Published:Updated:

அழிவின் விளிம்பில் `மரங்களின் தாத்தா’ பவோபாப்... காலநிலை மாற்றம் காரணமா?

பவோபாப்
பவோபாப் ( pixabay )

விலங்குகளில் பிரமாண்டமான டைனோசர் அழிந்ததைப் போல, தாவரங்களின் பிரமாண்டமான பவோபாப் மரங்களும் அழியும் நிலையில் இருக்கிறது.

அனைத்து உயிர்களுக்குமான வரம் தாவரம். நுண்ணுயிர்களிலிருந்து பிரமாண்ட யானைகள் வரை, அனைத்திற்கும் தாவரங்கள் உணவு, உறைவிடத்தைத் தருகின்றன. மனிதனுக்குத் தேவையான உடைகளும் தாவரங்களின் கருணை. ஒவ்வொரு பகுதியின் சூழலுக்கு ஏற்ப அங்கு வசிக்கும் உயிர்கள் உருவாக்கப்படுகின்றன. மனிதர்கள் அதனைச் செயற்கையாக மாற்றிக்கொள்கிறார்கள் என்பது வேறுகதை. மனிதர்கள் அபார்ட்மென்ட் வாழ்க்கைக்குப் பழகுவதற்கு முன்பே, பன்னெடுங்காலமாக அந்த வாழ்க்கையைப் பறவைகளும் தாவரங்களும் வாழ்ந்து வருகின்றன. ஒரு பெரிய ஆலமரம், தனது ஒவ்வொரு அடுக்கிலும், பல பறவைகளை வசிக்க இடமளித்து வருகிறது. அந்த வகையில் மனித நாகரிகத்துக்குத் தாத்தாக்கள், தாவரங்கள்.

பவோபாப்
பவோபாப்
pixabay

நம் ஊர் ஆலமரம்போல், ஆப்பிரிக்கா கண்டத்துக்கு ஒரு ராட்சத மரம் இருக்கிறது. உண்மையிலேயே ராட்சத உருவம்தான். 30 மீட்டர் உயரம் 50 மீட்டர் சுற்றளவுகொண்ட பிரமாண்டம் இந்த மரங்கள். இதன் தண்டுப்பகுதி வீங்கி இருக்கும். அதனால் உள்பகுதியில் அதிக வெற்றிடம் இருக்கும். இதை மக்கள் வசிப்பிடமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். பவோபாப் என்று அழைக்கப்படும் இந்த மரங்கள் ஆப்பிரிகாவின் அடையாளங்களுள் ஒன்று. கம்பீரத்துக்கு எடுத்துக்காட்டு. 32 ஆப்பிரிக்க நாடுகளில் இந்த மரங்கள் இருக்கின்றன. கிராமப்புற ஆப்பிரிக்காவின் வறண்ட, ஏழ்மையான பகுதிகளில் பவோபாப் மரங்கள் வளர்கின்றன. பவோபாப் தோட்டம் என்று எதுவும் இல்லை; ஒவ்வொரு மரமும் சமூகம் அல்லது குடும்பத்துக்குச் சொந்தமானவை.

ஒரு மனிதனுக்குத் தேவையானவை மூன்று. உணவு, உடை, இருப்பிடம். இந்த மூன்றையுமே இந்த ஒரு மரம் தருகிறது. குறிப்பாக, வறண்ட பகுதிகளில் தண்ணீர்தான் உயிர் நீர். பவோபாப் மரத்தின் நடுப்பகுதியில் குழிகள் இருக்கும். அது ஒரு இயற்கையான மழைநீர் சேகரிப்பு கலன். வறண்ட பகுதியில் தாகத்துடன் அலையும் மனிதர்களின் தாகத்தை தீர்ப்பது இந்தத் தாவரம்தான். அவற்றின் சத்தான இலைகள் வனவிலங்குகள் மற்றும் வளர்ப்பு விலங்குகளுக்குத் தீவனமாகிறது. அதே இலைகளை, மக்கள், கீரையைப் போல வேகவைத்து உண்கிறார்கள். பவோபாப்பின் நார்ச்சத்து மிக்க பட்டையைப் பயன்படுத்தி, துணி, கூடைகள் தயாரிக்கப்படுகின்றன. இது, பாரம்பர்ய மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரமே வறண்ட பகுதிகளின் நீர் மற்றும் பழங்களின் முக்கிய ஆதாரமாக உள்ளது. இதன் பழங்கள் கிளையில் 6 மாதங்களுக்கு மேல் இருக்கும். வெயிலில் காய்ந்து தேங்காய் ஓடுபோல ஆகிவிடும். அதன் கூழ் பகுதி காய்ந்து பொடியாக மாறிவிடும். அதற்குப் பிறகு கீழே விழும். இந்தப் பழத்தை எடுத்து உடைத்தால் உள்ளே மக்காச்சோள தக்கை போல் விதைகளுடன் இருக்கும் பகுதியை எடுத்துச் சலித்து, கஞ்சி காய்ச்சி குடிக்கிறார்கள். இதில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது அழகுப்பொருள்கள் தயாரிப்பில் பயன்படுகிறது. அழகு உலகின் ரகசியம் என இதன் பழங்கள் கருதப்படுகின்றன.

பவோபாப்
பவோபாப்
pixabay

மரங்களின் வெற்று உட்புறங்கள் தங்குமிடமாக இருக்கிறது. பழங்குடியின மக்களால் சடங்கு நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதனால்தான் இதை ஆப்பிரிக்காவின் `வாழ்க்கை மரம்' என்று அழைக்கிறார்கள். இந்த மரங்கள், வறண்ட காலங்களில் இலைகளை இழந்து, ஒவ்வொரு ஆண்டும் ஒன்பது மாதங்களுக்கு இலைகள் இல்லாமல் இருக்கும். இத்தனை சிறப்பு வாய்ந்த பவோபாப் மரங்கள் தற்போது அழியும் நிலையில் இருக்கின்றன. இந்தத் தாவரம் ஒன்றுதான், இன்று உயிருடன் இருக்கும் மிகப்பெரிய மற்றும் நீண்ட காலம் வாழும் தாவரம் ஆகும். கடந்த 12 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவின் மிக மூத்த 2,500 ஆண்டுகளுக்கும் மேலான 13 மரங்களில் 9 பவோபாப் மரங்கள் இறந்துவிட்டன. இது காலநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

தைவானில் உள்ள உலக காய்கறி மகத்துவ மையத்தின் பாதுகாப்பான மற்றும் நிலையான காய்கறி மதிப்புச் சங்கிலிகள் ஆய்வுத்திட்டத்தின் தலைவரும் விஞ்ஞானியுமான சீனிவாசன் ராமசாமியிடம் இது தொடர்பாகப் பேசினேன்.

``பவோபாப் (Baobab) என்ற இந்த மரம், இலவம்பஞ்சு வகையைச் சார்ந்தது. இந்த மரமும் பருத்திக் குடும்பத்தைச் சார்ந்ததுதான். மடகாஸ்கர் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டவை. இருப்பினும், பிற்காலத்தில் இவை ஆசிய மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. ஆப்பிரிக்காவின் ஒரு சில பகுதிகளில் இருக்கும் இவ்வகை மரங்கள், பல்லாயிரம் ஆண்டுகள் வயதுடையவை. ஜிம்பாப்வே நாட்டிலிருந்த 2,450 வயதுடைய மரம் ஒன்று, 2011-ம் ஆண்டு இறந்துவிட்டது. 2,000 ஆண்டுகள் வயதுடைய இரண்டு மரங்களில் ஒன்று நமீபியாவிலும், மற்றொன்று தென்னாப்பிரிக்காவிலும் இருக்கின்றன. நமீபியாவில் இன்னொரு மரம் சுமார் 1,275 ஆண்டுகள் வயதுடையது என்று கணக்கிடப்பட்டுள்ளது. பல்லாயிரம் ஆண்டுகள் வயதுடைய இவ்வகை மரங்களில் சில இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இறப்பதற்குக் காரணமாகப் பருவநிலை மாறுபாடு சுட்டிக்கட்டப்படுகிறது.

சீனிவாசன் ராமசாமி
சீனிவாசன் ராமசாமி

விலங்குகளில் பிரமாண்டமான டைனோசர் அழிந்ததைப் போல, தாவரங்களின் பிரமாண்டமான பவோபாப் அழியும் நிலையில் இருக்கிறது. இந்த நூற்றாண்டுதான் பவோபாப் இனத்தின் இறுதி நூற்றாண்டாக இருக்கும் என்ற கருத்து வலுத்து வருகிறது. இந்நிலையில், இந்த இனத்தைத் தொடர்ந்து பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விஞ்ஞானிகள் குழு ஆய்ந்து வருகிறது’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு