Published:Updated:

20 ஆண்டுகளில் 50 மில்லியன் ஹெக்டேர் காடுகள் அழிப்பு!- ஆய்வறிக்கையில் அதிர்ச்சி

``கிட்டத்தட்ட 80 மில்லியன் ஹெக்டேர் நிலப்பகுதியாக இருந்ததை, 20 ஆண்டுகளில் 130 மில்லியன் ஹெக்டேர் நிலப்பகுதியாக மாற்றியிருக்கிறோம். காடுகளை அழித்து வெற்று நிலங்களை அதிகமாக்கி விட்டோம் என்று ஆய்வறிக்கைகள் சொல்கின்றன.''

tree
tree

``இருபது ஆண்டுகளில் 50 மில்லியன் ஹெக்டேர் காடுகளை அழித்து நிலப்பகுதியாக மாற்றியிருக்கிறோம் என்று ஆய்வுகள் ஒரு பக்கம் சொல்கிறது. மற்றொரு பக்கம், இப்படியே போனால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகமே பாலைவனம் ஆகிவிடும்'' என்று அபாய மணி அடிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

tree planting
tree planting

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் சார்பில் விருத்தாசலம், கும்பகோணம், மதனத்தூர் நெடுஞ்சாலையில் 10 அடி உயரம் கொண்ட மரக்கன்றுகளை நடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 3,000 மரக்கன்றுகள் நடுவதை இலக்கு வைத்துள்ளனர். தற்போது 1,000 மரக்கன்றுகள் நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் நடப்பட்டு வருகின்றன.

இப்பணி தற்போது ஜெயங்கொண்டம் மதனத்தூர் இடையே அணைக்குடம் அருகே சாலையின் இரு ஓரங்களிலும் ஐந்து விதமான மரக்கன்றுகள் நடப்படுகின்றன. அதில் வேம்பு, அரசமரம், ஆலமரம், நாவல் மரம், மகிழம்பூ மரம் போன்ற மரக்கன்றுகள் நெடுஞ்சாலைத்துறையின் மூலமாக நடப்பட்டு வருகின்றன. நடப்பட்ட மரங்களைப் பாதுகாக்கும் பொருட்டு அவற்றைச் சுற்றிலும் மூங்கில் வேலி அமைக்கப்பட்டு வருகிறது.

tree planting
tree planting

மேலும், இந்த மரக்கன்றுகளுக்குச் சொட்டு நீர்ப் பாசனம் முறையில் தண்ணீர் விடுவதற்கு அதன் அருகே குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தச் சாலை ஓரம் தற்போது நடப்படும் மரங்களால் வருங்காலத்தில் மரத்தின் நிழல் மூலம் மனிதர்களும், அடர்த்தியாக வளரக் கூடிய மரங்களால் பறவைகளும் பெரிய அளவில் பயன் அடையும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் தங்க.சண்முகசுந்தரத்திடம் பேசினோம். ``இவர்களின் முயற்சிக்கு வாழ்த்துகள். கிட்டத்தட்ட 80 மில்லியன் ஹெக்டேர் நிலப்பகுதியாக இருந்ததை, 20 ஆண்டுகளில் 130 மில்லியன் ஹெக்டேர் நிலப்பகுதியாக மாற்றியிருக்கிறோம்.

Social activist Thanga.Shanmugha Sundaram
Social activist Thanga.Shanmugha Sundaram

காடுகளை அழித்து வெற்று நிலங்களை அதிகமாக்கி விட்டோம் என்று ஆய்வறிக்கைகள் சொல்கிறது. இப்படியே இன்னும் 10 ஆண்டுகள் போனால் தமிழகமே பாலைவனம் ஆகிவிடுமாம். இதைத் தடுக்கத்தான் பல அமைப்புகள் ஆங்காங்கு மரம் வளர்க்க ஏற்பாடு செய்கின்றன. இதை வரவேற்கிறேன். அத்தோடு அதை முறையாக வளர்க்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது எனது ஆசை. ``வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்” என்பது அன்றைய வாசகம், ஆளுக்கொரு மரம் வளர்க்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. மரங்கள் இயற்கையின் கொடை. இயற்கை அன்னையின் மடியில் மலர்ந்த முதல் குழந்தை தாவரம் தானே! அவற்றை நாம் வெட்டி அழித்துவிட்டோம். அது நமக்கு எதிராகத் திரும்பி நிற்கிறது.

இன்னும் பலருக்கு மரங்களினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்றே தெரிவதில்லை. தொழில் வளர்ச்சியினாலும், பல மின் சாதனங்களைப் பயன்படுத்துவதனாலும் மாசு நிறைந்த சூழலைத் தாங்குவது இந்த மரங்கள்! `மரங்கள் ஆக்ஸிஜனை தரக்கூடியது என்று அனைவருக்கும் தெரிந்ததே. அப்படியிருந்தும் ஏன் நாம் அவற்றை அழிக்கிறோம். தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் வெப்பம் அதிகமாகக் காணப்படக் காரணம் என்ன என்று யாரவது யோசித்தது உண்டா? நாம் மரங்களை அழித்ததும், அதனால் ஏற்பட்ட நிழலின்மையுமே காரணம். எனவே, மரங்களை வளர்க்க வேண்டும்.

trees
trees

மரங்கள் பறவைகள் மற்றும் விலங்குகளின் புகலிடமாய் விளங்குகின்றன. மரங்கள் மண் அரிப்பைத் தடுக்கின்றன. நிலத்தடி நீர் அமைய உதவுகின்றன. நீர் ஆவியாகி மேகமாகி மழையாகப் பெய்யப் பெரிதும் துணை செய்பவை மரங்களே! மரங்கள் நமக்கு பூ, காய், கனி, கீரை போன்ற உணவு வகைகளைத் தருகின்றன. அதுமட்டுமா சிறந்த மருந்துகளையும் உருவாக்க உதவுகின்றன. இவ்வாறு பல வகையில் உதவும் மரங்களை நாம் வளர்க்க வேண்டும். இல்லையேல் நம்முடைய அழிவை எந்தக் கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது" என்று ஆதங்கப்பட்டார்.