Published:Updated:

`எலெக்ட்ரிக் வாகனங்கள்; பூஜ்ய கார்பன் வெளியீடு!' - உலகைக் காப்பாற்ற உறுதியெடுத்த அமேசான் நிறுவனம்

கார்பன் வெளியீட்டை ஒவ்வோர் ஆண்டும் கணக்கெடுத்து, 2040-ம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய கார்பன் வெளியீடு என்ற லட்சியத்தை அடையத் திட்டம் வகுத்துள்ளது அமேசான் நிறுவனம்.

Jeff Bezos
Jeff Bezos

அமேசான் நிறுவனர் ஜெஃப் பேசோஸ் நேற்று (வியாழக்கிழமை), பூமியின் பேராபத்தாக இருக்கும் காலநிலை மாற்றத்தைச் சரிசெய்யத் தன் பங்குக்குச் சிலவற்றைச் செய்யப் போவதாக அறிவித்தார். காலநிலை மாற்றத்தைச் சரிக்கட்டுவதில் தன் பங்குக்கு அமேசான் நிறுவனம் என்னென்ன இலக்குகளை நிர்ணயித்துள்ளது என்பதையும் அந்த அறிவிப்பின்போது ஜெஃப் பேசோஸ் தெரிவித்தார். அதோடு, பாரிஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட இலக்குகளை இதன்மூலம் அவர்கள் நிர்ணயித்த காலக்கெடுவுக்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பே அமேசான் நிறுவனம் எட்டிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

Amazon
Amazon

இதற்குக் 'காலநிலை உறுதிமொழி (Climate Pledge)' என்றும் அவர் பெயரிட்டுள்ளார். அதில் அவர்கள் தங்களுக்கு வைத்துக்கொண்ட இலக்குகள்:

  • கார்பன் வெளியீட்டை ஒவ்வோர் ஆண்டும் கணக்கெடுத்து, 2040-ம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய கார்பன் வெளியீடு என்ற லட்சியத்தை அடையத் திட்டம் வகுத்துள்ளது அமேசான் நிறுவனம்.

  • இப்போது 40 சதவிகிதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துகிறோம். அதை, 2024-ம் ஆண்டுக்குள் 80 சதவிகிதமாக அதிகப்படுத்த வேண்டும். 2030-ம் ஆண்டுக்குள் 100 சதவிகிதமாக மாற்ற வேண்டும்.

  • 2024-ம் ஆண்டுக்குள் மின்சக்தியில் ஓடும் 100,000 டெலிவரி வேன்களையும் ரிவியன் என்ற நிறுவனத்திடமிருந்து வாங்குவோம். 2021-ம் ஆண்டு முதல் அமேசான் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் டெலிவெரி வேன் சாலையில் ஓடும். இதற்காக ரிவியன் நிறுவனம் 700 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளதாகவும் அமேசன் நிறுவனம் 400 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இவை மட்டுமின்றி, காலநிலை மாற்றத்திற்கு எதிராகச் செயல்படும் தி நேச்சர் கன்சர்வன்சி (The Nature Conservancy) என்ற அமைப்புக்கு 100 மில்லியன் டாலர்கள் நன்கொடை கொடுக்கப்பட்டுள்ளது. காடுகளைப் பாதுகாக்க, உலகம் முழுவதுமுள்ள சதுப்புநிலங்களையும் நிலங்களையும் உப்பளங்களையும் மீட்டெடுக்கக் கரிம வெளியேற்றத்தைக் குறைக்க அவர்கள் அந்த நிதியைப் பயன்படுத்துவார்கள்.

இந்த இலக்குகளை ஆண்டுவாரியாக முன்னேற்றத்தைக் கணக்கிட்டு விரைவில் அடையப் போவதாக நேற்று அமேசான் நிறுவனர் ஜெஃப் பேசோஸ் அறிவித்தார்.

Vikatan