Published:Updated:

``ஒரு துளி மழைநீர்கூட வீணாகாது!” - சென்னையின் ஆர்கானிக் அப்பார்ட்மென்ட்

இதுவரை யாருமே இப்படிச் செய்யவில்லை. முன்னுதாரணங்கள் என்று எதுவுமே இல்லாமல், புதிதாக ஒரு திட்டத்தைச் செயல்படுத்த நாங்கள் முயன்றுகொண்டிருந்தோம்.

மழைநீர்
மழைநீர் ( Pixabay )

மழை, அனைவருமே ஆவலாய் எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஒன்று. அதிலும் சென்னை மக்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். சென்னையின் பழைய மகாபலிபுரம் சாலையில் குடியிருக்கும் அப்பார்ட்மென்ட் வாசிகள், ஒவ்வொரு நாளைய நீர்த் தேவைக்கும் தண்ணீர் லாரிகளையும் விநியோகஸ்தர்களையும் தேடிக்கொண்டிருக்கும் சூழல்தான் இன்றும் நிலவுகிறது. இல்லை, இன்று அதிகமாகியுள்ளது.

தண்ணீர்ப் பற்றாக்குறை சரியாக வேண்டுமென்றால், நீர்நிலைகள் பராமரிப்பு, நீர் மேலாண்மை போன்றவற்றில் நாம் கவனம் செலுத்த வேண்டும். பெய்கின்ற மழையைச் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். அதைச் சரியாகப் புரிந்துகொண்டு, ஒரு துளி மழைநீரைக்கூட வீணாக்காத சபரி டெரேஸ் என்ற அப்பார்ட்மென்ட்டின் கதையைத்தான் இங்கு நாம் பார்க்கப்போகிறோம்.

மழை
மழை
Pixabay

மழைநீர் சேகரிப்பு என்பது எத்தனை முக்கியம் என்பதை அனைவருமே புரிந்துவைத்துள்ளோம். அந்த முறையில், கடந்த 8 ஆண்டுகளாக நிலத்தடி நீர்வளத்தை மீள்நிரப்பு செய்துகொண்டிருந்தார்கள். இந்த நிலையில், மொட்டைமாடியில் விழும் மழைநீரை நேரடியாகச் சேகரித்துப் பயன்படுத்தினால் என்ன என்ற சிந்தனை அவர்களுக்குத் தோன்றியது. அதை நடைமுறையில் சாத்தியப்படுத்தியும் காட்டியுள்ளார்கள். இந்த நேரடி மழைநீர் சேமிப்பு முறையை எப்படிச் சாத்தியப்படுத்தினார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, சபரி டெரேஸ் குடியிருப்பின் செயலாளரும் ஓ.எம்.ஆர் குடியிருப்புவாசிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான ஹர்ஷ கோடாவைச் சந்தித்துப் பேசினோம்.

Vikatan

``கடந்த ஆண்டு ஜூன் மாதம், இந்த நேரடி மழைநீர் சேகரிப்பு முறையைத் தொடங்கினோம். அதற்கு முன்பே 8 ஆண்டுகளாகத் தமிழக அரசு முன்வைத்த மழைநீர் சேமிப்பைச் செய்துகொண்டிருந்தோம். எங்களுடைய குடியிருப்பில் ஒரு சிக்கல் என்னவென்றால், எங்களிடம் கிணறுகள் கிடையாது. அதனால், நாங்கள் செய்துகொண்டிருந்த மழைநீர் சேமிப்பு 10 ஆண்டுகள் கழித்துதான் பயனளிக்கும். பெய்கின்ற மழைநீரை இப்போதே பயன்படுத்தும் வகையில் ஆவன செய்தால் என்னவென்று தோன்றியது. அதற்காகத்தான் இந்த முறையைச் செயல்படுத்தத் தொடங்கினோம்" என்றார்.

இப்போதெல்லாம் மொத்த மழையும் ஒன்றிரண்டு நாள்களிலே பெய்துவிடுகிறது. ஓரளவுக்குத்தான் சேகரிக்கவே முடிகிறது. மழைநீரை நேரடியாகச் சேகரித்தால், நம் வளாகத்திற்குள் பெய்யும் மழைநீர் முழுவதையும் சேமிக்க முடியும் என்று தோன்றியது
பிரபா கோடா

அவரைத் தொடர்ந்து பேசிய சபரி டெரேஸ் கமிட்டி உறுப்பினர் பிரபா கோடா, ``இப்போதெல்லாம் மொத்த மழையும் ஒன்றிரண்டு நாள்களிலோ அல்லது ஓரிரு வாரங்களிலோ பெய்துவிடுகின்றன. அந்த மொத்த நீரையும் நம்மால் பயன்படுத்த முடிவதில்லை. ஓரளவுக்குத்தான் சேகரிக்கவே முடிகிறது. மழைநீரை நேரடியாகச் சேகரித்தால், நம் வளாகத்திற்குள் பெய்யும் மழைநீர் முழுவதையும் சேமிக்க முடியும் என்று தோன்றியது" என்றார்.

``ஒவ்வொரு கட்டடத்தின் மொட்டை மாடியிலிருந்தும் குழாய்கள் வழியாகத் தரைதளத்துக்கு இணைப்பு கொடுத்தோம். அந்த இணைப்புகள், ஆங்காங்கே நிலத்தடியில் அமைக்கப்பட்டுள்ள சிறு சிறு கிணறுகளைச் சென்றடையும். மொட்டை மாடியை தொடர்ச்சியாக சுத்தம்செய்து, தூய்மையாகப் பராமரித்தோம். மொட்டை மாடியில் விழும் மழைநீர், அங்கு இணைக்கப்பட்டிருக்கும் குழாய்கள் வழியாகத் தரைதளத்துக்குக் கொண்டுவரப்படுகிறது.

மழை நீர் சேகரிப்புக் குழாய்
மழை நீர் சேகரிப்புக் குழாய்
ஹர்ஷ கோடா

ஆங்காங்கே 10 அடி ஆழமும் நான்கு அடி அகலமும் உடைய கிணறுகளை அமைத்துள்ளோம். அந்தக் கிணறுகளோடு இந்தக் குழாய்கள் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலமாக மொட்டைமாடியில் விழும் மழைநீர், கிணறுகளைச் சென்றடைகிறது. இங்கு, நான்கு தொகுதிகளாகக் குடியிருப்புகள் அமைந்துள்ளன. நான்கையும் சேர்த்து 25,000 சதுர அடி. சென்னையில் தற்போது 1 மீட்டரிலிருந்து 1.25 மீட்டர் வரை மழை பெய்கிறது. 1 மீட்டர் அளவுக்கு மழை பெய்தால், சுமார் 23 லட்சம் லிட்டர் மழைநீரைச் சேமிக்க முடிகிறது. அதுவே 1.25 மீட்டர் பெய்தால், சுமார் 29 லட்சம் லிட்டர் சேகரிக்க முடிகிறது. இங்கு நாளொன்றுக்கு 30,000 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. இப்படிச் சேகரிப்பதால், எங்கள் 100 நாளைய தண்ணீர்த் தேவை பூர்த்தியாகிறது. தினமும் தண்ணீர் லாரிகளையே சார்ந்திருக்கும் எங்களுக்கு, அன்றாடம் தண்ணீருக்கு செலவழிக்கும் பணத்தில் 100 நாள்களுக்கு ஆகும் பணம் மிச்சமாகிறது.

நிலத்தடியில் அமைத்துள்ள கிணறுகள் நிரம்பும்வரை மழைநீரை நேரடியாகச் சேமிக்கிறோம். ஒரு சமயத்துக்கு ஒரு லட்சம் லிட்டர்வரை சேகரிக்கமுடியும். அதற்கும் அதிகமாக மழை பெய்தால், கிணறுகள் நிரம்பிய பிறகு மழைநீரை வழக்கமான சேமிப்பு முறைப்படி நிலத்தடி நீர் மீள்நிரப்புக்கு அனுப்பிவிடுகிறோம்" என்று, இந்த நேரடி மழைநீர் சேகரிப்பு சாத்தியமான முறையை ஹர்ஷ கோடா விளக்கினார்.

நேரடி மழைநீர் சேகரிப்பு
நேரடி மழைநீர் சேகரிப்பு
சபரி டெரேஸ் குடியிருப்பு வளாகம்

இவர்கள் இந்தச் செயல்முறையை அமைத்தபோது, பெரிய ஆதரவு இல்லை. கடந்த ஜூன் மாத மழையில் இவர்கள் அடைந்த பயனைக் கண்ட மற்ற குடியிருப்புகளும் தற்போது இந்த முறையைப் பின்பற்றத் தொடங்கியுள்ளனர். 15 குடியிருப்புகள் இந்த நேரடி மழைநீர் சேகரிப்பு முறையைப் பின்பற்றத் தொடங்கிவிட்டனர். இன்னும் 15 குடியிருப்புகளில், தற்போது இதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

சபரி டெரேஸ் குடியிருப்புப் பகுதியின் நேரடி மழைநீர் சேகரிப்பு முறையைப் பின்பற்றி, அதேபோல் நடைமுறைப்படுத்தியுள்ள சென்டிரல் பார்க் சௌத் என்ற குடியிருப்பு வளாகத்தின் தலைமை அதிகாரி ராகேஷ் ஓரியிடம் பேசினோம், ``இங்கு, 11 தொகுதிகளாக கட்டடங்கள் இருக்கின்றன. அவை அனைத்தையும் எங்களால் தொடர்புபடுத்த முடியவில்லை. அதனால், தண்ணீர் லாரிகளில் பெறும் தண்ணீரைச் சேமிப்பதற்காக அமைத்துள்ள தொட்டிகளிலேயே மழைநீரையும் சேகரிக்கும் வகையில் அமைத்துள்ளோம். நாங்கள் இதை அமைத்த பிறகு, இதுவரை இரண்டு மழை பெய்துள்ளன. சுமார் 15 நிமிடங்கள் மழை பெய்தால் 15,000 லிட்டர்கள் வரை மழைநீரைச் சேமிக்க முடிகிறது. ஒரு நாளைக்கு 6 முதல் 7 லாரி தண்ணீர் வாங்குகிறோம். இந்த முறையைப் பின்பற்றினால், அது இரண்டு அல்லது மூன்று லாரிகளோடு முடிந்துவிடுகிறது" என்று கூறினார்.

நீர் சேகரிக்கும் தொட்டி
நீர் சேகரிக்கும் தொட்டி
சபரி டெரேஸ் குடியிருப்பு வளாகம்

இதேபோல், தற்போது இந்த முறையையும் கூடுதலாகக் கிணறுகளையும் அமைத்துக்கொண்டிருக்கும் ஜெயின் பெப்புள் குரூப் குடியிருப்பு வளாகத்தின் செயலாளரான பிரமிளா அஷோக் குமாரிடம் பேசினோம், ``இப்போதுதான் இதை அமைத்துக் கொண்டிருக்கிறோம். இதோடு, மேலும் மூன்று கிணறுகளை வெட்டிக்கொண்டிருக்கிறோம். வழக்கமாக, நாளொன்றுக்கு 10 லாரி தண்ணீர் வாங்கிக்கொண்டிருந்தோம். அது தற்போது, ஆறு முதல் ஏழு லாரிகளாகக் குறைந்துள்ளது. நாங்கள் பயன்படுத்தும் தண்ணீரை சுத்திகரித்துப் பயன்படுத்தவும்செய்கிறோம். அதுவும் இங்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. இவற்றுக்கான பலன்கள் அடுத்த ஆண்டின்போது இன்னும் கூடுதலாகக் கிடைக்கும் என்று நம்புகிறோம்" என்று கூறினார்.

சென்னையில் திரும்பிய திசையெல்லாம் கட்டுமானங்களும் கட்டடங்களும் அதிகமாகிக்கொண்டுவருகின்றன. இதுபோன்ற அப்பார்ட்மென்ட்டுகளில் இவர்களைப் போலவே நீர் மேலாண்மையை நடைமுறைப்படுத்தினால், இத்தகைய சூழலில் தண்ணீர்ப் பிரச்னையிலிருந்து தப்பிக்க முடியும்.

தண்ணீர்
தண்ணீர்
Pixabay

அதுமட்டுமல்லாமல், சுத்திகரிப்பு முறை அவர்களுக்கு மேலும் பல பயன்களைத் தருகின்றன. இதேபோன்ற ஆர்கானிக் அப்பார்ட்மென்ட்டுகளாக அனைத்தும் மாறினால், பல பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.