Published:Updated:

கழுத்தைத் துளைத்த குண்டுகள்... குறிவைக்கப்படும் வனப் பாதுகாவலர்கள்! - அமேசானில் என்ன நடக்கிறது?

அமேசானுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் சமூக ஆர்வலர்களுக்கு ஜாய்ர் போல்சோனாரா பதவி காலத்தில்தான் அதிக அச்சுறுத்தல் வருகிறது என்கின்றனர்.

குவாஜாஜாரா
குவாஜாஜாரா

அமேசானில் தங்கள் நிலத்துக்காக போராடி வந்த பழங்குடியின இளைஞர் ஒருவர் சட்ட விரோத கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளார். அமேசானில் 400 இனங்களைச் சேர்ந்த 3 கோடி பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். உலகின் ஆக்சிஜன் உற்பத்தியில் மொத்தம் 20 சதவிகிதம் பங்கு வகிப்பது அமேசான் மழைக்காடுகள்தான். அமேசானை குறிவைத்து பல்வேறு சட்ட விரோத கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. சட்ட விரோத கும்பல்களால் அமேசான் பழங்குடிகள் கொல்லப்படுகின்றனர். அமேசானில் அடிக்கடி ஏற்படும் காட்டுத்தீக்கும் இந்தச் சட்டவிரோத கும்பல்கள்தாம் காரணம் என்கின்றனர் சூழலியலாளர்கள்.

காடுகள்
காடுகள்

அமேசான் பூர்வக்குடிகளின் நிலங்களைப் பாதுகாக்க ‘வனப் பாதுகாவலர்கள்’ என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்தக் குழுவில் உறுப்பினராக இருந்த பவுலோ பவுலினோ குவாஜாஜாரா என்ற இளைஞர்தான் தற்போது சுட்டுக்கொல்லப்பட்டார். சட்டவிரோத கும்பலின் தாக்குதலுக்குள்ளான மற்றொரு நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். அராரிபோயா காட்டுப்பகுதியில் குவாஜாஜாரா வேட்டையாடிக்கொண்டிருந்தபோது சட்ட விரோதமாக மரம் வெட்டும் கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார். குவாஜாஜாராவின் கழுத்தை துப்பாக்கிக் குண்டுகள் துளைத்திருந்தன. 5 பேர் கொண்ட கும்பல் இவர்களைச் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. குவாஜாஜாராவுடன் சென்ற மற்றொரு நபர் குண்டு காயங்களுடன் அங்கிருந்து தப்பி தனது கிராமத்துக்கு வந்துள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்துப் பேசிய பழங்குடிகள், `அரசு அனைத்தையும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. எங்கள் நிலங்களின் மீது படையெடுப்பு நடக்கிறது. எங்கள் தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். நாங்கள் குற்றவாளிகளாக்கப்படுகிறோம்’ எனத் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தக் கொலையில் ஈடுபட்டவர்களை நீதிக்கு முன்பு நிறுத்துவோம்” என்று கூறியுள்ளார் அந்நாட்டு நீதித்துறை அமைச்சர்.

பவுலினோ குவாஜாஜாரா
பவுலினோ குவாஜாஜாரா

பிரேசிலில் இதுபோன்று நடப்பது முதன்முறையல்ல. அமேசான் காடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த சமூக ஆர்வலர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். பிரேசில் அதிபராகக் கடந்த ஆண்டு ஜாய்ர் போல்சோனாரா பதவியேற்றார். அமேசானுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் சமூக ஆர்வலர்களுக்கு இவரது பதவி காலத்தில்தான் அதிக அச்சுறுத்தல்கள் வருகின்றன என்கின்றார்கள். அமேசானை மட்டும் வைத்துக்கொண்டு எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்பதே பொல்சனாராவின் வாதமாக இருக்கிறது. அமேசான் ஒன்றும் உலகின் நுரையீரல் கிடையாது. இங்கு உற்பத்தியாகும் ஆக்சிஜனை இங்குள்ள மரங்களே உட்கொள்கின்றன என சமீபத்தில் அவர் ஐ.நா-வில் உரையாற்றியிருந்தார்.