Published:Updated:

`நிதி'க்காகவே காட்டுத் தீ; டிகாப்ரியோ -பிரேசில் அதிபர் மோதல்! - பற்றியெரியும் `அமேசான்' அரசியல்

ஜெய்ர் பொல்சொனாரோ - லியானார்டோ டிகாப்ரியோ
ஜெய்ர் பொல்சொனாரோ - லியானார்டோ டிகாப்ரியோ

பிரேசிலில் அமேசான் காட்டுத் தீயைப் பற்றவைத்த குழுவுக்கு நிதியுதவி அளித்ததாக அந்நாட்டு அதிபர் சுமத்திய குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார் ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ.

உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளான அமேசான் காடுகள் சமீபத்தில் பற்றியெரிந்த நிகழ்வை அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம். அவ்வப்போது நடக்கும் நிகழ்வுதான் என்றாலும், இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட அமேசான் காட்டுத் தீ பெரும் விவாதப் பொருளானது. காட்டுத் தீயை அணைக்க அரசுகளுடன் உலக நாடுகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் கைகோத்தன. ஒருவழியாக தீ அணைக்கப்பட்டுவிட்டது. ஆனால், அதைச் சுற்றியுள்ள அரசியல் தீ அதை இன்னமும் அணையாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது.

Amazon Fires
Amazon Fires
AP

அமேசான் காட்டுத் தீயை அணைக்க ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ நிதியுதவி செய்வதாக அறிவித்தார். ஆனால், அவர் அமேசான் காட்டுத் தீயைப் பற்றவைத்த குழுவினருடன் நெருக்கமாக இருந்தார்; அவர்களுக்கு நிதியுதவி செய்தார் என்று புதுக் குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் தற்போதைய பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சொனாரோ.

தீவிர வலதுசாரி ஆதரவாளரான பொல்சொனாரோ, கடந்த 2018-ம் ஆண்டு அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போதே தனது அமேசான் காடுகள் குறித்த கொள்கையால் பல்வேறு விமர்சனத்துக்கு ஆளானார். அமேசான் மழைக்காடுகள் குறித்து வணிகநோக்கில் அவர் பேசியது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.

Jair Bolsonaro
Jair Bolsonaro

இந்த நிலையில், அந்நாட்டு மக்களிடையே வானொலியில் கடந்த வியாழக்கிழமை உரையாற்றிய அவர், `அமேசான் காடுகளில் தீயைப் பற்றவைத்த குழுவினருக்கு டிகாப்ரியோ 5,00,000 அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக அளித்திருக்கிறார். உலக அளவில் நன்கொடைகளை அதிகம் ஈர்ப்பதற்காகவே டிகாப்ரியோ இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கிறார்’’ என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக எந்த ஆதாரத்தையும் வெளியிடாத பிரேசில் அதிபர், டிகாப்ரியோ அளித்த நிதி, அமேசானின் தீயைப் பற்றவைத்த குழுவினருக்கே என்று கூறினார். அதே குற்றச்சாட்டை மீண்டும் கடந்த வெள்ளிக்கிழமை முன்வைத்த அதிபர் பொல்சொனாரோ, `இதனால் எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது’’ என்றும் கடுகடுத்தார்.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

`இது அரசியலால் எரியும் தீ!' தப்பிப்பிழைக்குமா அமேசான்?

இது சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு லியானார்டோ டிகாப்ரியோ மறுப்புத் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ள டிகாப்ரியோ, `அமேசான் காடுகளுக்கு பேரழிவு ஏற்பட்டிருக்கும் இந்தச்சூழலில், தங்கள் இயற்கை மற்றும் காலாசார பாரம்பர்யத்தைக் காக்கப் போராடும் பிரேசில் மக்களுக்கு நான் துணை நிற்பேன். இன்றைய சூழலில் சுற்றுச்சூழலைக் காக்கத் தேவையான அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்துக்கு அவர் ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு.

மாற்றுக்கிடையாத இந்தச் சூழலியல் அமைப்பின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கும் நிலையில், அவற்றைப் பாதுகாக்கும் குழுக்களோடு நிற்பதில் பெருமை கொள்கிறேன். அந்த ஆதரவுக்கு அவர்கள் தகுதியானவர்கள். அமேசான் காடுகளைக் குறிவைப்பவர்களுக்கு நாம் உதவி செய்யவில்லை. பிரேசில் மக்களின் எதிர்காலத்துக்காக அமேசான் காடுகளைப் பாதுகாக்க முழுமூச்சாக ஈடுபட்டிருக்கும் இதுபோன்ற குழுக்கள், உள்ளூர் அரசுகள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உதவுவதில் உறுதியாக இருக்கிறேன்'' என்று பதிவிட்டிருக்கிறார்.

அமேசான் காட்டுத்தீயை அணைக்கப் போராடி வரும் `Alter do Chão brigade' என்ற தன்னார்வத் தனியார் தொண்டு நிறுவனத்துக்கு லியானார்டோ டிகாப்ரியோ உதவி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தொண்டு நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு முதல் அமேசான் காட்டுப் பகுதியில் ஏற்படும் தீயை அணைக்கு தீயணைப்பு வீரர்கள், ராணுவம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்குத் தொடர்ந்து உதவி வருகிறார்கள். சமீபத்தில் பிரேசிலின் வடக்கு மாகாணமான பாரா பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கவும் இவர்கள் உதவி செய்தனர். அந்தத் தீயில் சுமார் 1,600 கால்பந்து மைதானங்கள் அளவுக்குச் சமமான காடுகள் எரிந்து நாசமாயின.

லியானார்டோ டிகாப்ரியோ
லியானார்டோ டிகாப்ரியோ

அதேநேரம், அந்தத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சிலர், காட்டுத் தீயைப் பற்றவைத்தவர்களுடன் தொடர்பில் இருப்பதாக பிரேசிலின் உள்ளூர் போலீஸார் குற்றம்சாட்டுகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக Alter do Chão brigade தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 3 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாகவும் பின்னர் இரண்டு நாள்களில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், தங்கள் அமைப்பைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்படவில்லை என அந்தத் தொண்டு நிறுவனம் சார்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பற்றியெரியும் உலகின் நுரையீரல்... அமேசான் தீ சொல்லும் அழிவுச்செய்தி! #PrayforAmazonas

World Wide Fund for Nature எனப்படும் இயற்கைக்கான உலகளாவிய நிதியத்திடம் புகைப்படங்களைச் சமர்ப்பித்து டிகாப்ரியோ உள்ளிட்டோரிடம் இருந்தும் உலகம் முழுவதும் இருந்தும் அதிக அளவில் நிதி திரட்டவே அமேசான் காடுகளுக்கு இவர்கள் தீவைத்தார்கள் என்று பிரேசில் அரசு அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், இந்தக் குற்றச்சாட் WWF-ன் பிரேசில் பிரிவு மறுத்திருக்கிறது. குறிப்பிட்ட அந்தக் குழுவினருக்கு 70,000 ரியால்கள் (16,800 அமெரிக்க டாலர்கள்) அளவுக்கே நிதி உதவி செய்ததாக அந்த அமைப்பு கூறியிருக்கிறது. அதுவும் தீயணைப்புக் கருவிகள் வாங்கவே இந்த உதவியைச் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Amazon Fires
Amazon Fires
AP

அமேசான் காட்டுப் பகுதியில் தீ ஏற்பட்டு அழிந்ததற்கு தனியார் தொண்டு நிறுவனங்களே காரணம் என கைகாட்டுகிறார் அதிபர் பொல்சொனாரோ. ஆனால், Alter do Chão brigade தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களோ அதிபரின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது என்று விளக்கம் கொடுக்கிறார்கள். அம்னஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் கிரீன் பீஸ் போன்ற அமைப்புகளும் பிரேசில் அதிபர் மற்றும் அந்நாட்டு அரசு மீது குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். `அமேசான் மழைக்காடுகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, மற்றவர்கள் மீது குற்றச்சாட்டை வைப்பதிலேயே அதிபர் குறியாக இருக்கிறார்' என்கிறார்கள் பிரேசில் சூழலியல் ஆர்வலர்கள்.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

அடுத்த கட்டுரைக்கு