Published:Updated:

கலங்கவைக்கும் காற்று மாசு!

சென்னை
பிரீமியம் ஸ்டோரி
சென்னை

லண்டன்... டெல்லி... இப்போது சென்னை

கலங்கவைக்கும் காற்று மாசு!

லண்டன்... டெல்லி... இப்போது சென்னை

Published:Updated:
சென்னை
பிரீமியம் ஸ்டோரி
சென்னை

1952, டிசம்பர். லண்டன் நகரத்துக்கு கறுப்பு மாதம் அது. நரகம் என்றால் எப்படி இருக்கும் என்பதை லண்டன் மக்கள் உணர்ந்த நாள்கள் அவை. டிசம்பர் 5-ம் தேதி தரையில் ஊன்றி இருந்த தங்கள் கால்களைக்கூட மக்களால் பார்க்க முடியவில்லை. அவ்வளவு புகை! குறிப்பாக, கிழக்கு லண்டனில் நிலைமை படுமோசமாக இருந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆரம்பத்தில் லண்டன் நகர நிர்வாகமும் சரி... மக்களும் சரி... இதை பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை. சாலையில் நடந்து சென்ற குழந்தைகள், முதியவர்கள் பலரும் திடீரென மூச்சுத்திணறி விழுந்தார்கள். சில மணி நேரத்திலேயே அவர்களை மரணம் ஆட்கொண்டது. அப்போதுதான் விழித்துக்கொண்டது அரசு. ஆனாலும், சமாளிக்க முடியவில்லை. டிசம்பர் 9-ம் தேதிக்குள் பலியானவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தைத் தொட்டது. அடுத்தடுத்த நாள்களில் 12,000 பேர் இறந்தனர். காரணம், லண்டனில் செயல்பட்ட நிலக்கரி ஆலைகள் வெளியிட்ட புகை. கூடவே சேர்ந்துகொண்ட காற்று மாசு மற்றும் பனி. ‘தி கிரேட் ஸ்மோக்’ (The Great Smog) என்று வரலாற்றில் அழைக்கப் பட்டது அது.

காற்று மாசு
காற்று மாசு

டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவு 400 மைக்ரோகிராம் அளவைத் தாண்டிவிட்டது. பலரும் சுவாசக்கோளாறு தொடர்பான பிரச்னைகளில் சிக்கி இருக்கிறார்கள். இந்த நிலையில், தற்போது சென்னையிலும் காற்று மாசுபாடு அதிகரித்துவிட்டதை கடந்த சில நாள்களாக கண்கூடாகவும் ‘சுவாச’பூர்வமாகவும் உணர முடிகிறது. காரணம், சென்னையில் செயல்படும் நிலக்கரி அனல்மின் நிலையங்கள். கூடவே, துறைமுகங்கள், வாகனங்கள், தொழிற்சாலைகள் வெளியிடும் புகை.

லண்டன், டெல்லி, சென்னை
லண்டன், டெல்லி, சென்னை

‘‘கடந்த சில மாதங்களில் சென்னையில் காற்று மாசுபாடு மிக மிக மோசமான அளவில் இருந்தது. தேசிய அளவில் டெல்லியைவிடவும் அதிகமான அளவு இங்கு நிலவியது. விழிப்புஉணர்வு இல்லாததால் இதைப் பற்றி சென்னை மக்கள் பெரியதாகப் பேசவில்லை” என்றார் காற்று மாசுபாட்டுக்கான மருத்துவர்கள் அமைப்பின் உறுப்பினர் டாக்டர் ஜி.சந்திரசேகர். தொடர்ந்து பல தகவல்களையும் அவர் பகிர்ந்துகொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘2016-ம் ஆண்டு முதலே சென்னை நகரம் மூச்சுத்திணறிக்கொண்டிருக்கிறது. நகரமயமாக்கல் மற்றும் நகர விரிவாக்கம் சென்னையில் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, தெற்கை நோக்கி நகர விரிவாக்கம் தீவிரமடைந்துள்ளது. இந்தப் பகுதிகளில் முன்பு இருந்ததைவிட மக்கள்தொகை பல மடங்கு அதிகரித்துவிட்டது. இதனால், வாகனங்கள் 30 மடங்கு பெருகிவிட்டன.

கலங்கவைக்கும் காற்று மாசு!

நவம்பர் முதல் வாரத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் தரவுகளின்படி, தென்னிந்தியத் தலைநகரங்களிலேயே சென்னைதான் மிக மோசமாக மாசடைந்த நகரமாகப் பதிவாகியுள்ளது. (பார்க்க: இன்ஃபோகிராபிக்ஸ்) ‘பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் காற்று மாசுபாடு பிரச்னையை அந்த அரசுகள் கட்டுப்படுத்தத் தவறிவிட்டன’ என்று உச்ச நீதிமன்றம் விமர்சித்துள்ளது. இந்த வரிசையில் சென்னையையும் சேர்க்க வேண்டும். சென்னையில் இந்தப் பிரச்னையைக் கட்டுப்படுத்த அரசுத் தரப்பிலிருந்து பெரியதாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனாலும், இயற்கையாகவே நவம்பர் 12-ம் தேதிக்குமேல் நிலைமை ஓரளவு சீரடையத் தொடங்கியது. அதற்காக, பிரச்னை தீர்ந்துவிட்டது என எடுத்துக்கொள்ளக் கூடாது. சென்னையில் காற்றின் தரம், நாம் வெளியிடும் மாசுபாடுக் காரணிகளால் நாளுக்குநாள் மோசமடைந்து கொண்டேபோகிறது என்பதே உண்மை. டெல்லியில் சுத்தமான காற்று விற்பனைக்கு வந்துள்ளதுபோல் சென்னையிலும் வரலாம்” என்றார்.

காற்றில் உள்ள நுண்துகள் ஒவ்வொன்றின் பருமன் 2.5 மைக்ரோமீட்டர் இருக்க வேண்டும். ஒரு கிலோகிராம் காற்றில் எவ்வளவு நுண்துகள்கள் இருக்கின்றன என்பதைக் கணக்கிடுவதற்கான அளவீடே `Particle Matter’. இதன்படி உலக சுகாதார நிறுவனம் `ஒரு கிலோகிராம் காற்றில் 20 மைக்ரோகிராம் வரை இருக்கலாம். அதைத் தாண்டினால் காற்று மாசு அடைந்ததாகக் கருதப்படும்’ என வரையறுத்துள்ளது. இந்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் இதை 60 மைக்ரோகிராமாக நிர்ணயித்துள்ளது. ஆனால், இங்கு நிலைமை பல மடங்கு மோசம். 2019-ம் ஆண்டில் சென்னையை அதிரவைக்கும் அளவுக்கு காற்று மாசடைந்திருந்த நாள்களைப் பார்ப்போம்.

(அளவு மைக்ரோகிராம்களில்...)

இன்ஃபோகிராபிக்ஸ்
இன்ஃபோகிராபிக்ஸ்

முன்பு குடிநீர்...இப்போது காற்று!

சிலகாலம் முன்பு விற்பனைப் பண்டமாக குடிநீர் மாறியபோதே, `காற்றும் விரைவில் விற்பனைக்கு வரும்’ என்று சூழலியலாளர்கள் எச்சரித்தார்கள். அது தற்போது உண்மையாகியிருக்கிறது. இந்தியாவில் ‘ஆஸ்ஸேர்’, ‘வைடலிடி ஏர்’, ‘பியூர் ஹிமாலயன் ஏர்’ உள்ளிட்ட நிறுவனங்கள் சுத்தமான காற்றை புட்டியில் அடைத்து விற்கத் தொடங்கிவிட்டன. ‘பியூர் ஹிமாலயன் ஏர்’ நிறுவனம் விற்கும் 10 லிட்டர் சுத்தமான காற்றின் விலை 550 ரூபாய்! ஆஸ்திரேலிய நிறுவனமான ‘ஆஸ்ஸேர்’ இந்தியாவில் 7.5 லிட்டர் சுத்தமான காற்றை 1,500 ரூபாய்க்கு விற்கிறது. ஒரு நிமிடத்துக்கு நாம் 8 முதல் 10 லிட்டர் வரை காற்றை சுவாசிக்கிறோம். இதன்படி, சுத்தமானக் காற்றைப் புட்டிகளில் வாங்கி சுவாசிக்க நாம் ஒரு நிமிடத்துக்கு 300 முதல் 400 ரூபாய் வரை விலை கொடுத்தாக வேண்டும். எதிர்காலத்தில் சாமானியர்களுக்கு சுத்தமான காற்று என்பதே கனவாகிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism