Published:Updated:

`6 கும்கி யானைகள்; 200 ஊழியர்கள்; கேமரா கண்காணிப்பு!' - 5 நாளுக்குப் பின்னர் சிக்கிய ஆட்கொல்லி புலி

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் அருகில் உள்ள கிராமங்களில் மனிதர்களையும், கால்நடைகளையும் கொன்றுவந்த ஆட்கொல்லி புலியை மையக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

புலி
புலி

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்துக்கு அருகில் உள்ள பகுதியில் சவுதஹள்ளி கிராமத்தில் கடந்த 8ம் தேதி காலை 10.30 மணியளவில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த சிவலிங்கப்பா என்ற முதியவரை புலி தாக்கிக் கொன்றது. அவரின் உடலை இழுத்து செல்ல முயன்றபோது அருகில் உள்ள வயல்களில் இருந்து மக்கள் ஓடிவந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி இறந்தவரின் உடலை புலியிடம் இருந்து மீட்டனர். இதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி சிவமாதன் என்ற முதியவரையும் இதே பகுதியில் புலி தாக்கி கொன்றது. மேலும், இந்த பகுதியில் 10 க்கும் அதிகமான மாடுகளை கொன்றது. எனவே, இந்த பகுதியைச் சேர்ந்த 1,000-க்கும் அதிகமான மக்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டு வனத்துறைக்கு நெருக்கடி கொடுத்தனர்.

புலி
புலி

அடுத்த தாக்குதல் ஏற்பட்டால் நிலைமை மோசமாகிவிடும் என்பதை உணர்ந்த கர்நாடக வனத்துறை, அந்த புலியை ஆட்கொல்லி என அறிவித்து 48 மணி நேரத்துக்குள் உயிருடனோ அல்லது சுட்டுபிடிக்கக் களத்தில் இறங்கியது. சுட்டு பிடிக்கக்கூடாது என பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்த நிலையில் உயிருடன் பிடிக்க மட்டுமே வனத்துறையினர் முனைப்பு காட்டிவந்தனர்.

` புலியை சுட்டுக்கொல்ல 48 மணி நேரம் கெடு!' - களமிறங்கிய கர்நாடக வனத்துறை

ஆட்கொல்லி புலியை பிடிக்க 6 கும்கி யானைகள், 6 கால்நடை மருத்துவர்கள், 200-க்கும் அதிகமான வனத்துறை ஊழியர்கள் தொடர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும், 100-க்கும் அதிகமான கேமராக்களை மூலமும், கால்தடம் மூலமும் அடையாளம் கண்டறிந்து தேடி வந்தனர்.

புலி
புலி

இந்தநிலையில் இன்று மதியம் சவுத்தஹள்ளி இந்துப்புரா இடையில் உள்ள வனத்தில் அடர்ந்த புரதரில் புலி இருப்பதை உறுதி செய்தனர். பின்னர், குழுக்களை வரவழைத்து துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினர். சிறிதுநேரத்தில் புலி சோர்ந்து மயக்கமடைந்து. உடனே, வலையைக்கொண்டு போர்த்தி தூக்கிவந்து வாகனத்தில் ஏற்றினர். மனிதர்களையும், கால்நடைகளையும் கொன்றுவந்த ஆட்கொல்லி புலியை உயிருடன் பிடித்த கரநாடக வனத்துறைக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இது குறித்து நம்மிடம் பேசிய பந்திப்பூர் புலிகள் காப்பக அதிகாரி ஒருவர், ``எத்தகைய சிரமம் ஏற்பட்டாலும் இந்த புலியை உயிருடன் பிடிக்கவேண்டும் என்ற முடிவில் தேடுதலில் இறங்கினோம். 5 நாள் தொடர் தேடுதலில் இன்று மதியம் புலி இருக்கும் இடத்தை உறுதி செய்தோம். பின்னர் குழுக்கள் வரவழைக்கப்பட்டு மயக்க ஊசி செலுத்தி பிடித்தோம். மைசூரில் உள்ள வனவிலங்கு மறுவாழ்வு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு புலிக்கு சிகிச்சை அளிக்கப்படும்" என்றார்.

புலி
புலி

புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை ஊழியர் ஒருவர் கூறுகையில், ``இந்த புலிக்கு 6 முதல் 7 வயது இருக்கக்கூடும். உடலில் எந்த காயங்களும் இல்லை. இந்த புலி கபினியில் இருந்து வந்திருப்பது தெரியவந்துள்ளது. சிவலிங்கப்பாவை தாக்கிய இடத்தில் இருந்த கால்தடமும் இந்த புலியின் கால்தடமும் ஒத்துப்போயின. இதன் அடிப்படையில் பின்தொடர்ந்து உறுதி செய்து பிடித்தோம். எப்படி ஆட்கொல்லியாக மாறியது என ஆய்வு செய்வோம். புலியை காட்டில் விடுவதா, சரணாலயத்தில் பராமரிப்பதா என தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி முடிவுகள் எடுக்கப்படும்" என்றார்.

ஆட்கொல்லி என்ற பெயரில் தேடப்பட்டுவந்த புலியை உயிருடன் பிடித்த கர்நாடக வனத்துறைக்கு பாராட்டுகள் குவிகின்றன. அதேபோல் பந்திப்பூர் பகுதி மக்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.