இந்தியாவில் 160 முதல் 200 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் கொடிய வெப்ப அலைகளால் பாதிக்கப்படலாம் என்று உலக வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெப்பம் அதிகரிப்பினால் 34 மில்லியன் மக்கள் வேலை இழப்பார்கள் என்ற அதிர்ச்சி தகவலை உலக வங்கி வெளியிட்டுள்ளது....

காலநிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் வெப்பநிலை சீராக அதிகரித்து வருகிறது. இது குறித்த ஓர் அறிக்கையை உலக வங்கி சமீபத்தில் வெளியிட்டது. அதில் "மாற்று சக்தி மற்றும் அதற்கான தொழில் நுட்பங்களை கண்டறிவதன் மூலம் புவி வெப்பமயமாகுதலின் தாக்கத்தை குறைக்கலாம். அதன் மூலம் இந்தியா 1.6 ட்ரில்லியன் டாலர் முதலீடுகளை 2040-க்குள் ஈர்க்க முடியும். பசுமை இல்ல வாயுக்களை குறைப்பதன் மூலம் 3.7 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்.
இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் வெப்ப நிலை அதிகரித்த வண்ணமே உள்ளது. 2030-ம் ஆண்டு முதல் 160 - 200 மில்லியன் மக்கள் கொடிய வெப்ப அலைகளால் பாதிக்கப்படலாம். வெப்பம் அதிகரிப்பினால் ஏற்படும் உற்பத்தி திறன் குறைவினால் 34 மில்லியன் மக்கள் வேலை இழப்பை சந்திப்பார்கள். 13 பில்லியன் டாலர் அளவிற்கு, உணவு பொருட்கள், ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும்போது, அதீத வெப்பநிலை காரணமாக வீணாகலாம். ஒவ்வொரு 15 வினாடிக்கும் ஒரு ஏசியின் தேவை ஏற்படும். அதன் விளைவாக பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றும் தற்போதைய நிலையை விட 435% அதிகரிக்கும். 2037-ம் ஆண்டு புவியை குளிரூட்ட வேண்டிய தேவை தற்போதைய அளவைவிட 8 மடங்கு அதிகமாக இருக்கும்.

Also Read
அரசு மற்றும் தனியார் துறைகளால் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களில் குளிரூட்டும் யுக்திகளை பயன்படுத்த வேண்டும். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் பாதிப்பில்லாமல் இருக்க அரசின் வீடு வழங்கும் திட்டங்களில் குளிரூட்டும் யுக்திகளை பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். உணவு மற்றும் மருத்துவம் சம்பந்தப்பட்ட பொருட்களை, குளிரூட்டும் வசதி கொண்ட வாகனங்களில் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு கொண்டு செல்வதன் மூலம், போக்குவரத்தின்போது வெப்பநிலை அதிகரிப்பால், உணவுப் பொருட்கள் வீணாகுவதை 76% வரை குறைக்க முடியும். அதன் மூலம் கார்பன் வெளியேற்றத்தை 16% வரை குறைக்க முடியும்" என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
இது குறித்து , உலக வங்கியின் இந்தியாவிற்கான இயக்குனர் அகஸ்ட் டெனோ பேசுகையில், "இந்தியாவின் யுக்திகள் மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் விதமாக இருக்கும் மற்றும் கார்பன் வெளியேற்றத்தை குறைக்கும். உலக அரங்கில், புவியை குளிரூட்டுவதற்கான தொழில்நுட்பத்தை கண்டறிவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்" என்றார்.