Published:Updated:

166 - ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை...! - அஸ்ஸாம், பீகாரில் அதிகரிக்கும் வெள்ள பாதிப்புகள்!

க.சுபகுணம்

வடகிழக்கு மாநிலங்களில் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் வெள்ளம், பல சேதங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இதுவரை கிடைத்த தகவல்களின்படி, 166 பேர் அதற்குப் பலியாகியுள்ளனர்.

அஸ்ஸாம்
அஸ்ஸாம்

கடந்த சனிக்கிழமையிலிருந்து இன்றுவரை மேலும் ஐந்து பேர் வெள்ளத்துக்குப் பலியாகியுள்ளனர். இதன்மூலம் அஸ்ஸாம் மாநிலத்தில் வெள்ளத்துக்குப் பலியானோரின் எண்ணிக்கை 64-ஆக உயர்ந்துள்ளது.

அஸ்ஸாமில், 33 மாவட்டங்களில் 18 மாவட்டங்கள் இன்னமும் நீரில் மூழ்கியுள்ளன. அதனால், 38.37 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பீகாரில் வெள்ளப் பாதிப்புகளால் 102 பேர் இதுவரை பலியாகியுள்ளனர், 12 மாவட்டங்களில் 72.78 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளநீர் வடிந்துவிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களை முகாமிலிருந்து அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர்களின் வீடுகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. தற்போது அந்த மக்கள் வீடின்றித் தவிக்கின்றனர்.

இன்னமும் 2,669 கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. காசிரங்கா தேசியப் பூங்காவில் இதுவரை 141 விலங்குகள் இறந்துள்ளன. 829 முகாம்களில் சுமார் 1,15,389 மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அஸ்ஸாம், பீகார் மாநிலங்கள் முழுவதும் நிவாரணப் பணிகள் கொண்டு செல்லப்பட்ட வண்ணம் இருக்கின்றன.

வெள்ளத்தில் மூழ்கிய காசிரங்கா தேசியப் பூங்கா
வெள்ளத்தில் மூழ்கிய காசிரங்கா தேசியப் பூங்கா
PTI

பர்பேட்டாவில் நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் 800 கால்நடைகள் உட்பட 3,000 பேருக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகளும் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற மருத்துவ முகாம்களை மாநிலம் முழுவதும் அமைக்குமாறு மக்களும் ஆர்வலர்களும் கேட்டுவருகின்றனர்.