Published:Updated:

கூடலூராக மாறிவரும் குன்னூர்!

நாட்டில் மனிதன் - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் ஒன்று கூடலூர். யானை, காட்டு மாடு, கரடி, சிறுத்தை, புலி - மனிதன் எதிர்கொள்ளல்கள் அங்கு அதிகம்.

பிரீமியம் ஸ்டோரி

ந்தப் பட்டியலில் தற்போது குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளும் இடம் பிடித்திருக்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில், குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் யானை, காட்டு மாடு, கரடி போன்ற மிருகங்கள் தாக்கி பத்து பேர் இறந்துள்ளனர். சுமார் ஐம்பது பேர் காயம் அடைந்துள்ளனர். அதேசமயம் மின்சாரம் வைத்தும், விஷம் வைத்தும் ஏராளமான விலங்குகள் மனிதர்களால் கொல்லப்பட்டுள்ளன.

கூடலூராக மாறிவரும் குன்னூர்!

நான்கு பக்கங்களிலும் மலைகள் சூழ அழகிய பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது கொலக்கொம்பை கிராமம். இந்தக் கிராமத்தைச் சுற்றி தூதூர்மட்டம், தைமலை, டெராமியா, முசாபுரி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. தோட்டத் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் இந்தப் பகுதியில், ஏழு தனியார் தேயிலை பெருந் தோட்டங்கள் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளாக இந்தப் பகுதிகளில் நடைபெறும் மனிதன் - வனவிலங்கு எதிர்கொள்ளல் அசம்பாவிதச் சம்பவங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிப் போட்டிருக்கின்றன. மக்கள் வெளியே சென்று, வீடு திரும்பும்வரை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுள்ளனர். ரேஷன் கடை வரிசையில் நின்றவர், தோட்டத்துக்குச் சென்றவர், பேருந்திலிருந்து இறங்கி நடந்தவர்... எனப் பலரும் காட்டு மாடு தாக்கி இறந்துள்ள னர். கரடி தாக்கியதில் பலர் காயம் அடைந்துள்ளனர். பல ஆண்டுகளாக யானையே இல்லாத இந்தப் பகுதியில், கடந்த மூன்று ஆண்டுகளாக யானைகளும் வரத் தொடங்கிவிட்டன. அதில் ஒரு யானைக் கூட்டம் இந்தப் பகுதியிலேயே தங்கிவிட்டது.

இதுகுறித்து தூதூர்மட்டம் பகுதியைச் சேர்ந்த செல்லதுரை கூறுகையில், ‘‘ஐம்பது வருடங்களாக இந்த ஊரில்தான் இருக்கிறோம். கடந்த சில வருடங்களாக நடப்பதுபோல முன் எப்போதும் நடந்தது இல்லை. காட்டு மாடு, சிறுத்தை, கரடி என்று தினமும் ஏதாவது ஒரு விலங்கு ஊருக்குள் வந்துவிடுகிறது. தெருக்குள் ளேயே யானைகள் நுழையத் தொடங்கிவிட்டன.

கூடலூராக மாறிவரும் குன்னூர்!

பகலில் வேலைக்குப் போகக்கூட பயமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு ஒருவரையாவது காட்டு மாடு, கரடி விரட்டுகிறது. இதுவரை எங்கள் பகுதியில் மட்டும் காட்டு மாடு தாக்கி நான்கு பேர் பலியாகிவிட்டார்கள். பத்து பேருக்கு மேல் காயம் அடைந்திருக்கிறார்கள். காடுகளில் விலங்குகளுக்கு தீனி எதுவும் இல்லை. அதனால்தான் அவை வெளியே வருகின்றன. யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து, பயிரையெல்லாம் சாப்பிட்டுவிடுகின்றன. சென்ற வாரம் கல்லூரிவிட்டு வரும்போது, என் மகளை காட்டு மாடு ஒன்று விரட்டியது. கடவுள் புண்ணியத்தில் மேட்டின் மீது ஏறி வந்து உயிர் பிழைத்தாள்” என்றார் படபடப்புடன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன், ‘‘பணம் படைத்த சிலரின் பேராசையால் இயற்கைக்கு எதிரான வன்முறை தொடர்கிறது. காட்டை அழித்தும் கட்டுமானங்களைக் கட்டியும் அவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். இதனால் அப்பாவி தோட்டத் தொழிலாளர்கள், வன விலங்குகளினால் தாக்குதலுக்குள்ளாகி இறக்கின்றனர்” என்றார்.

செல்லதுரை, சரவணன், வசந்த் பாஸ்கோ
செல்லதுரை, சரவணன், வசந்த் பாஸ்கோ

சூழலியல் எழுத்தாளரும் காட்டுயிர் ஆர்வலரு மான வசந்த் பாஸ்கோ கூறுகையில், “மனிதன் - வனவிலங்கு எதிர்கொள்ளல் மிக மோசமான கட்டத்தில் உள்ளது. நீலகிரியில் வனப்பகுதிகள் துண்டாடப்படுவதுதான் இதற்குக் காரணம். நம் கண்ணுக்கு யானை, புலி, காட்டு மாடு உள்ளிட்ட விலங்குகள் மட்டுமே வன உயிரினங் களாகத் தெரிகின்றன. காட்டில் பல்லாயிரம் உயிரினங்கள் தங்கள் வாழிடத்தைத் தேடி அலைகின்றன. அதிகரிக்கும் சுற்றுலா, வேளாண்மை, கட்டடங்கள் போன்றவை அந்த உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பருவ மழையில் ஏற்படும் மாற்றம், கற்பூரம், லேண்டினா கேமிரா என்று வனங்களில் அதிகரிக்கும் களைத் தாவரங்கள் உள்ளிட்ட பாதிப்பு களாலும் வனமும் வன உயிரினங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற காரணங்களால் பெரிய வன உயிரினங்கள் தங்களுக்கான புதிய பாதைகளை, புதிய இடங்களைத் தேடும் கட்டாயத்தில் உள்ளன. இதனால் மனிதன் - வனவிலங்கு எதிர்கொள்ளல் அதிகம் நடைபெறும் பகுதியாக குன்னூரின் கொலக்கொம்பை பகுதி மாறிவருகிறது” என்றார்.

வனத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். “யானை, காட்டு மாடு, கரடி பிரச்னை நாள்தோறும் அதிகரித்தபடியே உள்ளது. தினமும் புகார்கள் வருகின்றன. நாங்களும் முடிந்தவரை விரட்டுகிறோம். எந்தப் பலனும் இல்லை. மக்கள், விலங்குகளைக் கூண்டுவைத்துப் பிடிக்கச் சொல்லி சண்டை போடுகிறார்கள். எல்லாவற்றையும் அப்படி பிடிப்பது சாத்தியம் இல்லை. வனத்துறையில் ஆள் பற்றாக்குறையால் திணறிவருகிறோம்” என்கின்றனர்.

சரியான திட்டமிடல் இல்லை எனில் நீலகிரியில் மனிதன் - வன விலங்கு எதிர்கொள்ளல் அதிகரிக்குமே தவிர, குறைய வாய்ப்பே இல்லை. என்ன செய்யப்போகிறது அரசு?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு