காற்று தர அட்டவணையின்படியும், இந்தியாவிலுள்ள 19 நகரங்களில் காற்றின் தரம் மிக மோசமாக உள்ளது. 2019-ம் ஆண்டு இந்தியாவில், நிகழ்ந்த ஐந்து மரணங்களில் ஒரு மரணம் நச்சுப் பொருள்கள் நிறைந்த காற்றைச் சுவாசிப்பதாலேயே நிகழ்ந்துள்ளதாகவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மேலும், இப்படி சத்தமின்றி நிகழும் பேரிடர்கள், 36 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்குப் பொருளாதாரச் சேதங்களை ஏற்படுத்துகிறது. மேலும், நீர் மாசுபாட்டால் ஆண்டுக்கு 9 பில்லியன் அளவுக்கு ஆரோக்கியம் தொடர்பான செலவுகளை இந்திய மக்கள் சந்திக்கின்றனர். அதோடு, நீர் மாசுபாடு காரணமாக இங்கு ஓராண்டுக்கு 400,000 பேர் உயிரிழக்கின்றனர் என்றும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

அதிகளவிலான இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்த நகரங்கள் பட்டியலில், சீனாவின் குவாங்ஸூ மற்றும் டாங்குவான் முன்னிலை வகிக்கின்றன. அவற்றைத் தொடர்ந்து, ஜப்பானிலுள்ள ஒசாகா மற்றும் டோக்கியோ நிலநடுக்கம், சூறாவளி போன்ற பேரிடர்களை அதிகளவில் எதிர்கொள்கின்றன. முதல் 100 நகரங்களில் ஆசிய கண்டத்தில் இல்லாத ஒரே நகரம் பெரு நாட்டில் அமைந்துள்ள லிமா மட்டும்தான்.

புவி வெப்பமயமாதல்
புவி வெப்பமயமாதல்
Pixabay

``காலநிலை அவசரத்தால் பருவநிலையில் ஏற்படும் சிக்கல்களே, இந்த நகரங்கள் எதிர்கொள்ளும் முக்கியமான ஆபத்தாகக் கருதப்படுகிறது. அதீத வெப்பநிலை, பருவநிலை நிகழ்வுகளின் தீவிரத்தன்மை, அதிகரிக்கும் பேரிடர்கள் அனைத்துமே, இந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வியல் மற்றும் பொருளியல் தரத்தின்மீது பெரியளவிலான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன" என்று கூறியுள்ளார், வெரிஸ்க் மேப்பிள்க்ராஃப்ட் அமைப்பின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் தலைவர், வில் நிக்கோல்ஸ் (Will Nichols).

சீனா மற்றும் இந்திய நகரங்களில் முறையே 286 மில்லியன் மற்றும் 336 மில்லியன் மக்கள் மாசுபாடுகளால் ஏற்படும் ஆரோக்கியக் குறைபாடுகள் மற்றும் பேரிடர் அபாயங்களுக்கு இடையேதான் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இந்த அறிக்கையின்படி, இந்தியா மற்றும் சீனாவில் மட்டும் மொத்தம் 642 மில்லியன் மக்கள் சுற்றுச்சூழல் சார்ந்த பேராபத்தில் சிக்கியுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச அளவில் சூழலியல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஒவ்வொரு நாடும் எந்த இடத்தில் உள்ளது என்பதைப் பட்டியலிட்டு சுற்றுச்சூழல் தர அளவீட்டு அறிக்கை வெளியிடப்படும். 2020-ம் ஆண்டு வெளியான அந்த அறிக்கையின்படி, 180 நாடுகளைக் கொண்ட பட்டியலில் இந்தியா 168-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த அறிக்கையின்படி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியாவுக்குக் கிடைத்த மதிப்பெண் 100-க்கு 27.6.

காற்று மாசுபாடு / சென்னை
காற்று மாசுபாடு / சென்னை

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த ஆய்வறிக்கையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியாவின் நிலை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது. மக்கள் அமைப்புகள் பலவும் பல்வேறு பகுதிகளில், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு செயல்படுவது ஆரோக்கியமான போக்காக இருந்தாலும், அரசாங்கம் அதே அக்கறையோடும் முழு முனைப்போடும் சூழலியல் பாதுகாப்புத் திட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதையே இந்த முடிவுகள் உணர்த்துகின்றன.

அடுத்த கட்டுரைக்கு