Published:Updated:

காலநிலை மாற்றம்தான் கொரோனாவுக்குக் காரணமா? வைரஸ் வேட்டையர்களின் கணக்கு!

நிபா, எபோலா, கொரோனா எனப் பெரும்பாலான அச்சுறுத்தும் வைரஸ்கள் வௌவால்களில் இருந்துதான் உருவாகின்றன என்பது உண்மையா. அதற்கும் காலநிலை மாற்றத்துக்கும் என்ன தொடர்பு. தடுப்பூசிகள் தீர்வளிக்குமா?

வருடம் 2009, மெக்ஸிகோவைச் சேர்ந்த 5 வயதுச் சிறுவன் ஒருவன் வீட்டுக்கு வெளியே விளையாடச் சென்றான். விளையாடச் சென்ற சிறுவனுக்கு சில நாள்களில் மூச்சுத்திணறல், காய்ச்சல் போன்ற பிரச்னைகள் தென்பட்டன. மருத்துவசிகிச்சை அளித்தும் குணப்படுத்த முடியாமல் அவன் இறந்துவிட்டான். அந்தச் சிறுவனை அடுத்து அவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் அவனின் பெற்றோர்கள் என அனைவருக்கும் இதே அறிகுறிகள் தென்பட்டபோதுதான் அது தொற்றுநோய் என்று விழித்துக்கொண்டது தென் அமெரிக்க நாடான மெக்ஸிகோ.

h1n1
h1n1
WHO

ஆனால், நோய்த்தொற்று அதற்குள் அமெரிக்கத் துணைக்கண்டம் முழுவதும் பரவியிருந்தது. 2009-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து 2010-ம் ஆண்டின் இறுதிவரை உலகம் முழுவதும் இருந்த அனைத்து மக்களையும் அந்தத் தொற்றுநோய் உலுக்கியது. அதைப் பறவைகள், பன்றிகள் மற்றும் மனிதர்களிலிருந்து உருவாகும் ஒருவித வைரஸ்களின் கூட்டுக்கலவை என்று கண்டுபிடித்தார்கள் ஆராய்ச்சியாளர்கள். H1N1 இன்ப்ளுயன்ஸா வைரஸ் (ஸ்வைன் ஃப்ளூ) என்று அதற்குப் பெயர் வைக்கப்பட்டது.

அமெரிக்காவில் மட்டும் 12,469 ஸ்வைன் ஃப்ளு இறப்புகள் பதிவு செய்யப்பட்டன. இதனால், பொருளாதார இழப்பீடு தொடங்கி பல முனைகளில் சரிவுகளைச் சந்தித்த அமெரிக்கா பிரெடிக்ட் (Predict) என்னும் அமைப்பை உருவாக்கியது. இதில் இடம்பெற்றிருந்த அனைவரும் உயிரியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சியாளர்கள். உலகெங்கிலும் பறவைகள் மற்றும் விலங்குகளிலிருந்து உருவாகி மனிதர்களுக்குத் தொற்றும் வைரஸ் பாக்டீரியாக்களை (zoonotic diseases) அது தொற்றுவதற்கு முன்பே கண்டறிந்து அதற்கான டேட்டா பேஸ் ஒன்றைத் தயார் செய்வதுதான் இவர்களது பணி.

இவை ஒட்டுமொத்த வைரஸ் குடும்பங்களில் வெறும் 4 சதவிகிதம்தான் என்றாலும் இந்த ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த வைரஸ்கள்தான் டெங்கு, எபோலா, சார்ஸ், ஃப்ளு உள்ளிட்ட நோய்கள் உண்டாகக் காரணமாக இருந்தன என்பதால் இவற்றுக்கு முதலில் முக்கியத்துவம் தரப்பட்டது.

வைரஸ் வேட்டையர்கள்

எபோலா
எபோலா

டேட்டா பேஸ்களில் இருக்கும் வைரஸ்களுக்கான தடுப்பூசிகள் ஆராய்ச்சியும் தனியே நடந்து வந்தது. இவர்களை வைரஸ் வேட்டையர்கள் (Virus Hunters) எனக் குறிப்பிட்டார்கள். இவர்கள் வைரஸ் வேட்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 2013 - 2016 காலகட்டத்தில் ஆப்பிரிக்காவில், ஒரு குறிப்பிட்ட வைரஸ் தாக்கத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தார்கள். அதிக வெப்பமயம் காரணமாக இறக்கத் தொடங்கிய வௌவால்களைத் தொட்டதால் அதிலிருந்து பரவிய எபோலா வைரஸ்தான் இந்த மரணங்களுக்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டது. இதற்குப் பிறகுதான் பிரெடிக்ட் அமைப்புக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு கொரோனா வைரஸ், பாராமிக்ஸோ வைரஸ், ஃபிலோ வைரஸ், ஃப்லேவிவைரஸ் மற்றும் ஆர்தோமிக்ஸோ வைரஸ் உள்ளிட்ட குடும்பங்களைச் சேர்ந்த அபாயம் மிக்க வைரஸ்களைக் கண்டறியத் துரிதப்படுத்தப்பட்டார்கள்.

இவை ஒட்டுமொத்த வைரஸ் குடும்பங்களில் வெறும் 4 சதவிகிதம்தான் என்றாலும், இந்த ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த வைரஸ்கள்தான் டெங்கு, எபோலா, சார்ஸ், ஃப்ளு உள்ளிட்ட நோய்கள் உண்டாகக் காரணமாக இருந்தன என்பதால் இவற்றுக்கு முதலில் முக்கியத்துவம் தரப்பட்டது. பின்னாளில் இந்த வைரஸ் வேட்டையர்கள் குழுவில் அமெரிக்காவின் பல பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தங்களை இணைத்துக்கொண்டார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவர்களில் ஒஹாயோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் சிலர் 2015-ம் ஆண்டில் திபெத்தின் பனிக்கட்டிகளிலிருந்து 520 - 15,000 வருடங்கள் பழைமையான 33 வைரஸ் குடும்பங்களைக் கண்டறிந்தார்கள். அவற்றில் பல வைரஸ்கள் எந்தப் பிரிவைச் சேர்ந்தவை என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான வைரஸ்கள் அதுபோன்ற பனிப்பாறைகளுக்கு அடியில் உறைந்து கிடக்கின்றன என்றும், ஒருவேளை காலநிலைமாற்றம் மற்றும் புவி வெப்பமயமாவதால் இந்தப் பனிப்பாறைகள் உருகும் சூழலில் அவை உயிர்களைப் பாதிக்க வாய்ப்பிருக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் நிறுவினார்கள்.

திபெத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் குடும்பங்கள்
திபெத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் குடும்பங்கள்

திபெத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் குடும்பங்கள் மட்டுமல்ல உலகத்தில் எந்த ஒரு திடீர் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுக்கும் பின்னணியில் இதுபோன்ற சூழல் சமன்பாடின்மைதான் காரணம் என்று நிறுவுகிறார்கள் சூழலியலாளர்கள். அதற்கான ஆதாரங்களும் ஏற்றுக்கொள்ளும் வகையிலேயே இருக்கின்றன. 1920-களில் சிம்பன்சி குரங்குகளில் இருந்து மனிதர்களுக்குத் தொற்றிய ஹெச்.ஐ.வி கிருமி வைரஸ் பாதிக்கப்பட்ட குரங்குகளை வேட்டையாடிக் கொன்றதிலிருந்துதான் தொடங்கியது.

வருடம் 2020, நூறு ஆண்டுகளாக இந்த ஹெச்.ஐ.வி எய்ட்ஸ் வைரஸுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறோம். 1994-ம் ஆண்டில் வௌவால்களிலிருந்து பரவிய ஆஸ்திரேலியாவில் பலபேரை பலிவாங்கிய ஹென்ரா வைரஸ் காடுகளில் வௌவால்களின் நிலப்பரப்பை மனிதர்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கியதிலிருந்துதான் அதிகரித்தது. 2018-ம் ஆண்டில் கேரளாவை அச்சுறுத்திய நிபா வைரஸ் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை பலிவாங்கியபோது அந்தக் குடும்பம் வசித்த பகுதியின் அருகில் இருந்த சூழலியல் சுற்றுலா மையத்திலிருந்த (Ecotourism centre) பழந்தின்னி வௌவால்களில் இருந்து பரவியிருக்கலாம் எனக் கூறப்பட்டது.

2020 கொரோனா அச்சுறுத்தலுக்குப் பின்னணியிலும் சீனாவில் ஒருவர் வௌவாலை உண்டதால்தான் பரவியது என்றும், எறும்புத்தின்னியின் செதில் கறிகளை உண்டதால்தான் பரவியது என்றும் இருவேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

வௌவால்களை ஏன் பாதிப்பதில்லை

நிபா
நிபா
ராய்ட்டர்ஸ்

விலங்குகளிலிருந்தும் பரவும் தொற்றுகள் (zoonotic diseases) என்றால் அவை ஏன் அந்த விலங்குகளைப் பாதிப்பதில்லை? இதுபோன்ற விலங்குகளிலிருந்து பரவும் வைரஸ்களிலிருந்து தற்காத்துக்கொள்ள இந்தியா எந்த அளவுக்குத் தயாரிப்புடன் இருக்கிறது?

எது எப்படியிருந்தாலும் கடந்த 30 - 40 வருடங்களில் தோன்றிய தொற்றுநோய் எதுவும் பிற உயிர்களின் வாழ்விட ஆக்கிரமிப்புகளிலிருந்துதான் தொடங்கியிருக்கிறது. இவை இரண்டு விதமான கேள்விகளை எழுப்புகின்றன. விலங்குகளில் இருந்தும் பரவும் தொற்றுகள் (zoonotic diseases) என்றால் அவை ஏன் அந்த விலங்குகளை பாதிப்பதில்லை? இதுபோன்ற விலங்குகளிலிருந்து பரவும் வைரஸ்களிலிருந்து தற்காத்துக்கொள்ள இந்தியா எந்த அளவுக்குத் தயாரிப்புடன் இருக்கிறது?

கேரளாவில் மருத்துவருக்குக் கொரோனா... மூடப்படும் அரசு மருத்துவமனை?!

இதற்கு விளக்கம் அளிக்கும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் பவித்ரா, ``விலங்குகள் அதிகம் வசிக்கும் பகுதியில் இருக்கும் மனிதர்களுக்கு வைரஸ் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம். விலங்குகளின் எச்சங்கள் அல்லது கழிவுகளை மனிதர்கள் தொடும்போது அதன் வழியாக வைரஸ் அவர்களுக்குப் பரவும். பெரும்பாலும் எல்லா வனவிலங்குகளுமே வைரஸ் கேரியர்களாகச் செயல்படுகின்றன (Virus carriers) அந்த வைரஸால் அந்த விலங்குகள் ஒருவேளை பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அந்த வைரஸ்களுக்கான எதிர்ப்புசக்தி அவற்றின் உடலில் இயல்பாகவே இருக்கலாம். அதனால்தான் ரேபிஸ் வைரஸ் போன்ற கிருமிகள் நாய்கள் மற்றும் பூனைகளுக்கு உயிர் அச்சுறுத்தலாக இருக்கின்றன. ஆனால், நிபா போன்ற வைரஸ் கிருமிகள் வௌவால்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதில்லை. ஏன் வௌவால்களை அவை பாதிப்பதில்லை என்பது குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை” என்கிறார்.

எபோலா வைரஸ் நோய்த்தாக்கத்துக்குப் பிறகு, பிரெடிக்ட் அமைப்பின் குழு சியரா லியோனுக்குச் சென்று வௌவால் குகைகளை ஆராய்ச்சி செய்யத் தொடங்கியது. ஆராய்ச்சியின் விளைவாக 2018-ல் எபோலா வைரஸ் குடும்பத்தின் வேறொரு வைரஸை அந்தக் குழு கண்டுபிடித்தது. கேரளாவில் நிபா வைரஸ் பரவியபோது முதலில் பாதிக்கப்பட்டு இறந்த நபரின் வீட்டில் உள்ள கிணற்றில் தொங்கிக்கொண்டிருந்த வௌவால்களில் இருந்துதான் நோய்த்தாக்கம் ஏற்பட்டதாக அரசு சொன்னது. மேலும், மலேசியாவில் இந்த நிபா வைரஸ் வௌவால்கள் அதிகம் அங்கிருந்து பாதிக்கப்பட்டவர்கள் வீட்டுக்கு உறவினர் வந்தார். அவர் வழியாகத்தான் நிபா பரவியது என்றும் கூறப்பட்டது. ஆனால், இவை இரண்டையுமே வௌவால் ஆராய்ச்சியாளர் ஒருவர் மறுத்தார்.

``20 வருடங்களாக நான் வௌவால்களை ஆராய்ச்சி செய்துவருகிறேன். பாதிக்கப்பட்டு இறந்தவரின் வீட்டின் கிணற்றில் இருந்தவை பூச்சிகளைத் திண்ணும் வௌவால்கள் அவற்றின் எச்சங்களில் நிபா இருக்க வாய்ப்பு கிடையாது. மலேசியாவிலிருந்து வந்த உறவினரின் உடலில் நிபாவுக்கான தடயங்கள் இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அவர்கள் வீட்டருகிலேயே இருக்கும் சூழலியல் சுற்றுலா மையத்தில் அதிகமான பழந்திண்ணி வௌவால்கள் இருக்கின்றன. அவை மட்டும்தான் இதற்குக் காரணமாக இருக்கக்கூடும்” என்று அவர் அறுதியிட்டுச் சொன்னார்.

வௌவால்
வௌவால்

இதுபோலக் கொரோனா எப்படிப் பரவியிருக்கக் கூடும்? இந்திய வௌவால்கள் ஆராய்ச்சிக் குழுவைச் (IBCRU) சேர்ந்த ராகுலிடம் பேசினோம், ``வௌவால்கள்தான் அதிகம் வைரஸ்களுக்கான கேரியர்களாக இருக்கின்றன என்பது தவறான புரிதல். வௌவால் சிம்பன்சி மற்றும் பன்றிகள் தவிர வேறு எந்த விலங்குகளிலும் இருக்கும் வைரஸ்களை நாம் இன்னும் கண்டறியவில்லை என்பதே உண்மை. சூழலியல் அழுத்தம் (eco stress) நேரும்போதெல்லாம் அதற்குத் தாக்குப்பிடிக்கக்கூடிய விலங்குகள் உயிர்பிழைத்துவிடும். ஆனால், வௌவால்களால் அது முடியாது. அதிக வெப்பமயம் காரணமாக ஆப்பிரிக்காவில் வௌவால்கள் இறந்ததும், பிறகு அவற்றிலிருந்து எபோலா பரவியதும் இதற்கு உதாரணம். மனிதர்கள் ஏற்படுத்தும் சூழல் சமன்பாடின்மைதான் இந்தச் சூழலியல் அழுத்தத்தையும் உண்டாக்குகிறது. அதற்கான தீர்வு காணப்பட வேண்டும் ” என்கிறார்.

பொது சுகாதாரத்தில் சூழலியல் 

விலங்குகளலிருந்து பரவும் இதுபோன்ற நோய்கள் குறித்து மத்திய சுகாதாரத்துறையின் கீழ் வரும் தேசியத் தொற்றுநோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC) ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில், ``பெரிதும் ஆவணப்படுத்தப்படாத இதுபோன்று விலங்குகளில் இருந்து பரவும் நோய்கள் இந்தியாவின் பொதுச் சுகாதாரத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கிறது. ப்ளேக் நோய் மட்டும் 1898-ல் தொடங்கி 120 லட்சம் மக்களைப் பலிவாங்கியிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ரேபிஸ் நோயால் 20,000 பேர் வரை பாதிக்கப்படுகிறார்கள். 80 சதவிகித மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கிறார்கள். கிராமப்புறங்கள் என்பதால் விலங்குகளுடன் அதிக தொடர்பில் இருக்கும் சூழல் ஏற்படுகிறது. இவை அத்தனையுமே ஏதோ ஒரு வைரஸ்களுக்கான கேரியர்களாக இருப்பவைதான். ஆனால், இவை மனிதர்களுக்குத் தொற்றும்போது அதற்கான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் செய்யப் போதிய வசதிகள் நம்மிடம் இல்லை. இதுபோன்ற ஜூனாடிக் நோய்கள் பரிச்சயமான மருத்துவர்களும் இல்லை. கால்நடை மருத்துவர்கள், நோய்த்தொற்றுப் பரவலாக்கம் அறிந்தவர்கள் (Epidemiologist) மற்றும் மருத்துவர்கள் (Physicians) இணைந்து இதுபோன்ற சமயங்களில் பணியாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறது.

கொரோனா
கொரோனா

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின் முதல் பரிசோதனையை அமெரிக்கா தற்போது மேற்கொண்டு வருகிறது. சில வைரஸ்களுக்கு எதிராகத் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் காலமாற்றத்தில் அவை பரிணாம வளர்ச்சியடைந்து மீண்டும் மனிதர்களைத் தாக்கிக் கொண்டுதான் இருக்கின்றன. உதாரணத்துக்கு 2018-ல் கேரளாவைத் தாக்கிய நிபா 1994-ல் ஆஸ்திரேலியாவைத் தாக்கிய ஹென்ரா வைரஸின் பரிணாம வளர்ச்சிதான். தடுப்பூசிகள் என்பது தற்காலிகத் தீர்வுதான். சூழலியலை உள்ளடக்கிய பொது சுகாதாரத்திட்டமும் (Ecology inclusive public health system) காலநிலைமாற்றத்துக்கான பதிலைத் தேடுவதும்தான் இதற்கான நிரந்தரத் தீர்வாக இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு