Published:Updated:

பசுவின் வயிற்றில் 52 கிலோ பிளாஸ்டிக் குப்பை! - காப்பாற்றிய அரசு கால்நடை மருத்துவர்கள்

மருத்துவர்கள் பசுவின் வயிற்றில் சேர்ந்திருந்த பிளாஸ்டிக்கை அகற்ற முடிவு செய்தனர். பொதுவான மயக்க மருந்து கொடுக்காமல், குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு ஐந்தரை மணிநேரம் நீண்ட அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

பசு
பசு ( The Wall )

திருமுல்லைவாயிலில் வசிக்கும் முனி ரத்தினத்தின் பசு 20 நாள்களுக்கு முன், கன்று ஈன்றது. ஈன்ற பசு அதிகம் பால் கொடுக்கும். ஆனால், இந்தப் பசு மூன்று லிட்டர் மட்டுமே கொடுத்து வந்துள்ளது. கழிவை வெளியேற்ற முடியாமலும், சிறுநீர் கழிப்பதில் சிரமப்படவும் செய்துள்ளது. உள்ளூர் கால்நடை மருத்துவர், சென்னையிலுள்ள கால்நடை மருத்துவமனையில் காண்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சை
PTI

சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் மருத்துவர்கள் பசுவை, கையால் பரிசோதித்தபோது ஆசனவாயின் ஆரம்பத்திலேயே இரண்டு ஆண்டுகளாகச் சேர்ந்துள்ள பிளாஸ்டிக்கின் அடைப்பை உணர்ந்துள்ளனர். பின் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் முதல் இரைப்பை 75% பிளாஸ்டிக்கால் நிரம்பியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவர்கள் பசுவின் வயிற்றில் சேர்ந்திருந்த பிளாஸ்டிக்கை அகற்ற முடிவு செய்தனர். பொதுவான மயக்க மருந்து கொடுக்காமல், குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு ஐந்தரை மணிநேரம் நீண்ட அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகள் இரைப்பைச் சுவரை ஒட்டி இருந்ததால், மிகக் கவனமாக இரைப்பைச் சுவர் பாதிக்கப்படாமல் அறுவை சிகிச்சை செய்துள்ளார்கள். அறுவை சிகிச்சை மருத்துவர்கள் ஆர்.வேலவன் மற்றும் ஆர்.சிவகுமார், மயக்கவியல் மருத்துவர் சி.எஸ்.அருணாமான் மற்றும் முதுநிலை மாணவர்கள் குழு இணைந்து வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

`பிளாஸ்டிக் கழிவுகளுடன் ஊசிகளும், ஊக்கும் கிடந்துள்ளன. ஊக்கு, ஊசி போன்ற கூரான பொருள்கள் இதயப் பகுதிக்குச் சென்றிருந்தால் அதன் உயிருக்கே ஆபத்தை விளைவித்திருக்கும்' என்கிறார் மருத்துவர். பசுவின் குடல் நாளத்தைச் சரி செய்வதற்காக மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.

5 கிலோ வெல்லம், புண்ணாக்கு, ப்ரோபயாடிக் உணவுகள் போன்றவை அறுவை சிகிச்சைக்குப் பின், வயிற்றின் முதல் பகுதியில் நிரப்பப்பட்டது. ஐந்து நாள் தொடர் சிகிச்சை தேவைப்படும் என்கின்றனர் மருத்துவர்கள். 50 ரூபாய் செலவில் முனி ரத்தினம் தன் பசுவுக்குச் சென்னை கால்நடை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பார்த்துள்ளார். இதுவே தனியார் மருத்துவமனை என்றால் பசுவின் விலையில் பாதி செலவாகி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

`இனி கடலில் இருந்து பிளாஸ்டிக் பிடிக்கலாம்..!’
கிரேட் பசிபிக் க்ளீன் திட்டம்

வலி தாங்காமல் தன் காலால் அடிக்கடி, தன் வயிற்றை முட்டிக்கொண்டிருந்த பசுவுக்குப் பால் சரியாக சுரக்காமல் இருந்ததற்கும், வயிற்று வலிக்கும் காரணம் வயிற்றை அடைத்திருந்த பிளாஸ்டிக் கழிவுகள்தான் எனக் கண்டறிந்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறுகையில், ``மாட்டின் வயிற்றிலிருந்து இதற்கு முன்பும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றியுள்ளோம். ஆனால், அதிக அளவாக 52 கிலோ அகற்றியது இதுவே முதல்முறை" என்று அதிர்ச்சி விலகாமல் சொல்கின்றனர்.

அண்மையில் யானையின் வயிற்றிலிருந்து கிலோ கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் வெளியேற்றப்பட்டதை ஊடகங்கள் மூலம் பெரும்பாலோனோர் பார்த்திருப்போம். பிளாஸ்டிக்கை விழுங்கிக் கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழப்பதையும் அறிவோம்.

பிளாஸ்டிக்
பிளாஸ்டிக்
Pixabay

மக்கள் மிச்சமான உணவுப் பொருள்களைப் பிளாஸ்டிக் பையில் போடுவதைத் தவிர்க்க வேண்டும். மக்கும் பிளாஸ்டிக், மக்காத பிளாஸ்டிக் என்பது மாட்டுக்குத் தெரியாது. பிளாஸ்டிக் உபயோகத்தைத் தவிர்ப்பதே, அனைத்து உயிரினங்களின் நலனுக்கு உகந்ததாக இருக்கும்.