Published:Updated:

மர்மங்களின் கதை: கொரோனா வைரஸை அடுத்து புவிக்கு என்ன ஆபத்து?-பென்குயின்களாகும் நாம்?! |நிறைவுப் பகுதி

மர்மங்களின் கதை
மர்மங்களின் கதை

அந்த வருடத்தில் எம்பரர் பென்குயின்கள் ஹேலி வளைகுடாவுக்கு வரவில்லை. அறிவியலாளர்கள் என்ன நடந்தது எனத் தெரிந்துகொள்ள ஆய்வு நடத்தினர்.

2009-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 17-ம் தேதி.

மாலத்தீவு நாட்டு அரசியல் வட்டாரம் பரபரப்புகொண்டிருந்தது. அமைச்சரவைக் கூட்டம் நடக்கவிருந்தது. பொதுவாக ஒரு நாட்டில் அமைச்சரவை கூடுவது சகஜம்தான். பல விஷயங்களைத் தீர்மானிக்கவும் விவாதிக்கவும் கூடுவதுண்டு. மாலத்தீவு நாட்டில் கூடவிருந்த அமைச்சரவைக் கூட்டத்துக்கு மட்டும் ஒரு வித்தியாசம் இருந்தது. அந்த வித்தியாசம் விவாதிக்கப்படவிருக்கும் பிரச்னையால் ஏற்படவில்லை. கூட்டம் நடத்தப்படவிருக்கும் விதத்தால் ஏற்பட்டது. அமைச்சரவைக் கூட்டம் நடக்கவிருந்தது கடலுக்கடியில்.

அமைச்சரவைக் கூட்டத்தில் பங்குபெறவிருந்த அமைச்சர்கள் கடலுக்குள் செல்வதற்கான பாதுகாப்பு உடைகளை அணிந்துகொண்டனர். கருவிகளையும் எடுத்துக்கொண்டனர். கடலுக்கு அடியில் அமைச்சரவைக் கூட்டம் கூடியது.

கூட்டம்
கூட்டம்

அமைச்சரவைக் கூட்டம் 30 நிமிடங்கள் நீடித்தது. கடல் மட்டத்திலிருந்து ஆறு மீட்டர் ஆழத்தில் கூட்டம் நடந்தது. கடலுக்குள் செல்வதற்கான பயிற்சியை ஒரு நாளுக்கு முன்னரே அமைச்சர்கள் எடுத்துக்கொண்டனர். மூன்று அமைச்சர்கள் மட்டும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அவர்களின் ஆரோக்கியத்தில் பிரச்னை ஏற்படும் என மருத்துவர்கள் கூறியதால் அவர்களால் கலந்துகொள்ள முடியாமல் போனது. பிற அமைச்சர்கள் அனைவரும் ஜனாதிபதியின் தலைமையில் கடலுக்கு அடியில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுடன் கூடியிருந்தனர்.

கடலுக்கு அடியில் கூடியிருந்த அமைச்சர்கள் கைகளை அசைத்து உரையாடிக்கொண்டனர். வெள்ளை போர்டுகளும் இருந்தன. ஓர் ஆவணத்தில் அமைச்சர்கள் கையெழுத்திட்டனர். அந்த ஆவணம் கொண்டிருந்த செய்தி இதுதான்.

“உலகப் போரை சந்திக்கும் தீவிரத்துடன் நாம் ஒன்றிணைந்து வெப்பநிலை உயர்வதைத் தடுக்க வேண்டும். காலநிலை மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. பூமியில் வசிக்கும் ஒவ்வொருவரின் உரிமையையும் பாதுகாப்பையும் அது அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. நம் எல்லாருக்கும் பயன்படக்கூடிய ஓர் உடன்பாட்டுக்கு வர வேண்டும். எல்லாரும் உயிர்வாழ வேண்டும் என்கிற புரிதலுக்கு நாம் வர வேண்டும். மாலத்தீவு இன்று காப்பாற்றப்படல்லை எனில், நாளை மொத்த உலகையும் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு எதுவும் இருக்காது.” என்றது அச்செய்தி.

மாலத்தீவு நாட்டு அமைச்சர்கள் அந்த ஆவணத்தில் உடன்பட்டு கையெழுத்திட்டனர். அந்தச் செய்தியை முதலில் கேட்பவர்களுக்கு சற்று அதிர்ச்சியாகவும் வேடிக்கையாகவும் இருந்தது. ஆனால் அதற்கு பின் தொடங்கி இன்று வரை உலகில் நடந்துகொண்டிருக்கும் விஷயங்களைப் பார்க்கும் எவருக்கும் இப்போது அந்தச் சம்பவம் வேடிக்கையாகத் தெரிவதற்கான வாய்ப்பு இருக்காது.

பல தீவுகளின் கூட்டமே மாலத்தீவு நாடு. இந்தியப் பெருங்கடலில் இடம்பெற்றிருக்கிறது. உலகில் தாழ்வான பகுதிகளில் இடம்பெற்றிருக்கும் நாடுகளில் மாலத்தீவும் ஒன்று. நாட்டின் 80 சதவிகித நிலம் கடல் மட்டத்தைவிட ஒரு மீட்டர் அளவு உயரத்தில் மட்டுமே இருக்கிறது. உயர்ந்துகொண்டிருக்கும் கடல் மட்டம் நிச்சயமாக மாலத்தீவு நாட்டுக்கு உவப்பான செய்தியாக இருக்க முடியாது.

மர்மங்களின் கதை: கொரோனா வைரஸை அடுத்து புவிக்கு என்ன ஆபத்து?-பென்குயின்களாகும் நாம்?! |நிறைவுப் பகுதி

2009-ம் ஆண்டில் கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் மக்களை அந்த நாடு கொண்டிருந்தது. தற்போது 5.3 லட்சம் பேர். ஏற்கெனவே 2004-ம் ஆண்டு மாலத்தீவுக்கு பயங்கரமான ஆண்டாக இருந்தது. இந்தியப் பெருங்கடலோரப் பகுதிகளை சுனாமி தாக்கிய ஆண்டு. பிற நாடுகளை போன்ற இழப்பு மாலத்தீவுக்கு இல்லை. அளவில் சின்ன நாடு என்பதாலும், பல தீவுகளை கொண்டிருந்ததாலும் பாதிப்பு பெருமளவில் இருந்தது. பொருளாதாரரீதியாக மட்டும் 28,000 கோடி ரூபாய் இழப்பு நேர்ந்திருந்தது. நாட்டின் உள்கட்டமைப்பு பெரும் சேதத்துக்கு உள்ளானது. சுனாமியிலிருந்து மாலத்தீவு சர்வதேச விமான நிலையம் மீளுவதற்கே பல நாள்களாகின.

தொடர்ந்து பூமி வெப்பமடைவதாலும், பனிப்பாறைகள் உருகுவதாலும் கடல் மட்டம் உயர்ந்துகொண்டிருந்தது. மறுபக்கத்தில் மாலத்தீவு நாட்டில் உள்நாட்டுப் அரசியல் பிரச்னைகளும் நேர்ந்துகொண்டிருந்தன. இத்தகைய சூழலில்தான் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தியிருந்தார் மாலத்தீவு நாட்டு ஜனாதிபதி முகமது நஷீத்.

மாலத்தீவு கடலுக்குள் மூழ்கிவிடும். மாலத்தீவு மட்டுமல்ல, கடலோரப் பகுதிகள் எல்லாவற்றுக்குமே அதுதான் கதி.

மர்மங்களின் கதை: கொரோனா வைரஸை அடுத்து புவிக்கு என்ன ஆபத்து?-பென்குயின்களாகும் நாம்?! |நிறைவுப் பகுதி

2008-ம் ஆண்டு நஷீத் ஜனாதிபதி ஆனதும் கடல் மட்டம் உயர்வதால், மாலத்தீவு நாட்டு மக்களை இடம்பெயரவைக்கத் தேவைப்படும் நிதியைச் சேகரிக்கும் திட்டத்தை அறிவித்தார். ஆனால், மாலத்தீவின் பொருளாதாரத்தால் அத்தகைய சுமையை ஏற்க முடியாதென்பதால், அந்தத் திட்டத்தை கைவிட்டார். 2009-ம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு முக்கியமான உறுதியை நஷீத் ஏற்றார். அடுத்த பத்து வருடங்களில் கார்பன் வாயு வெளியாவதை முற்றிலுமாகக் குறைத்து, இயற்கை ஆற்றல் சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்கப்போவதாக அறிவித்தார். இவை அனைத்திலும் சோகம் ஒன்றிருக்கிறது. நஷீத் முயலும் எந்த நடவடிக்கையும் அந்த நாட்டில் மட்டும் முன்னெடுக்கப்பட்டால் பயனளிக்காது. மொத்த உலகமும் சேர்ந்து குறிப்பிட்ட நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் மாலத்தீவும் காப்பாற்றப்படும். உலகமும் காப்பாற்றப்படும். மாலத்தீவு காப்பாற்றப்பட கூட்டு நடவடிக்கை தேவை. ஆகவேதான் முகமது நஷீத் தன் நாட்டைக் காப்பாற்ற தான் மட்டும் முயன்றால் போதாது என்பதைப் புரிந்துகொண்டார். உலகுக்குத் தன் வேண்டுகோளை முன்வைக்க விரும்பினார். பிறகுதான் கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம் என்கிற ஏற்பாடு நேர்ந்தது.

உலகம் முழுக்க இருக்கும் கடல் மட்டம் 1990-களில் இருந்ததைவிட மூன்று அங்குலங்கள் உயர்ந்திருக்கிறது. காரணம், புவிவெப்பம் உருக்கிய பனிப்பாறைகள். தற்போதைய நிலையில் காலநிலை மாற்றம் மற்றும் புவிவெப்பமடைதல் பற்றி அதிகம் பேசப்படுகிறது. புவிவெப்பத்தை அதிகரிக்கும் கார்பன் வாயு வெளியீட்டைக் குறைக்க உலக நாடுகள், ஐக்கிய நாடுகள் சபையால் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றன. அவையும் ஒப்புக்கேனும் சம்மதித்துவைத்திருக்கின்றன. இதில் சோகம் என்னவெனில், உலக நாட்டு அரசுகள் தாங்கள் ஒப்புக்கொண்ட அளவில் கார்பன் வெளியீட்டைக் குறைத்தாலும் 2100-ம் ஆண்டை எட்டுகையில் உலகின் கடல் மட்டம் இரண்டடி வரை உயரும். கார்பன் அளவைக் குறைக்கவில்லை எனில், பல அடிகளுக்கு கடல் மட்டம் உயரும் வாய்ப்பை யாராலும் தடுக்க முடியாது. இப்போது வரையிலுமே உலகச் சூழல் மனித வாழ்க்கைக்கு நம்பிக்கைதரும் வகையில் இல்லை.

மர்மங்களின் கதை: கொரோனா வைரஸை அடுத்து புவிக்கு என்ன ஆபத்து?-பென்குயின்களாகும் நாம்?! |நிறைவுப் பகுதி

முகமது நஷீதுதான் மாலத்தீவு நாட்டின், முதல் ஜனநாயக ஆட்சியாளர். அவருக்கு முன்னர் மவ்மூன் அப்துல் கயூம் என்பவர் மாலத்தீவு நாட்டை 30 வருடங்களாக ஆண்டு வந்தார். ஜனநாயகம் என்கிற பெயரில் ஒப்புக்கென தேர்தல்வைத்து அதிலும் முறைகேடுகள் செய்து ஜெயித்து தொடர்ந்து ஆட்சியில் இருந்தார். ஆரம்பத்திலிருந்தே மவ்மூன் அப்துல் கயூம்முக்கு பல எதிர்ப்புகள் வந்தபோதிலும் அவற்றை வெற்றிகரமாக முடக்கினார். வெளிநாட்டில் படித்துவிட்டு நாடு திரும்பிய நஷீத்துக்கும் ஆட்சி மீது வெறுப்பு இருந்தது. பத்திரிகைகளில் கட்டுரை எழுதினார். அரசின் பார்வைக்குள் வந்தார். பல முறை கைதுசெய்யப்பட்டார். வெளியே வந்தார். கிட்டத்தட்ட 20 முறைக்கும் மேல் சிறை சென்று வந்தார். நஷீத்துக்கு இருந்த செல்வாக்கும், பிற கட்சிகள் உடன் சேர்ந்தமையாலும் வேறு வழியின்றி மவ்மூன் அப்துல் கயூம் பல கட்சித் தேர்தல்களை நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டார். 2008-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நஷீத் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தார். அவரது முதல் கவனம் கடல் விழுங்கிக்கொண்டிருக்கும் நாட்டைக் காப்பாற்றுவதில்தான் இருந்தது.

கடலடி சந்திப்பு நடத்தியும் பெரிய நிதி கிடைக்காததால், 2011-ம் ஆண்டு ஓர் ஆவணப்படத்தில் நடித்தார். படத்தின் பெயர் `Island President.’ `தீவின் ஜனாதிபதி’ என மொழிபெயர்க்கலாம். கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் ஒரு தீவின் ஜனாதிபதியைப் பற்றிப் பேசத் தொடங்கிய படத்தின் பிற்பகுதியில் கதைக்களம் வேறு திசைக்குச் சென்றது. நஷீத்துக்கு ஆதரவு தெரிவித்த கூட்டணிக் கட்சிகள் பிரச்னை செய்யத் தொடங்கின. அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். நஷீத்தின் ஆட்சிக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. நஷீத்தை ஆட்சியைவிட்டு இறக்குவதற்கான வேலைகள் தொடங்கப்பட்டிருந்தன. 2012-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் மாலத்தீவின் முதல் ஜனநாயகபூர்வமான ஆட்சி கவிழ்க்கப்பட்டது. சர்வதேச அழுத்தத்தின் காரணமாக துப்பாக்கிமுனையில் பதவி விலக வைக்கப்பட்டதாகப் பின்னர் நஷீத் குறிப்பிட்டார்.

மர்மங்களின் கதை: கொரோனா வைரஸை அடுத்து புவிக்கு என்ன ஆபத்து?-பென்குயின்களாகும் நாம்?! |நிறைவுப் பகுதி

வெள்ளை வெளேரென இருக்கும் பனிப்பாறைகள் நிறைந்திருக்கும் கண்டம் அண்டார்டிகா. அங்கு ஹேலி வளைகுடா என ஒரு வளைகுடா வெட்டெல் என்கிற கடலில் இருந்தது. பென்குயின்கள் அதிகம் காணப்படும் பகுதி அது. பென்குயின்களில் முக்கியமான வகை எம்பரர் பென்குயின்கள். ஓவ்வொரு ஏப்ரல் மாதமும் இங்கு வந்து முட்டையிட்டு, டிசம்பரில் குஞ்சு பொரிக்கும் வரை அந்தப் பகுதிதான் அவற்றின் வாழ்விடம்.

2016-ம் ஆண்டு செயற்கைக்கோள்கள் அனுப்பிய புகைப்படங்களில் ஒரு முக்கியமான விஷயம் புலப்பட்டது. அந்த வருடத்தில் எம்பரர் பென்குயின்கள் ஹேலி வளைகுடாவுக்கு வரவில்லை. அறிவியலாளர்கள் என்ன நடந்தது எனத் தெரிந்துகொள்ள ஆய்வு நடத்தினர். 2016-ம் ஆண்டில் ஹேலி வளைகுடாவில் இருந்த பனிப்படலம் உடைந்திருக்கிற தகவலைத் தெரிந்துகொண்டார்கள். வெப்பம் அதிகமாக ஆக, பனி உருகி படலம் இரண்டாக உடைந்து பிரிந்து சென்றிருக்கிறது. எம்பரர் பென்குயின்கள் இனவிருத்தி செய்வதற்கான இடம் இல்லாமல் போயிருக்கிறது.

மர்மங்களின் கதை: கொரோனா வைரஸை அடுத்து புவிக்கு என்ன ஆபத்து?-பென்குயின்களாகும் நாம்?! |நிறைவுப் பகுதி

60 வருடங்களாகத் தொடரும் ஒரு பழக்கம் 2016-ம் ஆண்டில் முடிவுக்கு வந்திருந்தது. இனவிருத்தி செய்ய இடமில்லாமல் போன பிறகு அந்த பென்குயின்களை வேறெங்கும் காண முடியவில்லை. செயற்கைக்கோள்கள் வழியாக பூமி எங்கும் தேடித் துழாவியபோதும் அவை எங்குமே தென்படவில்லை.

ஹேலி வளைகுடாவில் வழக்கமாக இனவிருத்திக்கு வரும் பென்குயினின் எண்ணிக்கைக் கிட்டத்தட்ட பத்து லட்சம்!

எம்பரர் பென்குயின்களின் இனவிருத்திக்கான இடமாக இருந்த பனிப்படலம் எங்கு போயிருக்கும் என நினைக்கிறீர்கள்?

அதிக வெப்பத்தில் உருகி கடலுக்குள் கரைந்துபோயிருக்கும். கரைந்த பனி, கடலின் மட்டத்தை உயர்த்தி நம் வீட்டு வாசலுக்கு வந்து கதவை தட்டும்!

பகுதி 19-க்குச் செல்ல...

மர்மங்களின் கதை: `நிலாவுக்கு அமெரிக்கா உண்மையில் சென்றதா?!' - பகுதி 19
அடுத்த கட்டுரைக்கு