Published:Updated:

டவ் தே: காலநிலை மாற்றத்தால் தீவிரமடையும் புயல்கள் - சொல்லும் சேதி என்ன?

டவ் தே புயல்
டவ் தே புயல் ( Rafiq Maqbool | AP )

காலநிலை விஞ்ஞானிகள் எந்த எதிர்காலத்தைப் பற்றி நம்மை எச்சரித்துக் கொண்டிருந்தார்களோ, அது நம் தெருமுனைக்கே வந்து நின்றுவிட்டது என்று தோன்றுகிறது.

மத்திய கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவான டவ் தே புயல், அதி தீவிர புயலாக உருமாறி, மே 17ம் தேதியன்று இரவு குஜராத்தில் கரையைக் கடந்திருக்கிறது. மூன்று மேற்கு மாநிலங்களில் மொத்தம் 14 பேர் இறந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட 1.5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். மணிக்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்றால் மரங்கள் விழுந்ததில் பல ஊர்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. கடந்த மூன்று தசாப்தங்களாக மேற்கு இந்தியாவில் வீசிய புயல்களிலேயே மிகவும் வலுவானது இந்த டவ் தே. மும்பை நகரின் வரலாற்றிலேயே முதன் முறையாக மே மாதத்தில் இருபத்து நான்கு மணிநேரத்தில் மிக அதிக அளவு மழை (230.3 மில்லிமீட்டர்) கொட்டித் தீர்த்திருக்கிறது.

மே மாதத்தில் வந்திருக்கிற டவ் தே, இந்த வருடத்தின் முதல் புயல் நிகழ்வு. ஆனால் இதுவே அதிதீவிரப் புயலாக மாறி கோரத்தாண்டவம் ஆடியிருக்கிறது. கொரோனா இரண்டாம் அலையால் இந்தியாவே தடுமாறிக்கொண்டிருக்கும்போது ஏற்பட்டுள்ள பேரிடர் இது. புயல் எச்சரிக்கைக் காரணமாக பல நகரங்களில் மருத்துவமனைகளிலிருந்த கொரோனா நோயாளிகளை வேறு இடங்களுக்கு மாற்றவேண்டியிருந்தது. பேரிடர் சூழலில் கொள்ளை நோய்க்கான மருத்துவம், கொள்ளை நோய் சூழலில் பேரிடர் மேலாண்மை ஆகிய இரண்டுமே கடினமானவை.

டவ் தே புயல்
டவ் தே புயல்
AP

இந்தியப் பெருங்கடலைப் பொறுத்தவரை பொதுவாக வங்காள விரிகுடாவில்தான் அதிகமான புயல்கள் உருவாகும். ஆனால், கடந்த நான்கு வருடங்களாகவே பருவமழைக்காலத்துக்கு முன்பாக அரபிக்கடலில் புயல்கள் உருவாகிவருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக இந்தியப் பெருங்கடல் பகுதியில், பருவமழைக்கு முன்பாக, மே மாதத்தில் ஒரு புயல் வீசிவிடுகிறது. அரபிக்கடலின் சராசரியான புயல் எண்ணிக்கை வருடத்துக்கு ஒன்றுதான். அதுவும் தீவிர புயலாக இருக்காது. ஆனால் 2019ல் மட்டும் இந்தியாவைத் தாக்கிய எட்டு தீவிர புயல்களில் ஐந்து புயல்கள் அரபிக்கடலில் உருவாகியிருக்கின்றன!

இவை தற்செயல் நிகழ்வுகள் அல்ல என்பது காலநிலை ஆராய்ச்சியாளர்களின் கருத்து. தொழிற்சாலைகள், வாகனங்கள் போன்ற மனித செயல்பாடுகளால் உமிழப்படும் பசுங்குடில் வாயுக்களில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் கடலால் உறிஞ்சப்படுகிறது. காற்றில் அளவுக்கதிகமான பெருங்குடில் வாயுக்கள் இருக்கும்போது, கடலுக்குள் சேரும் பசுங்குடில் வாயுக்களின் அளவும் அதிகரிக்கிறது. இதனால் கடலின் சராசரி வெப்பநிலை உயர்கிறது. வெப்பநீர் கொண்ட கடற்பகுதிகளிலிருந்து உருவாகும் புயல்கள், விரைவிலேயே தீவிரமான புயலாக வலுப்பெற்றுவிடுகின்றன. இருபத்து நான்கு மணிநேரத்துக்குள் புயலின் வேகம் மணிக்கு 55 கிலோமீட்டர் அளவுக்கு அதிகரிக்கக்கூடும். இதுபோன்ற நிகழ்வுகளை Rapid Intensification என்று அழைப்பார்கள். விரைவில் தீவிரமடையும் புயல்களின் போக்கைக் கணிப்பது கடினம் என்பதால், பேரிடர் மேலாண்மையும் சிக்கலாகிறது.

டவ் தே புயல்
டவ் தே புயல்
AP

மற்ற வெப்பமண்டலக் கடல்களோடு ஒப்பிடும்போது, மேற்கு இந்தியப் பெருங்கடலில், அதாவது அரபிக்கடலில், கடல்பரப்பின் வெப்பநிலை (Sea Surface Temperature) வேகமாக அதிகரித்துக்கொண்டே வருவதாகத் தெரிவிக்கிறது 2014ல் வெளிவந்த ஓர் ஆய்வு. வெப்பமண்டல வானிலை ஆராய்ச்சிக்கான இந்தியக் கழகத்தைச் (Indian Institute of Tropical Meteorology) சேர்ந்த ராக்ஸி மேத்யூ கோல் விஞ்ஞானியும் இந்த ஆய்வில் இணைந்து பணியாற்றியுள்ளார்.

"கடல்பரப்பின் வெப்பநிலை அதிகரிக்கும்போது, புயல்களும் தீவிரமடைகின்றன, அரபிக்கடல் புயல்கள் தீவிரமாவது இதனால்தான்" என்கிறார் அவர். கடந்த ஒரு நூற்றாண்டாகவே அரபிக்கடலின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்த வெப்பநிலை அதிகரிப்பு, பருவமழையை மாற்றியமைப்பதோடு மட்டுமல்லாமல், கடல்சார் உணவுச்சங்கிலியையும் சீர்குலைக்கும். கடல்வாழ் உயிரினங்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று தெரிவிக்கிறது அந்த ஆய்வு. தவிர, இந்தியப் பெருங்கடலின் வெப்பநிலைக்கு எல்-நினோ தெற்கு அலைவுக்கும் (El-Nino Southern Oscillation) தொடர்பு உண்டு என்பதால், அரபிக்கடல் சூடேறும்போது, எல் நினோவை அது வலுவிழக்கச் செய்யும். இதனால் உலகளாவிய காலநிலையிலேயே மாற்றம் ஏற்படக்கூடும்.

அரபிக்கடலைப் பொறுத்தவரை, சராசரிக் கடற்பரபு வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸாகவே இருக்கும். டவ் தே புயலுக்கு முன்பாக, சராசரி வெப்ப அளவு இரண்டு டிகிரிகள் அதிகரித்து, 31 டிகிரி செல்சியஸாக இருந்திருக்கிறது. அதிதீவிரப் புயலாக டவ் தே வலுப்பெற்றதற்கு இது ஒரு முக்கியக் காரணம்.

காலநிலை மாற்றத்தால், ஒரு புயலில் இருந்து உருவாகும் சராசரி மழை அளவு அதிகரிக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தீவிரமடைந்து அதிவேகத்தில் வீசும் காற்றும் மிக கன மழை அளவும் பெரும் சேதத்தை விளைவிக்கவல்லவை. காலநிலை மாற்றத்தால் கடல்மட்டம் உயரும்போது நிகர கடற்பகுதி அதிகரிக்கிறது. ஆகவே முன்பை விட புயற்காற்று நெடுந்தூரம் பயணிக்கும்போது அதன் தீவிரமும் கூடிக்கொண்டே போகிறது. "மகாராஷ்டிரா, குஜராத்தின் கடலோரப் பகுதிகளில் நிகழ்ந்த முறையற்ற நகரமயமாக்கல், கடல்வழிச்சாலை கட்டுமானம், கட்டுமானப் பணிகளுக்காக அலையாத்தி மரங்கள் அழிக்கப்பட்டது ஆகியவை புயலின் சேதத்தை அதிகரித்திருக்கின்றன" என்கிறார்கள் அந்த மாநிலங்களைச் சேர்ந்த சூழல் செயல்பாட்டாளர்கள்.

டவ் தே புயல்
டவ் தே புயல்
Rafiq Maqbool | AP

காலநிலை மாற்றத்தால் அரபிக்கடல் பல்வேறு விதங்களில் பாதிக்கப்பட்டிருக்கிறது. வருங்காலங்களில் அரபிக்கடலில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானால், அது வலுவிழக்காமல் புயலாக மாறவே வாய்ப்புகள் அதிகம் என்கிறது 2015ல் வந்த ஒரு ஆய்வுக்கட்டுரை. செங்குத்து காற்றுவெட்டு (Vertical Wind shear) என்கிற ஒரு அம்சம், புயற்காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தக்கூடியது. ஆனால், அரபிக்கடலில் இதன் செயல்திறன் குறைவாக இருப்பதால், அரபிக்கடல் புயல்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகக் கடற்கரைகள் அரபிக்கடலை ஒட்டியவை அல்ல. ஆனால், புயல்களை அதிகம் சந்திக்காத அரபிக்கடலே இப்படி அலைக்கழிக்கப்படும்போது, வருடாவருடம் வழக்கமாகவே புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகள் என்னவாகும் என்பதை நினைத்துப்பார்க்க முடியவில்லை. காலநிலை மாற்றத்தின் தீவிரம் அதிகரிக்கும்போது, 2100ம் ஆண்டில் புயல்களின் சராசரி வேகம் 10% வரை அதிகரிக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு. தீவிர காலநிலை மாற்றத்தின்போது, சில இடங்களில் ஒரே நேரத்தில் ஆறு பேரிடர்கள் தாக்கலாம் என்று எச்சரிக்கிறார் எழுத்தாளர் டேவிட் வாலஸ் வெல்ஸ்.

டவ் தே புயல்
டவ் தே புயல்
Rajanish Kakade | AP

டவ் தே புயலால் மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியா கட்டடத்தைச் சுற்றிக் கடல்நீர் ஆர்ப்பரித்து அலையடிக்கும் காட்சிகளைப் பார்க்கும்போது, எதிர்காலத்தைப் பற்றிய ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளைப் பார்ப்பதுபோலவே இருக்கிறது. காலநிலை விஞ்ஞானிகள் எந்த எதிர்காலத்தைப் பற்றி நம்மை எச்சரித்துக் கொண்டிருந்தார்களோ, அது நம் தெருமுனைக்கே வந்து நின்றுவிட்டது என்று தோன்றுகிறது. காலநிலையைத் தாங்கக்கூடிய உள்கட்டமைப்புகள் (Climate resilient infrastructure) போர்க்கால அடிப்படையில் அமைக்கப்படவேண்டும்.

புயல் வந்தால் மட்டுமே அதை எதிர்கொள்ள மீட்பு படைகள் அமைப்பது என்றில்லாமல், வருடாவருடம் நம்மை சூறையாடுவதற்குப் புயல் வரும் என்ற எதிர்பார்ப்புடனேயே நாம் தயார் நிலையில் இருக்கவேண்டும். விவாதங்கள், கேள்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு காலநிலை அவசரநிலையை எதிர்கொள்வதற்கு நாம் வலுப்படுத்திக்கொள்ளவேண்டும்.
அடுத்த கட்டுரைக்கு