Published:Updated:

`ரேடியோ காலர் வேலை செய்யல; கைவிரித்த தமிழகம்!’ - கர்நாடகாவில் இருவரை தாக்கிய குரோபர் யானை

கிருஷ்ணகிரியில் பிடிக்கப்பட்டு முதுமலையில் விடுவிக்கப்பட்ட குரோபர் யானை பந்திப்பூர் பகுதியில் செல்பி எடுக்க முயன்ற இருவரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

crowbar elephant
crowbar elephant

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள கதிரேப்பள்ளி மற்றும் பேராண்டப்பள்ளி பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் குரோபர், மார்க் என்ற இரு காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்ததாக குற்றம்சாட்டப்பட்டு வந்தது. விவசாய நிலங்களுக்குள் புகும் இவற்றை விரட்டச் சென்றபோது, இந்த யானைகள் தாக்கி 5 பேர் உயிரிழந்தனர். யானைகளைப் பிடிக்க அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து வனத்துறையினரை வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், இரு யானைகளில் ஒன்றான குரோபர் யானை கடந்த ஆகஸ்ட் மாதம் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

crowbar elephant
crowbar elephant

பின் அதன் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. குரோபர் காட்டு யானையை முதுமலை வனத்துக்குள் விடுவிக்கப்பட்டதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், முதுமலையில் விடப்பட்ட குரோபர் யானை ஒரு வாரத்தில் மற்ற காட்டு யானைகளுடன் சேர்ந்து உலவுவதாக வனத்துறையினர் புகைப்படமும் வெளியிட்டனர். தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

முதுமலை புலிகள் காப்பக வனத்துக்குள் உலவி வந்த குரோபர் யானை, கடந்த சில நாள்களாகக் காணவில்லை. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் அருகில் உள்ள விளைநிலப் பகுதியில் நேற்று யானை தாக்கி இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். அருகில் உள்ள வயலில் வேலை செய்துகொண்டிருந்த மக்கள் சத்தம் போட்டு யானையை விரட்டி அவர்களை மீட்டனர்.

crowbar elephant
crowbar elephant

அப்போது இவர்களைத் தாக்கிய யானையின் கழுத்தில் ரேடியோ காலர் இருப்பதைப் பார்த்து கர்நாடக வனத்துறைக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்ததில் இது குரோபர் யானையாக இருக்கலாம் என முடிவு செய்து தமிழக வனத்துறையைத் தொடர்புகொண்டு பேசினர். முதுமலை வனத்துறையினர் அளித்த தகவலின்படி இது குரோபர் யானை என்பதை முடிவு செய்தனர்.

இது குறித்து கர்நாடக வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் ``முதுமலையை ஒட்டியுள்ள பந்திப்பூர் அருகே நேற்று காலை யானை தாக்கி இருவர் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, பேட்டரி வீக் காரணமாக குரோபர் யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த ரேடியோ காலர், கடந்த 15 நாள்களாக செயல்படவில்லை என்பதும், அதை தமிழக வனத்துறையினர் கண்காணிக்காமல் அலட்சியமாகவும் இருந்துள்ளனர். இது குறித்து கர்நாடக வனத்துறைக்கு எந்தத் தகவலும் முதுமலை தரப்பிலிருந்து வரவில்லை" என்றார்.

crowbar elephant
crowbar elephant

இது குறித்து முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகளிடம் கேட்டபோது, ``குரோபர் யானையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தோம். கடந்த ஒருவாரமாக அதன் நடமாட்டத்தைக் கண்டறிய முடியவில்லை. இந்த நிலையில், தற்போது கர்நாடக வனப்பகுதியில் இருப்பதாக தெரியவந்துள்ளது" என்றார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காட்டுயிர் ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ``வயல்வெளியில் உலா வந்த குரோபர் யானையை பார்த்த இருவர், அதன் அருகில் நின்று செல்பி எடுக்க முயன்றதாகத் தெரிகிறது. அப்போது கோபமடைந்த யானை, இருவரையும் தாக்கியுள்ளது. குரோபர் யானை தாக்கி தமிழகத்தில் 5 பேர் பலியாகியுள்ள நிலையில், கர்நாடகாவிலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வண்ணம் அதைப்பிடித்து முகாமுக்கு அழைத்துச் செல்ல வனத்துறை திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது" என்றார்.