Published:Updated:

சென்னை மக்கள் சுவாசத்திலும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்... அதிர்ச்சி ஆய்வறிக்கை... உண்மை என்ன?

நீங்கள் சுவாசிக்கும் காற்றிலும்கூட மைக்ரோ பிளாஸ்டிக் கலந்திருக்கிறது!

சென்னை மக்கள் சுவாசத்திலும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்... அதிர்ச்சி ஆய்வறிக்கை... உண்மை என்ன?

நீங்கள் சுவாசிக்கும் காற்றிலும்கூட மைக்ரோ பிளாஸ்டிக் கலந்திருக்கிறது!

Published:Updated:

2019-ம் ஆண்டு விக்டோரியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு, மனிதர்கள் உணவு வழியாக, நீர் வழியாக, காற்று வழியாக என்று பல்வேறு வழிகளில் பிளாஸ்டிக்கை உட்கொண்டு வருகிறார்கள் என்று நிரூபித்தது. குறைந்தபட்சம் 250 மைக்ரோ பிளாஸ்டிக் துண்டுகளை ஒரு நாளைக்கு மனிதர்கள் உட்கொள்கிறார்கள் என்று அந்த ஆய்வு கூறியது. அதாவது தோராயமாக 94,000 மைக்ரோ பிளாஸ்டிக் துண்டுகளை ஒருவர் ஓராண்டில் உட்கொள்கிறார். இது அனைத்து மனிதர்களுக்குமான அடிப்படைக் கணக்கீடு மட்டுமே. வயது, பாலினம், பணிபுரியும் இடம் மற்றும் வாழ்விடம் ஆகியவற்றின் அடிப்படையில், இந்த அளவு கூடலாம், குறையலாம்.

காற்று மாசுபாடு
காற்று மாசுபாடு

தேசிய கடலோர ஆய்வு மையம் (NCCR) நடத்திய சமீபத்திய ஆய்வில் பட்டினப்பாக்கத்தில் அதிகமாக விற்பனையாகும் கானாங்கெளுத்தி, வஞ்சிரம், சங்கரா, சூறை உட்பட 7 கடல் மீன்களில் மைக்ரோ பிளாஸ்டிக் கலந்திருப்பது தெரியவந்தது. இவற்றில் கடலிலிருந்து பிடிக்கப்பட்ட 80 சதவிகிதம் மீன்களில் மைக்ரோ பிளாஸ்டிக் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செய்தியைக் கேட்டவுடன், உங்களுக்கு மீன் உணவு சாப்பிடுவதற்கே சிறிது அச்சம் ஏற்படலாம். ஆனால், அதைவிட அச்சுறுத்தலான விஷயம், உங்கள் சுவாசத்திலும்கூட மைக்ரோ பிளாஸ்டிக் கலந்திருக்கிறது. பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் கொச்சின் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு தாங்கள் நடத்தியுள்ள ஆய்வில் சென்னை மக்கள் சுவாசிக்கும் காற்றிலுள்ள மணற்புழுதியில் மைக்ரோ பிளாஸ்டிக் கலந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

5 மைக்ரோ மீட்டருக்கும் குறைந்த, மிகவும் நுண்ணிய பிளாஸ்டிக் துண்டுகளைத்தான் மைக்ரோ பிளாஸ்டிக் என்பர். ஒரு இன்ச் அளவுக்குள் 25,400 மைக்ரோ மீட்டர் இருக்கும். ஆகையால், இந்த பிளாஸ்டிக் நுண்துகள்கள் சாதாரண கண்களுக்குத் தெரியாது. முறையாகக் கவனிக்கப்படாத பிளாஸ்டிக் கழிவுகள் உடைந்து சிதறும்போது இந்த நுண்துகள்கள் உருவாகின்றன. அல்லது டூத் பேஸ்ட், ஃபேஸ் வாஷ், நுண்ணிய பிளாஸ்டிக் மணிகள் போன்ற பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தியின்போதும் இந்த நுண்துகள்கள் வெளியேறுகின்றன. மேலும், நம்முடைய துணிகளிலிருந்தும் துவைக்கும்போது சிறுகச் சிறுக உடைந்து இவை வெளியாகின்றன. சமீபத்தில் ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், ஒவ்வொரு நாளும் மக்கள் துவைக்கும் துணிகளிலிருந்து மட்டுமே ஐரோப்பிய நீர்நிலைகளில் 13,000 டன் மைக்ரோஃபைபர் (microfibres) கலப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் கழிவு
பிளாஸ்டிக் கழிவு
நா.ராஜமுருகன்

சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வில் 100 கிராம் மணற்புழுதியில் 5 மைக்ரோ மீட்டருக்கும் குறைந்த அளவுள்ள 200 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடர்த்தியான மக்கள் தொகையைக் கொண்ட தெருக்களில் இந்த அளவு 100 கிராம் மணற்புழுதியில் 265-க்கும் அதிகமாக இருப்பதாகக் குறிப்பிடுகிறது இந்தப் புதிய ஆய்வறிக்கை. வடசென்னையைப் போன்ற தொழில்மயப்படுத்தட்ட பகுதிகளில் இந்த அளவு மேலும் அதிகம். இந்த ஆய்வுக்குழு சென்னையின் காற்றிலிருக்கும் மணற்புழுதியில் கலந்திருக்கும் இந்த பிளாஸ்டிக் நுண்துகள்கள் எங்கிருந்து வருகின்றன, இதன் மூல ஆதாரம் எது என்பதைத் தெரிந்துகொள்ள முயன்றது. அந்த முயற்சியில், பேக்கேஜிங், சமையலுக்குப் பயன்படுத்தும் நான்-ஸ்டிக் பொருள்கள், காஸ்மெடிக் பொருள்கள் போன்றவையே இதற்கான மூல காரணங்கள் எனபதைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆய்வறிக்கையின் முதன்மை ஆசிரியரான, ஆய்வாளர் அருண்குமார் பச்சையப்பன் இதுகுறித்துப் பேசியபோது, ``வடசென்னை மற்றும் தென்சென்னையில் மொத்தமாக 16 பகுதிகளில் இந்த ஆய்வை மேற்கொண்டோம். குடியிருப்பு அதிகமிருக்கும் இடங்களிலும் நெகிழிப் பயன்பாடு அதிகமிருக்கும் பகுதிகளிலும் நெகிழி நுண்துகளின் அளவு மணற்புழுதிகளில் அதிகமாக உள்ளது. தெருக்களில் இருக்கும் தூசுகளின் அளவிலேயே இந்த நெகிழி நுண்துகள்களும் இருப்பதால், அவற்றுடனேயே பயணிக்கின்றது.

ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிகள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் வீசியெறியப்படும் நெகிழிப் பொருள்கள் போன்றவையே தூசுப்படலங்களில் மைக்ரோ பிளாஸ்டிக் கலப்பதற்கு முதன்மையான காரணம்.
ஆய்வாளர் அருண்குமார் பச்சையப்பன்

அதோடு, வாகன டயர்களில் ஏற்படும் தேய்மானங்களின் போதும் இந்த மைக்ரோ பிளாஸ்டிக் வெளியேறுகின்றது. இதனால், மக்கள் சுவாசிக்கும்போது இதை உட்கொள்ள நேரிடுகிறது. மேலும், நம்முடைய நெகிழிக் கழிவுகளைக் கையாளும் முறை இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. சென்னை முழுக்கவே, கழிவுகளைத் திறந்தவெளியில் கொட்டிவிடுவதைத்தான் வழக்கமாகச் செய்கின்றனர். வெப்பம், காற்று, நீர் ஆகியவை அதிகமாகக் கழிவுகளின்மீது படும்போது, நெகிழிப் பொருள்கள் சிறுகச் சிறுக உடைந்து நுண்ணிய துகள்களாக வெளியேறுகின்றன. சாதாரண தூசுகளை மக்கள் சுவாசிக்கும் போது அவற்றோடு சேர்ந்து இந்த நெகிழித் துகள்களும் உள்ளே சென்று பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதுகுறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன" என்று கூறினார்.

சென்னையின் மணற்புழுதியில் கலந்திருக்கும் இந்த பிளாஸ்டிக் நுண்துகள்களில் 92 சதவிகிதம், பெரிய பெரிய பிளாஸ்டிக் பொருள்களிலிருந்து சிறுகச் சிறுக உடைந்து வெளியாகும் நுண்துகள்களாகவே இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் மலை மலையாய் குவித்து வைக்கப்பட்டிருக்கும் நெகிழிக் கழிவுகளிலிருந்து உடையும் நுண்துகள்கள், காற்றின் வழியே இடம் பெயர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குப் பரவுகின்றன. இவைபோக, பெயின்ட், வாகனங்களுக்கான டயர் உற்பத்தி ஆகியவையும் இந்த நுண்துகள்களை வெளியேற்றுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

பெருங்களத்தூர் குப்பைக் கிடங்கு
பெருங்களத்தூர் குப்பைக் கிடங்கு

இன்றைய சூழலில், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்களில் பெரும்பான்மையானவை தயாரிக்கப்படுவது நெகிழியில்தான். அவற்றிலிருந்து உடைந்து சிதறும் இந்த நுண்துகள்கள் குழந்தைகளின் மூக்கு மற்றும் வாய் வழியாக அவர்களின் உடலுக்குள் செல்கின்றன. மேலும், மணற்புழுதியில் இது அதிகமாகக் கலந்திருப்பதால், வெளிப்புறச் சூழலில் விளையாடும் குழந்தைகளின் உடலுக்குள்ளும் இது அதிகமாகச் செல்கின்றது.

இதில், சேகரிப்பட்ட துகள்களைப் பகுப்பாய்ந்து பார்த்தபோது, 9 வகையான பாலிமர் பொருள்களிலிருந்து இவை வருவதைக் கண்டறிந்தார்கள். அதில் 24 சதவிகிதம், பேக்கேஜிங், மின் வயர்கள், பைப்புகள், மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் பொருள்கள் ஆகியவற்றில் பயன்படுத்தும் பாலிவினைல் குளோரைட் என்றழைக்கப்படும் பிவிசி-யிலிருந்து வந்துள்ளன. 19 சதவிகிதம் சமையலறையில் பயன்படுத்தும் நான்-ஸ்டிக் பொருள்கள், ரசாயனப் பொருள்கள் மற்றும் காஸ்மெடிக் பொருள்களிலிருந்து வந்துள்ளன. இவைபோக, இந்த பிளாஸ்டிக் நுண்துகள்களை வெளியேற்றுவதில், பிளாஸ்டிக் பேக்கிங் பொருள்கள், விளையாட்டு பொம்மைகள், குளிர்பான பாட்டில்கள், ஆடை உற்பத்தி ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.

மணற்புழுதி
மணற்புழுதி

அதிக மக்கள் தொகை அடர்த்தியையும் அதிகமாகச் சில்லறை உற்பத்தி நடைபெறும் தென் சென்னை பகுதியான வேளச்சேரியில், 100 கிராம் மணற்புழுதியில் 408 பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் மனித உடம்புக்குள் செல்லும்போது, நுரையீரல் கோளாறு, இதய ரத்தக் குழாயில் கோளாறு, நரம்பு மண்டலக் கோளாறுகள், நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடு, ஹார்மோன் குறைபாடுகள் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். அதிகளவிலான பிளாஸ்டிக் நுண்துகள்களை மனித உடல் உட்கொள்ளும்போது, அவை நம் உடலில் புற்றுநோயைத் தூண்டிவிடும் ஆபத்தும் உள்ளது.

இதுகுறித்துப் பேசிய நுரையீரல் நிபுணர் மருத்துவர் ஜெயராமன், ``இதுவும் காற்று மாசுபாட்டின் ஒரு பகுதிதான். இதனால், நுரையீரல் தொடர்பான நோய்கள் ஏற்படலாம். ஆஸ்துமா நோயாளிகள் இந்தச் சூழலில் நீண்டகாலத்துக்கு இதே காற்றைச் சுவாசித்துக்கொண்டிருந்தால், மூச்சுத்திணறல் பிரச்னை அதிகரிப்பதோடு, காலப்போக்கில் COPD பாதிக்கவும் வாய்ப்புள்ளது. மேலும், நுரையீரல் புற்றுநோய் ஏற்படவும் இது தூண்டுதலாக அமையும். இந்த மாசுபட்ட காற்றைச் சுவாசிப்பதால், நுரையீரல் மட்டுமன்றி, சுவாச உறுப்புகளான மூக்கு, தொண்டை போன்றவை பாதிக்கப்படும். இதுபோக, வயிறு, குடல் பகுதிகளும் பாதிக்கப்படும். இவற்றைவிட முக்கியமாக பிளாஸ்டிக் மனித உடலுக்குள் செல்லும்போது, புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கார்சினோஜென் அதிகரிக்கும். இவையனைத்துமே, மனிதத் தூண்டுதலால் அதிகரிக்கும் சூழலியல் நோய்கள். நமக்கு நாமே உருவாக்கிக்கொண்ட நோய்கள்" என்று கூறினார்.

பிளாஸ்டிக்
பிளாஸ்டிக்

ஏற்கெனவே, தமிழகத்தில் ஒற்றைப் பயன்பாட்டுப் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அது முழுமையாகக் கடைபிடிக்கப்படுவதில்லை என்பது கண்கூடு. நாளுக்கு நாள் சுற்றுச்சூழலுக்கும் மனித ஆரோக்கியத்துக்கும் நெகிழிப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இருப்பினும், இதன் தீவிரத்தை உணர்ந்து அரசுகள் நெகிழிப் பொருள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை விதிப்பதிலும் அதை அமல்படுத்துவதிலும் காட்டும் அலட்சியம், மக்களின் ஆரோக்கியத்தில் பெரும் சிக்கல்களை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. இதன் விளைவுகளை உணர்ந்து விரைந்து செயல்பட்டே ஆக வேண்டிய நிலையில் இன்று நின்று கொண்டிருக்கிறோம். இதற்கு மேலும் நெகிழியின் மீதான அலட்சியப் போக்கு தொடர்ந்தால், மோசமான எதிர்வினைகளைச் சந்திக்க நேரிடும்.