Published:Updated:

திருப்பூர்: `ஒரு ரூபாய்க்கு ஒரு விதைப்பந்து; பெரியவங்களுக்கு வேலை!’ - அசத்தும் தம்பதி

பத்மபிரியா - ராமசாமி தம்பதியர்
பத்மபிரியா - ராமசாமி தம்பதியர்

மரங்கள் அழிக்கப்பட்டு வருவதுதான் இன்றைய சூழல் பிரச்னைக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி தாலுகா ராவுத்தம்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் பத்மபிரியா - ராமசாமி தம்பதி. ராமசாமி சிறியளவில் டெக்ஸ்டைல் பிசினஸ் ஒன்றை நடத்தியும், பத்மபிரியா தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகவும் இருந்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் `மனதுக்குப் பிடித்த, வித்தியாசமான ஏதாவது ஒரு தொழிலைச் செய்யலாம்’ என இருவரும் முடிவெடுத்து பார்த்துக்கொண்டிருந்த அந்த வேலையை விட்டு வெளியேறி, விதைப்பந்து தயாரிக்கும் தொழிலைக் கையெடுத்திருக்கின்றனர்.

விதைப்பந்து தயாரிப்பின்போது
விதைப்பந்து தயாரிப்பின்போது

விதைப்பந்துகளைத் திருமண விழா, வளைகாப்பு, பிறந்தநாள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வரும் விருந்தினர்களுக்கு பரிசாகக் கொடுக்கும் ஐடியாவை கையிலெடுக்க பிசினஸ் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. `விதைப்பந்துகள்’ என்ற பெயரில் 2017-ல் ஆரம்பித்த இந்த பிசினஸில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு, 50 லட்சம் விதைப்பந்துகளை கொடுத்திருக்கின்றனர். கொரோனா சூழலால் கடந்த 4 மாதங்களாகத் திருமணம் போன்ற பிரமாண்ட நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாமல் போக, பிசினஸ் டல்லடிக்க ஆரம்பித்திருக்கிறது. உற்பத்தி செய்த விதைப்பந்துகளை நீண்ட காலம் வைத்திருக்கவும் முடியாது. எனவே, `ஒரு விதைப்பந்து ஒரு ரூபாய்’ என்ற அறிவிப்பை வெளியிட்டு, கூரியர் மூலமாக விற்பனையை மறுபடியும் சூடுபிடிக்க வைத்திருக்கின்றனர்.

இதுகுறித்து பத்மபிரியாவிடம் பேசினோம். “எங்க கிராமத்துல இருக்க வயாசன பெரியவங்க 20 பேரை வச்சித்தான் இந்த விதைப்பந்துகளைத் தயாரிச்சிக்கிட்டு இருக்கோம். கொரோனாவால அவங்களுக்கு எந்த வேலையும் கொடுக்க முடியலை. கையில் இருக்கும் விதைப்பந்துகளை விற்றாலாவது, அவர்களுடைய குறைந்தபட்ச தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். எனவேதான் ‘ஒரு விதைப்பந்து ஒரு ரூபாய்’ எனக் கூரியர் மூலமாக எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் என அறிவித்திருக்கிறோம்” என்றார்.

விதைப்பந்து தயாரிப்பின்போது
விதைப்பந்து தயாரிப்பின்போது

தொடர்ந்து பேசியவர், ``எங்களோட பகுதியில் எல்லா விதைகளும் கிடைக்காது என்பதால், கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்து விதைகளை வாங்கி வருகிறோம். இரண்டு வகையான மண்ணுடன், சாண உரம் கலந்து விதைகளை நடுவில் வைத்து உருட்டி ஒருநாள் முழுக்க வெயிலில் காய வைத்து எடுப்போம். அதை 3 - 6 மாசம் வரை வச்சிருக்கலாம். கொரோனாவால நிறைய விதைப்பந்துகள் எங்ககிட்ட ஸ்டாக் இருந்துச்சு. மழை ஆரம்பிக்கும் இந்தச் சூழல்ல விதைப்பந்துகளை விதைப்பது நல்ல பலன் கிடைக்குமென நினைத்தோம்.

குடும்பத்தினருடன் பத்மபிரியா
குடும்பத்தினருடன் பத்மபிரியா

எல்லோருக்கும் இயற்கை மீது காதல் இருக்கு. சூழலுக்காக எதையாவது செய்யணும்னு நினைக்குறாங்க. கால ஓட்டத்தால் அவங்களல எதையும் செய்ய முடியுறதில்லை. இந்த விதைப்பந்துகள் அந்தக் குறையைத் தீர்த்திருக்கு. பல நிகழ்ச்சிகளில் இன்றைக்கு விதைப்பந்து கொடுப்பது ஒரு பழக்கமாக மாறியிருக்கிறது. 5 வருஷத்துக்கு அப்புறம் பூமியோட வெப்பம் இன்னும் அதிகமாகும்னு சொல்றாங்க. மரங்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே போவதும், சுத்தமான காற்று இல்லாமல், பருவமழைகள் சரியாகப் பெய்யாமல் போவது எனப் பூமியின் நிலையே மாறிப் போயிருக்கு. இதுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் மரங்கள் அழிக்கப்பட்டு வருவதுதான். எதிர்காலத் தலைமுறையினர் ஆரோக்கியத்தோடு வாழவும், சூழல் மேம்பாட்டுக்கும் நம்முடைய பங்களிப்பை கண்டிப்பாக செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நாங்க வசதியான குடும்பமெல்லாம் இல்லை. எங்ககிட்ட காசு, பணம் இருந்திருந்தா இந்த விதைப்பந்துகளை மக்களுக்கு இலவசமாகவே கொடுத்திருப்போம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு