Published:Updated:

ஓராண்டு போராட்டத்திற்குப் பின் நடந்த கனிமவளப் பாதுகாப்பு மாநாடு... தப்புமா காவிரி டெல்டா?

Professor Jayaraman
Professor Jayaraman

கிட்டத்தட்ட ஓராண்டுகாலப் போராட்டத்திற்குப் பிறகு நேற்று தமிழ்நாட்டின் இயற்கைவளம் மற்றும் கனிமவளப் பாதுகாப்பு மாநாடு நடந்துமுடிந்துள்ளது. டெல்டாவைக் குறிவைக்கும் திட்டங்களுக்கு எதிராக அழுத்தமான எதிர்ப்புக்குரல்கள் இந்த மாநாட்டில் பதிவுசெய்யப்பட்டன.

வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் விளைநிலங்களிலிருந்து விவசாயிகளையும், கடலிலிருந்து மீனவர்களையும், காடுகளிலிருந்து பழங்குடிகளையும், வாழ்விடங்களிலிருந்து மக்களையும் வளர்ச்சி என்ற பெயரில் விரட்டியடிக்க கூடிய சூழல் தமிழகத்தில் எழுந்துள்ளது. இதை எதிர்த்து பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்துவருகின்றன. இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் 'தமிழ்நாட்டின் இயற்கை வளம் மற்றும் கனிம வளப் பாதுகாப்பு மாநாடு' நேற்று நடந்தது. கடந்த வருடம் செப்டம்பர் 23-ல் முதன்முதலில் திட்டமிடப்பட்ட இந்த மாநாடு, சுமார் ஒருவருட போராட்டத்திற்குப் பின்பு நேற்றுதான் நடந்தது.

Professor Jayaraman in Conference
Professor Jayaraman in Conference

எதிர்காலத்தில் காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உடனடியாக அறிவிக்கவேண்டும், நெடுவாசல், கதிராமங்கலம் போன்ற பகுதிகளில் எண்ணெய் எடுப்பதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ளவேண்டும், நதிகள் இணைப்பு என்ற பெயரில் மக்களைக் காசு கொடுத்து தண்ணீரை வாங்க வைக்கமாட்டோம் என்ற உத்தரவாதத்தை அரசு தரவேண்டும்... இப்படி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில், தமிழகத்தின் இயற்கை வளம் மற்றும் கனிமவளப் பாதுகாப்பு மாநாடு சென்ற வருடம் செப்டம்பர் 23-ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை திருவிழந்தூரில் நடத்தவிருப்பதாக கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் அறிவித்திருந்தார். ஆனால், மாநாட்டை நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. அதையடுத்து பேராசிரியர் ஜெயராமன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மயிலாடுதுறையில் மாநாடு நடத்த அனுமதி வழங்குவது குறித்து காவல்துறை பரிசீலனை செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார்.

மத்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தியதால் பேராசிரியர் ஜெயராமன் மீது 24 வழக்குகள் உள்ளது எனவும், மேலும் மாநாட்டில் பழ.நெடுமாறன், தொல்.திருமாவளவன், தஞ்சை மணியரசன், சீமான், திருமுருகன் காந்தி, டிடிவி தினகரன் உதயகுமார், பூவுலகின் நண்பர்கள், பாமக வக்கீல் பாலு என எதிர் எதிர் முகாமில் உள்ள அமைப்புகள் மற்றும் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்வதால் அவர்கள் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது போன்ற ஏழு காரணங்களை தெரிவித்து உயர்நீதிமன்ற உத்தரவு நகல் கைகளுக்கு கிடைப்பதற்கு முன்பே மாநாட்டிற்கு தடை நோட்டீஸ் ஒட்டியது காவல்துறை.

11 மாதங்களுக்கு பிறகு நீதிமன்ற அனுமதியோடு உயர்நீதிமன்றத்தின் பல்வேறு நிபந்தனைகளுக்குட்பட்டு நேற்று (ஞாயிறு) மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் தமிழ்நாட்டின் இயற்கை வளம் மற்றும் கனிம வளப் பாதுகாப்பு மாநாடு மயிலாடுதுறையில் தொடங்கியது.

Professor Jayaraman
Professor Jayaraman

மாநாடு தொடங்கிய சில மணி நேரத்திலேயே அரங்கத்திற்குள் வந்த காவல்துறையினர், 'மயிலாடுதுறை நகர் பகுதி மற்றும் அரங்கத்திற்கு வரும் வழிகளில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை முற்றிலுமாக அகற்றிவிட்டு மாநாட்டை நடத்துங்கள்' என்று உத்தரவிட்டனர். பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒரு வருடம் காத்திருந்து பெற்ற அனுமதியை மீறியும் காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகள், இந்த அரசு யார் பக்கம் நிற்கிறது என்ற சந்தேகத்தை மீண்டும் கிளறியது.

பின்னர், தமிழ்நாட்டின் இயற்கை வளம் மற்றும் கனிம வள பாதுகாப்பு மாநாட்டின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன்பேசினார்.

"ஒற்றை லைசென்ஸ் கொள்கையின்கீழ் வரைமுறை இல்லாமல் ஷேல் மற்றும் மீத்தேன் வாயு ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக எடுக்க தனியாருக்கு உரிமை வழங்கப்படுகிறது. இதன்மூலம் வேதாந்தா போன்ற நிறுவனங்கள் உரிமம் பெற்று காவிரிப் படுகையை அழிக்கும் செயலை தொடங்கி இருக்கின்றன. இதை உடனடியாக தடுத்துநிறுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும். இதைக் காப்பாற்ற தமிழக அரசு உடனடியாக காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். என்பதை வலியுறுத்தவே இந்த மாநாடு." என்றார்.

"காடு, மலை, நீராதரங்கள் அழிக்கப்பட்டு தமிழ்நாட்டின் இயற்கை வளமும், கனிமவளங்களும் சூறையாடப்பட்டு மக்கள் வாழமுடியாத நிலப்பரப்பாக தமிழ்நாடு மாறிவிடும் அபாயம் ஏற்பட்டு விட்டது. மீத்தேன், ஷேல் மீத்தேன், ஹைட்ரோகார்பன் என்று மரக்காணம் முதல் இராமநாதபுரம் வரை நீரையும், நிலத்தையும் நச்சு மயமாக்கி, மக்களை நோயாளிகளாக்கக் காத்திருக்கும் எண்ணெய் - எரிவாயு திட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும்.

Removed Banners
Removed Banners

மூன்று சுற்று ஏலங்களில் காவிரிப் படுகையில் 7000 சதுர கிலோ மீட்டருக்கு மேல் ஹைட்ரோகார்பன் திட்டங்கள், மண்ணை மரண பூமியாக்க போகும் பல நூறு ஹைட்ரோகார்பன் கிணறுகள் என டெல்டா பகுதியை நாசமாக்கும் மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

கூடங்குளம் அணு உலை பூங்காவும், அணுக்கழிவு மையமும் ஒட்டுமொத்தத் தமிழகத்துக்கும் உருவாக்கப்படும் ஒரே சவக்குழி. தேனி பொட்டிபுரம் நியூட்ரினோ ஆய்வகம் மனிதகுலம் காணாத கதிர்வீச்சு அபாயம் கொண்டது. மக்களுக்குச் சொந்தமான ஆறுகளை பிடுங்கி கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைத்து ஆற்று நீரை காசு கொடுத்து வாங்க மக்களை கட்டாயப்படுத்தும் நதிகள் இணைப்பு திட்டம்.

Vikatan

இவை அனைத்தும் விளைநிலங்களில் இருந்து விவசாயிகளையும், கடலிலிருந்து மீனவர்களையும், காடுகளிலிருந்து பழங்குடிகளையும், வாழ்விடங்களிலிருந்து மக்களையும் வளர்ச்சி என்ற பெயரில் விரட்டியடிக்கும் செயல். இதையெல்லாம் தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்று திரண்டு போராடுவோம். காவிரி படுகையிலிருந்து அகதிகளாக வெளியேறாமல், வாழ்வோம்" என்றார்.

மேலும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், சூழலியலாளர்கள் என பல்வேறு தரப்பட்ட கருத்துரையாளர்கள் தங்கள் கருத்துகளை இயற்கை வளம் மற்றும் கனிம வள பாதுகாப்பு மாநாட்டில் பதிவு செய்தனர்.

Vikatan

இந்த மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

"தமிழர்களின் தொன்மை நாகரிகம் மலர்ந்த காவிரிப்படுகை பாரம்பர்ய வேளாண் மண்டலம் மற்றும் தமிழகத்தின் நெற்களஞ்சியம் ஆகும். எனவே காவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

உலகம் முழுவதும் Permanent Sovereignty of Nations over their Natural Resources என்ற ஐ.நா. அவையால் ஏற்கப்பட்ட, பிரகடனத்தின்படியும், உலக நாடுகளின் ஏற்பளிப்பு மற்றும் நடைமுறைகளின்படியும், தமிழ்நாட்டின் இயற்கை வளம் மற்றும் கனிமவளங்கள் தமிழகத்திற்கே சொந்தம். அதனை இந்திய அரசு பெருமுதலாளிய நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டு, உரிமம் அளித்து, கனிமச் சூறைக்கு அனுமதி அளிக்க முடியாது. தமிழக அரசு தமிழ்மக்களின் காப்பாளர் என்ற முறையில் தமிழகக் கனிம வளங்களைக் காக்கவும், கையாளவும் உரிமை பெற வேண்டும். தமிழகத்தின் கனிம இறையாண்மையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

ஓ.என்.ஜி.சி. மற்றும் தனியார் எண்ணெய் எரிவாயு நிறுவனங்களை தமிழகத்திலிருந்து வெளியேற்றுவதுடன், இதுவரை எடுத்துவந்த கனிம மதிப்பை கணக்கிட்டு 80 விழுக்காட்டை தமிழகத்துக்கு வழங்கவேண்டும். மேலும் தொடங்கப்பட்டுள்ள கனிம எடுப்புத் தகவமைப்புகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

எண்ணெய் எரிவாயு திட்டங்களின் பேராபத்தை உணர்ந்து நாகாலந்து சட்டமன்றம் அனைத்து எண்ணெய் எரிவாயு நிறுவனங்களை வெளியேற்றியதை முன்னுதாரணமாகக் கொண்டு, தமிழகத்திலும் எண்ணெய் எரிவாயுத் திட்டத்தை அனுமதிப்பதில்லை என்ற கொள்கை முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

விளை நிலத்தில் அத்துமீறி எரிவாயு குழாய்ப் பதிக்கும் நிறுவனங்களுக்கும் அவர்களுடைய முகவர்களுக்கும் சட்டப் பாதுகாப்பு தரும் பெட்ரோலியம் மற்றும் மினரல் குழாய்கள் நிலப்பயன்பாட்டு உரிமை பெறுதல் சட்டம் 1962, திருத்தப்பட வேண்டும். இச்சட்டத்திலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். மேலும் 2011-ல் சட்டம் திருத்தப்பட்டு, குழாய் சேதமுற்றால் 7 முதல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை நில உடைமையாளருக்கு வழங்க வழி செய்வது கூடுதல் கொடுமையாகும். மத்திய அரசு தமிழகத்தில் தன் குழாய்ப் பதிப்பு அறிவிப்புகளைத் திரும்பப் பெறவேண்டும்.

ஒரு மாநிலம் விரும்பாவிட்டால் அல்லது இந்திய அரசியல் சட்டம் ஊர் மன்றங்களுக்கு அளித்துள்ள பஞ்சாயத்துராஜ் அதிகாரத்தை மதிக்கும் வகையில், ஓர் ஊரின் கிராமசபை ஏற்காவிடில், அவ்வூரில் பெட்ரோலியக் குழாய் பதிப்பும், பேரழிவுத் திட்டங்களும் கைவிடப்படும் வகையில், 1962-ஆம் ஆண்டின் PMP சட்டத்தில் திருத்தங்கள் செய்ய இம்மாநாடு கோருகிறது. விளைநிலங்கள் வழி எரிவாயுக் குழாய்கள் அமைப்பதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

காவிரிப்படுகையில் விளைநிலங்கள் விவசாயத்திற்குதான் பயன்படுத்தப்பட வேண்டுமேயொழிய, எண்ணெய்க் கிணறுகள் அமைப்பதற்கு அல்ல. நிலம்தர மறுக்கும் இயக்கத்தை படுகை முழுவதும் நடத்தப்படும் என்றும் ஜெயராமன் அறிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு