Published:Updated:

பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றிய ஊட்டி ஃபிலிம் தொழிற்சாலை; இப்போது எப்படி இருக்கிறது?

தெற்காசியாவின் புகழ்பெற்ற போட்டோ ஃபிலிம் தொழிற்சாலையாகக் கொடிகட்டிப் பறந்து தொழில்நுட்ப வளர்ச்சியின் காலச்சக்கரத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் தடம்புரண்டு கைவிடப்பட்ட இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலையின் இன்றைய நிலை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஊட்டி நகரில் இருந்து சற்றுத் தொலைவில் உள்ள வனப்பகுதியில் 320 ஏக்கர் பரப்பளவை குத்தகைக்குப் பெற்று 1960-ம் ஆண்டு காமராஜர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட தொழிற்சாலை ஹெச்.பி.எஃப் எனப்படும் மத்திய அரசின் கச்சா பிலிம் தொழிற்சாலை. பல்வேறு கட்டுமான வசதிகளுடன் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களுடன் தொடங்கப்பட்ட இது, தெற்காசியாவின் புகழ்பெற்ற போட்டோ ஃபிலிம் தொழிற்சாலையாகக் கொடிகட்டிப் பறந்தது.

ஊட்டி ஃபிலிம் தொழிற்சாலை
ஊட்டி ஃபிலிம் தொழிற்சாலை
இயற்கை உரம் மூலம் முதல் முறையாக ஸ்ட்ராபெர்ரி சாகுபடி; அசத்தும் அரசு தோட்டக்கலைப் பண்ணை!

ஆனால், புதிய பொருளாதாரக் கொள்கை, அந்நிய முதலீடு, தனியார் ஃபிலிம் நிறுவனங்களின் போட்டி போன்ற பல காரணங்களால் ஆலை பிற்காலத்தில் நலிவுற்றது. தொழில்நுட்ப வளர்ச்சியின் காலச்சக்கரத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் தடம்புரண்டு கைவிடப்பட்ட தொழிற்சாலையாக அறிவிக்கப்பட்டு தொழிலாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

ஒருகாலத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்த இந்தத் தொழிற்சாலை வளாகம், இன்றைக்கு எண்ணற்ற பறவைகள், பூச்சிகள், காட்டு மாடுகள், கடமான்கள் மற்றும் சிறுத்தை, புலி, செந்நாய் போன்ற விலங்குகளின் புதிய புகலிடமாக மாறியிருக்கிறது.

ஊட்டி ஃபிலிம் தொழிற்சாலை
ஊட்டி ஃபிலிம் தொழிற்சாலை

கைவிடப்பட்ட இந்த பிரமாண்ட தொழிற்சாலை இப்போது எப்படி இருக்கிறது என்பதை அறிய வனத்துறையிடம் சிறப்பு அனுமதி பெற்றுக்கொண்டு வனத்துறை ஊழியர், சூழலியல் செயற்பாட்டாளர் மற்றும் நமது புகைப்படக்கலைஞருடன் தொழிற்சாலை மெயின் கேட்டுக்குச் சென்றோம். வனத்துறையிடம் முறையாக அனுமதி பெற்று, வனத்துறை ஊழியரோடு உள்ளே செல்ல முயன்றும் நம்மை உள்ளே செல்ல விடாமல் திருப்பி அனுப்பினர். ``மெயின் பில்டிங் இருக்குற மெயின் கேட் வழியா உங்கள அனுப்ப முடியாது. தேவைப்பட்டா வேற வழியா போயி வேற ஏரியாவ பார்த்துக்கோங்க" என்றார் காவலாளி ஒருவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சற்றுத் தொலைவில் வாகனத்தில் பயணித்து வனப்பகுதியில் நடக்கத் தொடங்கினோம். சிறிது தூர நடையிலேயே காட்டுமாடு மற்றும் அதைப் பின்தொடர்ந்த சிறுத்தையின் கால்தடங்களைப் பார்க்க முடிந்தது. வழி நெடுகிலும் பல இடங்களில் பல்வேறு வன விலங்குகளின் எச்சங்களையும் கால்தடங்களையும் பார்த்துக் கொண்டே நடந்தோம். மூன்று மாடி உயரத்துக்கு எழுப்பப் பட்டிருந்த தொழிற்சாலையின் சுவரைப் பற்றி காட்டுக் கொடிகளும் சீகை, சாம்பிராணி மரங்களும் அதே உயரத்துக்கு வளர்ந்துள்ளன.

சிறுத்தையின் கால்தடங்கள்
சிறுத்தையின் கால்தடங்கள்

ஆளரவமற்ற அந்தக் காட்டில் அப்போதே எழுப்பப்பட்ட கோயிலையும் தேவாலயத்தையும் பொலிவுபடுத்திக் கொண்டிருந்தனர் சிலர். நடைபாதையை நீண்ட பசுங்குகையாக மாற்றியிருந்த செஸ்ட்ரம் களைத்தாவரங்களை விலக்கியபடியே நடந்து குடியிருப்பு ஏரியாவை அடைந்தோம். அதிகாரிகள், தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் வசித்துச் சென்ற நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் அனைத்தும் புதர் மண்டிய நிலையில், நடுக்காட்டில் ஒரு பாழடைந்த நகரத்தைப் போன்று காட்சியளித்தன.

புதர்‌ மண்டிய குடியிருப்புகளைச் சுற்றிலும் எண்ணற்ற பறவைகளின் கீச்சொலிகளைக் கேட்க முடிந்தது. குடியிருப்புப் பகுதிக்குச் சற்றுத் தொலைவில் அமைந்துள்ள காமராஜ்சாகர் அணைக்கரையில் நீர்காகம், புள்ளமூக்குத்தாரா போன்ற நீர்ப்பறவைகளையும்‌ காண முடிந்தன.

ஊட்டி ஃபிலிம் தொழிற்சாலை
ஊட்டி ஃபிலிம் தொழிற்சாலை
150 ரகங்கள், 2.20 லட்சம் மலர் நாற்றுகள்; செப்டம்பர் சீசனுக்கு தயாராகும் ஊட்டி பூங்கா!

வனத்தைக் கைப்பற்றி, வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு ஓஹோவென கொடிகட்டிப்‌ பறந்த இந்தத் தொழிற்சாலை வளாகம், இன்றைக்கு ஆளரவமற்று மனிதர்களால் கைவிடப்பட்ட பகுதியாக இருத்தாலும், காடும் காட்டுயிர்களும் சத்தமின்றி தங்களின் இடத்தை மீட்டுவருவதைக் கண்பட காண முடிந்தது.

நம்முடன் பயணித்த சூழலியல் செயற்பாட்டாளர் வசந்த் பாஸ்கோ பேசுகையில், ``சோலை மரங்ளும் புல்வெளிகளும் நிறைந்த இந்தப் பகுதி புலிகளின் வாழ்விடமாகவும், யானைகள் வந்துச் செல்லும் வழித்தடமாகவும் இருந்தது. இந்தத் தொழிற்சாலை நிறுவப்பட்டதற்குப் பின் வன விலங்குகள் இடம்பெயர்ந்துவிட்டன. தொழிற்சாலை நடவடிக்கைகள் முழுமையாகக் கைவிடப்பட்டபின் மீண்டும் வன விலங்குகள் வரத்தொடங்கியுள்ளன. இது ஒரு நல்ல அறிகுறியாக உள்ளது. பூர்வீகத் தாவரங்கள் மீண்டு வரும் அதே வேளையில், அந்நிய களைத்தாவரங்களும் அளவுக்கு அதிகமாக ஆக்கிரமித்து வருகின்றன" என்றார்.

ஊட்டி ஃபிலிம் தொழிற்சாலை
ஊட்டி ஃபிலிம் தொழிற்சாலை

இது குறித்து நம்மிடம் தெரிவித்த நீலகிரி வனத்துறை அதிகாரிகள், ``இங்குள்ள 320 ஏக்கர் பரப்பளவுள்ள நிலம் முழுவதும் வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வரவுள்ளது. வன விரிவாக்கத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து இங்குள்ள வன விலங்குகள் பாதுகாக்கப்படும்" என்றனர்.

எழில் கொஞ்சும் இவ்வனம் இயற்கையின் வசமாகுமா அல்லது வளர்ச்சியின் பெயரால் மீண்டும் மனிதர்கள் வசமாகுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு