Published:Updated:

குழாய் நீரில் மூளையை உண்ணும் நுண்ணுயிரி... அமெரிக்காவின் டெக்சாஸ் மக்களுக்கு எச்சரிக்கை!

நுண்ணுயிரிகள்
நுண்ணுயிரிகள் ( Pixabay )

நேக்ளேரியா ஃபவ்லேரி என்பது இயற்கையாகவே தண்ணீரில் காணப்படும் நுண்ணுயிரி. பொதுவாக அசுத்தமான நீர் மூக்கின் துவாரங்கள் வழியே செல்லும்போதுதான் இந்த நுண்ணியிரி மூளையைத் தாக்கும்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள லேக் ஜாக்சன் பகுதியில் வசிக்கும் மக்கள் குழாய்த் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காரணம், அந்தக் குடியிருப்புப் பகுதிகளுக்கு வரும் தண்ணீரில் மூளையை உண்ணும் நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன. தண்ணீரின் சுற்றுச்சூழல் தரம் பற்றி டெக்சாஸ் ஆணையகம் நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. அந்தத் தண்ணீரில் நேகலேரியா ஃபாவ்லேரி (Naegleria fowleri) என்ற நுண்ணியிரி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது மூளையைத் தாக்கும் அபாயகரமான நுண்ணுயிரி.

இதையடுத்து, லேக் ஜாக்சன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான ஃப்ரீபோர்ட், ஆங்கிள்டான், ப்ராசோரியா, ரிச்வுட், ஓய்ஸ்டர் க்ரீக், க்ளூட் மற்றும் ரோசன்பெர்க் பகுதிகளில் உள்ள மக்களும் குழாய்த் தண்ணீரை கழிவறைக்கு மட்டும் பயன்படுத்துமாறு கூறப்பட்டுள்ளது. முழுவதுமாக சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின்னர் குடிநீர், உணவுப் பயன்பாடுகளுக்கு குழாய்த் தண்ணீரைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேகலேரியா ஃபாவ்லேரி (Naegleria fowleri) / மூளையைத் தாக்கும் என்று குறிப்பிடப்படும் நுண்ணுயிரி
நேகலேரியா ஃபாவ்லேரி (Naegleria fowleri) / மூளையைத் தாக்கும் என்று குறிப்பிடப்படும் நுண்ணுயிரி
Wikimedia Commons

சனிக்கிழமை அன்று, லேக் ஜாக்சனைத் தவிர பிற பகுதிகளில் இந்தத் தடை திரும்பப் பெறப்பட்டது. ஆனால், குழாய்த் தண்ணீரை குடிக்கப் பயன்படுத்தும்போது கொதிக்க வைத்துக் குடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், குளிக்கும்போது மூக்கு துவாரம் வழியே தண்ணீர் செல்லாமல் பாதுகாப்பாகக் குளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தியே இருக்கும் என்பதால் தண்ணீரைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இந்த மாதத் தொடக்கத்தில் லேக் ஜாக்சனை சேர்ந்த 6 வயதுச் சிறுவன் தண்ணீரில் உள்ள நுண்ணியிர் தாக்கியதால் உயிரிழந்தான். இதையடுத்தே குழாய்த் தண்ணீர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக லேக் ஜாக்சன் நகரத்தின் இயக்குநர் மோடஸ்டா முன்டோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நேக்ளேரியா ஃபவ்லேரி என்பது இயற்கையாகவே தண்ணீரில் காணப்படும் நுண்ணுயிரி. பொதுவாக, அசுத்தமான நீர் மூக்கின் துவாரங்கள் வழியே செல்லும்போதுதான் இந்த நுண்ணியிரி மூளையைத் தாக்கும். இது பெரும்பாலும் உயிரிழப்புவரை ஏற்படுத்தக்கூடியது. அமெரிக்காவில் 2009 - 2018 காலகட்டத்தில் 36 பேர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீர் மாசுபாடு
நீர் மாசுபாடு
Pixabay

இது குறித்து அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையமான சிடிசி (CDC) கூறுகையில், "பொதுவாக இந்த நுண்ணுயிரியானது இயற்கை நீர்நிலைகளில் காணப்படும். ஆனால், அந்தத் தண்ணீரை விழுங்குவதால் மட்டும் ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுவிடாது. மேலும் இது ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்குப் பரவாது" என்றது.

"இந்த நுண்ணுயிரியால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் காய்ச்சல், வாந்தி, கழுத்தை அசைக்க முடியாதது, தலைவலி போன்றவை அறிகுறிகளாகத் தென்படும். இந்த அறிகுறிகள் ஏற்படும் நபர் தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரு வாரத்தில் உயிரிழந்துவிடுகிறார். இதற்கு முன்னர் இந்த வருடத் தொடக்கத்தில் ஃப்ளோரிடாவிலுள்ள ஒரு சில இடங்களிலும் இந்தத் தொற்று கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து பாதுகாப்பாக இருக்க தண்ணீரை முழுமையாக சுத்திகரிப்பு செய்யும்வரை கவனமாகப் பயன்படுத்துவதே ஒரே தீர்வாகும்" என்கின்றனர் சுகாதார அதிகாரிகள். மூக்கின் துவாரங்கள் வழியே தண்ணீர் சென்றுவிடாமல் இருக்க வேண்டும் என்பதுதான் ஒரே பாதுகாப்பு நடவடிக்கை என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு