Published:Updated:

`விலங்குகளின் மீட்புப்பணியே பயனின்றிப் போகிறது!' - வன கால்நடை மருத்துவர் இன்றி தவிக்கும் நீலகிரி

வன விலங்குகள் ஆபத்தில் சிக்கும்போதெல்லாம்... `கோவையிலிருந்து மருத்துவர்கள் வர வேண்டும். முதுமலையிலிருந்து வர வேண்டும்' என வன கால்நடை மருத்துவருக்காகக் காத்துக்கிடப்பதிலேயே, பெரும்பாலான மீட்புப் பணிகள் துயரத்தில் முடிந்து விடுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வன வளமும் வன விலங்குகளும் நிறைந்திருக்கும் நீலகிரியில் வன கால்நடை மருத்துவர்களும் வன விலங்குகளுக்கான சிகிச்சை மையங்களும் இல்லாததால், ஆபத்தில் சிக்கி உயிரிழக்கும் வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

அண்மையில் எல்லநள்ளியில் உள்ள ஒரு கேரட் தோட்டத்தில் பைக் பிரேக் கம்பி மூலம் வைக்கப்பட்ட சுருக்கு வலையில் ஆண் சிறுத்தை ஒன்று சிக்கி பல மணி நேரம் உயிருக்குப் போராடியது. வனத்துறைக்கு உரிய நேரத்தில் தகவல் கிடைத்தும், வன கால்நடை மருத்துவர் வரத் தாமதமானதால், வனத்துறையினரின் கண்ணெதிரிலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தது, அந்தச் சிறுத்தை.

வன விலங்கு மீட்பு பணி
வன விலங்கு மீட்பு பணி

ஊட்டி, ஃபெர்னில் பகுதியில் பள்ளத்தில் தவறி விழுந்த காட்டுமாட்டை மீட்க வனத்துறையினர் சென்றும், வன கால்நடை மருத்துவர்கள் இல்லாததால் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் பல மணி நேரம் போராடி உயிரிழந்தது அந்த மாடு.

கோத்தகிரி பகுதியில் சுருக்கு வலையில் சிக்கிய புலியை மீட்க ஒரு நாள் முழுக்க கால்நடை மருத்துவர்கள் வருகைக்காகக் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால், கம்பியுடன் அந்தப் புலி காட்டுக்குள் தப்பி ஓடிய அவலமும் நடந்துள்ளது.

கட்டபெட்டு பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் மர்மமாக இறந்து கிடந்த காட்டுமாட்டை உடற்கூறாய்வு செய்யாமலேயே புதைத்து மறைத்தனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவும், இறந்த காட்டுமாட்டின் உடலைத் தோண்டியெடுத்து கால்நடை மருத்துவரை வைத்து கூறாய்வு செய்தனர். இது போன்று சம்பவங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

யானை, கரடி, சிறுத்தை, காட்டுமாடு போன்ற வன விலங்குகள் ஆபத்தில் சிக்கும்போதெல்லாம்... `கோவையிலிருந்து மருத்துவர்கள் வர வேண்டும். முதுமலையிலிருந்து வர வேண்டும்' என வன கால்நடை மருத்துவருக்காகக் காத்துக்கிடப்பதிலேயே, பெரும்பாலான மீட்புப் பணிகள் துயரத்தில் முடிந்துவிடுகின்றன.

வன விலங்கு மீட்புப் பணி
வன விலங்கு மீட்புப் பணி

நாட்டின் முதல் பல்லுயிர் வளம் மிகுந்த பகுதியாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் அதிக வன விலங்குகள் இருக்கின்றன. மனித விலங்கு மோதலும் அதிக அளவில் இருக்கின்றன. மனிதத் தவறுகளால் ஆபத்தில் சிக்கும் வன விலங்குகளை மீட்க வேண்டிய பணிகளும் அதிகம் இருக்கின்றன. இத்தகைய மீட்புப் பணிகளில், உரிய நேரத்தில் வன கால்நடை மருத்துவரின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கால்நடை மருத்துவருக்கும் வன கால்நடை மருத்துவருக்கும் நிறையவே வித்தியாசங்கள் இருக்கின்றன. வன விலங்குகளைக் கையாளும் அனுபவம், மயக்க மருந்தின் அளவு, துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தும் உத்தி, வன விலங்குகளின் தன்மைகள் போன்றவற்றை அறிந்த வன கால்நடை மருத்துவரால் மட்டுமே மீட்புப் பணியை வெற்றிகரமாகச் செய்ய முடியும். வனமும் வன விலங்கு அடர்த்தியும் நிறைந்த நீலகிரி வனக்கோட்டத்தில் வன கால்நடை மருத்துவர் இல்லையென்பது சாதாரண ஒரு விஷயமாகத் தோன்றலாம். ஆனால், இந்த அலட்சியத்துக்குப் பின்னால் இருக்கும் வன இழப்பு என்பது மிகப்பெரியது.

வன விலங்கு மீட்புப் பணி
வன விலங்கு மீட்புப் பணி
கூரையைப் பிய்த்துக்கொண்டு வீட்டுக்குள் விழுந்த காட்டு மாடு; கதவை உடைத்து மீட்ட வனத்துறையினர்!

தோல்வியில் முடிந்த பல மீட்புப் பணிகளில் கண்ணீர் சிந்திய வனத்துறையின் கடைநிலை பணியாளர் ஒருவர், ``அனிமல் எந்த ஏரியால மாட்டிக்கிட்டாலும் மக்கள் மூலமா உடனே தகவல் வந்துடும் சார். நாங்க டீமோட போய் சுத்திவளைச்சு நிப்போம். டாக்டர் வரணும், வெயிட் பண்ணுங்கனு சொல்லுவாங்க. நாள் கணக்கா காத்துக்கிடந்து கடைசியில எங்க கண்ணு முன்னாடியே துடிதுடிச்சு சாகும். 3 குட்டிங்களோட ஊருக்குள்ள வந்த தாய் கரடி கேட்ல மாட்டிக்கிச்சு. உடனே லேசா மயக்க ஊசி கொடுத்து கம்பிய அறுத்து வெளிய விட்டிருந்தா கரடி தப்பிச்சுடும். ஆனா, டாக்டருக்காகக் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை. காத்திருந்தும் ஒண்ணும் நடக்கலை. டாக்டர் வேணும்னு பல தடவை சொல்லிட்டோம். யாருமே கண்டுக்கல சார்" என்றார் ஆதங்கத்துடன்.

`ஊட்டியில் நிரந்தர வன கால்நடை மருத்துவரைப் பணியில் அமர்த்துவதோடு, வன விலங்குகளுக்கான சிகிச்சை மையம் ஒன்றையும் அமைக்க வேண்டும்' என்று வலியுறுத்தி பல ஆண்டுகளாகக் குரல் கொடுத்து வரும் வன விலங்குகள் பாதுகாப்பு செயற்பாட்டாளர் சாதிக் அலியிடம் பேசினோம்.

``நீலகிரி டிவிஷன் ரொம்ப பெரிய பரப்பளவு கொண்டது. கிட்டத்தட்ட தினமுமே வன விலங்குகள் மீட்புப் பணிகள் இருக்கும். வருங்காலத்துல இன்னும் அதிகமாகலாமே தவிர குறைய வாய்ப்பில்லை. நீலகிரில இதுவரை வன கால்நடை மருத்துவரே கிடையாது. பல வருஷமா போராடி முதுமலைக்கு ஒரு டாக்டர் அப்பாயின்ட்மென்ட் பண்ணிருக்காங்க. அவருக்கும் கூடலூர் ஏரியா மற்றும் வளர்ப்பு யானைகளைப் பராமரிக்கும் பணி இருக்கு. குன்னூர் கோத்தகிரி ஏரியால மீட்புப்பணி இருந்தா முதுமலை அல்லது கோவையில இருந்து டாக்டர்கள் வரணும். அதுக்கு ஒரு நாள் ஆகிடும். கால்நடைத்துறை மூலமா இல்லாம வனத்துறையே நேரடியா ஒரு வன கால்நடை மருத்துவரை ஊட்டியில் நியமிக்கணும். அதோட வன விலங்குகள் சிகிச்சை மையத்தையும் அமைச்சிட்டா, விலங்குகளை வண்டலூருக்குக் கொண்டு போக வேண்டிய அவசியம் இருக்காது" என்றார்.

வன விலங்கு மீட்புப் பணி
வன விலங்கு மீட்புப் பணி
இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினாலே பூமியைக் காப்பாற்றிவிடலாமா? வீகன் பிரசாரமும் உண்மையும்

நீலகிரி மாவட்ட வனத்துறையின் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``வைல்டு லைஃப் வெட்னரியன் இல்லாம நிறைய பிராப்ளம் இருக்கிறது உண்மைதான். இங்க பர்மனென்ட் டாக்டர்ஸ் வேணும்னு அரசாங்கத்துக்கிட்ட கேட்டுருக்கோம்" என்றார்.

வனத்துறையின் அலட்சியத்தால் இன்னும் எத்தனை வன விலங்குகளை இழக்கப் போகிறோம் என்பதுதாம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவலையாக இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு