Published:Updated:

அத்துமீறும் காமராஜர் துறைமுக நிர்வாகம்... அழிக்கப்படுகிறதா எண்ணூர்!?

க.சுபகுணம்

நிலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குத்திக் குடைந்து, கீறிக் கிழித்து, சதுப்பு நிலங்களை மணல் போட்டு மூடி மூச்சடைக்கச் செய்து கொன்றுவிட்டுக் கைகளில் படிந்த ரத்தக்கரையைச் சாம்பல் கழிவு கலந்த ஆற்றில் கழுவிக் கொண்டிருக்கிறான் அந்த `வளர்ச்சி'.

எண்ணூர்
எண்ணூர் ( க.சுபகுணம் )

சாம்பல் மேடுகளும் சூழும் புகை மண்டலமும் எண்ணூர் முழுக்க எப்போதும் படர்ந்திருக்கக் காரணம் தெரியவேண்டுமா! நீங்கள் எண்ணூருக்குச் சென்றுதான் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த மக்கள் எவ்வளவு மாசடைந்த காற்றைச் சுவாசிக்கிறார்கள்! எவ்வளவு மோசமான நிலத்தில் வாழ்கிறார்கள்! சாம்பல் கழிவுகள் கசிந்துகொண்டேயிருக்கும் ஆற்று நீரைக் குடிக்கிறார்கள் என்பவற்றை உங்களால் உணரமுடியும். அந்த அளவுக்குச் சீரழிக்கப்பட்ட எண்ணூரில் இருக்கும் கொஞ்ச நஞ்ச வளங்களையும் விட்டுவைக்க `வளர்ச்சி' என்பவனுக்குத் துளியும் விருப்பமில்லை. அந்த நிலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குத்திக் குடைந்து, கீறிக் கிழித்து, சதுப்பு நிலங்களை மணல் போட்டு மூடி மூச்சடைக்கச் செய்து கொன்றுவிட்டுக் கைகளில் படிந்த ரத்தக் கரையை சாம்பல் கழிவு கலந்த ஆற்றில் கழுவிக் கொண்டிருக்கிறான் அந்த `வளர்ச்சி'.

காமராஜர் துறைமுக விரிவாக்கத் திட்டத்தின் வரைபடம்
காமராஜர் துறைமுக விரிவாக்கத் திட்டத்தின் வரைபடம்
காமராஜர் துறைமுக நிர்வாகம்

ஆம், காமராஜர் துறைமுகம், எண்ணூர் அனல் மின் நிலையம் என்று பல வளர்ச்சித் திட்டங்கள் எண்ணூருக்குக் கொடுத்திருக்கும் பரிசுகள் இவை. இவற்றின், விளைவுளைச் செரித்துக்கொள்ள முடியாமல் குமட்டிக்கொண்டிருக்கும் நிலத்துக்கு மேலும் அதிகச் சீரழிவுகளைக் கொண்டுவரத் துடிக்கிறது வளர்ச்சி. எண்ணூர் காமராஜர் துறைமுகம் கடலோர வேலைவாய்ப்பு மண்டலம் என்ற பெயரில் சில புதிய கட்டுமானங்களைத் தொடங்கியிருக்கிறது.

எண்ணூர் காமராஜர் துறைமுகம் கடலோர வேலைவாய்ப்புப் பிரிவு என்ற பெயரில் சில புதிய கட்டுமானங்களைத் தொடங்கியிருக்கிறது. அந்தக் கட்டுமானங்கள் அனைத்தும் நடப்பது உப்பங்கழியிலும் சதுப்புநிலத்திலும். அதற்குச் சூழலியல் அனுமதி, காற்று, நீர் சட்டங்கள் என்று எந்தவிதச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின் கீழும் அனுமதி பெறாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ரயில்வே யார்டு (Railway yard), கனரக வாகனங்கள் நிறுத்துமிடம், நிலக்கரிக் கிடங்கு, வரிச்சலுகை பெறக்கூடிய விற்பனைக் கிடங்கு என்று பல கட்டுமானங்களை அந்தத் திட்டத்தின் கீழ் செயல்படுத்துகிறார்கள். ஒரு திட்டம் தொடங்கப்படும் முன்பே செய்யவேண்டிய சூழலியல் தாக்க மதிப்பீடு செய்ய வேண்டும். ஆனால், ஜூன் 2017-ம் ஆண்டிலிருந்து சிறிது சிறிதாகத் தம் கட்டுமான வேலைகளைச் செய்துகொண்டிருக்கும் காமராஜர் துறைமுகம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ம் தேதிதான் அதற்கான சூழலியல் தாக்க மதிப்பீடு செய்ய டெண்டர் விட்டிருக்கிறார்கள்.

சதுப்பு நில ஆக்கிரமிப்பு
சதுப்பு நில ஆக்கிரமிப்பு
எண்ணூர்

கடலோர வேலைவாய்ப்புப் பிரிவின்கீழ் நடைபெறும் இந்தத் திட்டத்தின் மொத்தப் பரப்பளவு சுமார் 400 ஏக்கர்கள். 20,000 சதுர மீட்டர் அதாவது 4.94 ஏக்கர்கள் பரப்பளவுக்கு மேல் நடைபெறும் தொழில்சார் கட்டுமானங்களுக்கு சூழலியல் அனுமதி பெறவேண்டியது அவசியம். ஆனால், 400 ஏக்கர்களுக்கு நடைபெறும் இந்தத் திட்டத்துக்கு எந்தவித அனுமதியையும் இதுவரை வாங்கவில்லை. இது நடைபெறுவது காமராஜர் துறைமுக நிர்வாகத்துக்குச் சொந்தமான நிலத்தில் என்பதால், அத்தகைய அனுமதி வாங்க வேண்டியதில்லை என்று துறைமுக நிர்வாகம் சார்பில் கூறப்படுகிறது. ஒரு நிலம் யாருக்குச் சொந்தமானதாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால், குறிப்பிட்ட நிலத்தின் தன்மையைப் பொறுத்து அங்கு என்ன மாதிரியான செயற்பாடுகளை மேற்கொள்ளலாம் என்ற வகைப்பாடு தமிழக நிலவியல் பதிவேடுகளில் கூறப்பட்டுள்ளன. ரயில்வே யார்டு, நிலக்கரி மற்றும் வணிகச் சரக்குக் கிடங்குகள், கனரக வாகனங்களின் நிறுத்துமிடம் போன்றவை அமைவது உப்பங்கழி மற்றும் சதுப்பு நிலப்பகுதிகளில்தான். அந்த நிலப்பகுதிகளில் உப்பு உற்பத்தி செய்வது, மீன் பிடித்தல், மீன் பண்ணை போன்ற வேலைகளைச் செய்யலாம். ஆனால், அதைத் தொழிற்சாலை நிலமாகக் கருத்தில் கொண்டு கட்டுமானங்கள் மேற்கொள்ளக் கூடாது. அப்படி மேற்கொள்ள வேண்டுமென்றால், அதற்குமுன் சூழலியல் தாக்க மதிப்பீடு, நீர் மற்றும் காற்று சட்டங்களின்படி அனுமதி வாங்க வேண்டும். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒப்புதல் பெற வேண்டும். இவை எதையுமே பெறாமல் காமராஜர் துறைமுக நிர்வாகம், கட்டுமான வேலைகளைத் தொடங்கிவிட்டது.

இந்தத் திட்டத்துக்காகக் கையகப்படுத்தப்போகும் நிலப்பகுதியில் இதற்குமுன் கடலோர மண்டல விதிகளின்படி பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருந்த சதுப்பு நிலங்களும் அடக்கம். அவை தற்போது அந்த விதிகளின் கீழிருந்து நீக்கப்பட்டுவிட்டன. ஒரு பகுதியை இத்தகைய அங்கீகாரத்திலிருந்து நீக்கும்போது அதை நியாயப்படுத்தும் காரணிகளைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் செய்யாமல் வெறுமனே இந்தத் திட்டத்தின்கீழ் கையகப்படுத்தப்போகும் நிலங்களின் அங்கீகாரத்தை நீக்கியுள்ளார்கள். மேற்கண்ட வரைபடத்தில் நீல நிறக் கோடுகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பகுதிகள் அலைத்தாக்கம் நிறைந்த பகுதி. அவை சூழலியல்ரீதியாக முக்கியமானது மட்டுமல்லை. அங்கு கட்டுமானங்கள் வந்தால் அலைத்தாக்கம் அதிகமுள்ள பகுதி என்பதால் சேதங்களும் அதிகமாக இருக்கும்.

கட்டுமான வேலைகள் தொடங்கிய பிறகு சூழலியல் தாக்க மதிப்பீடு செய்வதற்கான டெண்டர் அறிவிப்புகள் வெளியானது. இதிலிருந்தே எந்தவித அனுமதியும் பெற வேண்டியதில்லை என்றால் எதற்காகச் சூழலியல் தாக்க மதிப்பீடு செய்ய டெண்டர் விட வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. கட்டுமான வேலைகள் நடந்துகொண்டிருக்கும் அத்திப்பட்டு கிராமத்தின் முக்கியமான வெள்ள வடிகால் பகுதியாக செயல்பட்டு வந்த நிலத்தில், தற்போது நடைபெறும் இந்தக் கட்டுமானப் பணிகள், அந்தப் பகுதி மக்களின் வாழ்விடங்களில் மழைக்காலங்களின்போது வெள்ளம் ஏற்படும் அபாயத்தை உருவாக்குவதாகக் கூறுகிறார் அப்பகுதியைச் சேர்ந்த ஆனந்தன். அதோடு, நிலத்தடி நீர்வளத்தைப் பெருக்கும் சதுப்பு நிலங்களை ஆக்கிரமிப்பது அப்பகுதியின் நீர்வளத்தையே அழித்து விடுமென்றும் ஏற்கெனவே தண்ணீர் பற்றாக்குறை நிலவிவரும் பகுதியில் மேலும் பிரச்னையையே இது கொண்டுவரும் என்றும் கூறினார்.

இதுகுறித்துப் பேசிய சூழலியல் ஆர்வலர் பூஜா குமார், ``எண்ணூர் ஆற்றுக்கு மேற்குப் பகுதியிலுள்ள சதுப்பு நிலம் மற்றும் உப்பங்கழிகள், அந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளத்தைப் பாதுகாக்கக்கூடிய மிக முக்கியமான சூழலியல் பகுதி. இந்தப் பகுதியில் இதுபோன்ற திட்டங்களைக் கொண்டுவரும்போது உவர்நீர் தேங்குவதற்கான நிலப்பகுதி குறைகிறது. அதனால், அங்கிருக்கும் நிலத்தடி நீர்வளம் பாதிக்கப்படுகிறது. அத்தகைய பாதிப்புகளில் முக்கியமானது நிலத்தடி நீரில் உப்பு நீர் கலப்பது. ஏற்கெனவே சென்னையிலிருக்கும் நான்கு பெரிய ஏரிகளின் நீர் அளவு மிக மிகக் குறைவாக இருக்கிறது. அரசாங்கமே நாம் இப்போது நிலத்தடி நீரை நம்பித்தான் இருக்கிறோம் என்பதை ஒப்புக்கொண்டுள்ளது.

அப்படியிருக்க நிலத்தடி நீர்வளம் மிகுந்த பகுதிகளைப் பாதுகாக்க வேண்டியது முக்கியம். இப்போதே ஆரணி ஆறு-கொற்றலை ஆறு வெள்ள வடிகால் பகுதிகளில் மீஞ்சூர் வரைக்குமே கடல்நீர் நிலத்தடியில் உட்புகுந்துவிட்டது. இந்த நிலையில், இதுபோன்ற கட்டுமானங்கள் மேலும் அபாயங்களைத்தான் கொண்டுவரும், ஆகவே, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த வடிகால் மற்றும் சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதுதான் ஒரே தீர்வு. எண்ணூர் சதுப்புநிலப் பகுதியில் வரவுள்ள அனைத்துத் திட்டங்களையும் ரத்து செய்து அதைச் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்" என்று கூறினார்.

பாதிக்கப்படப்போகும் பகுதிகள்
பாதிக்கப்படப்போகும் பகுதிகள்
பூஜா குமார்
காமராஜர் துறைமுகத்தின் கட்டுமான வேலைகள் நடந்துகொண்டிருக்கும் பகுதிகள் பிங்க் நிறத்தில் காட்டப்பட்டுள்ளன. அதில், சரக்குக் கிடங்குகள் வரவிருக்கும் பகுதிகள் புதர்க்காடுகளும் சதுப்பு நிலங்களும் நிறைந்தது. அதேபோல் உப்பங்கழியில் தளவாடங்கள் பூங்கா (Logistics park) வருகிறது. அதோடு கனரக சரக்கு வாகனங்கள் நிறுத்துமிடம், அலுவலகக் கட்டடம் என்று அனைத்தும் சதுப்பு நிலங்களிலும் உப்பங்கழிகளிலும் அமையவுள்ளன. அதற்கான பணிகளும் சூழலியல் அனுமதி இல்லாமலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

காமராஜர் துறைமுகத்தின் இந்தத் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பகுதிகளைப் பார்வையிட்ட நீரியல் ஆய்வாளர் பேரா.ஜனகராஜன், "கடற்கரையில் அமைந்திருக்கும் நிலப்பகுதிகளைப் பாதுகாக்க வேண்டியது முக்கியம். இது 8000 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் நீர்ப்பரப்புப் பகுதி. ஆரணி, கொற்றலை ஆகிய இரண்டு ஆறுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கு ஒன்று சேர்வதால் இங்கு இந்த நீர்ப்பரப்புப் பகுதி உருவாகியிருக்கிறது. கடலோர சுற்றுச்சூழலோடு நாம் விளையாடவே கூடாது. கடலோடு விளையாடவே கூடாது. ஆனால், சூழலியல் அக்கறையே இல்லாமல் நடைபெறும் மனிதத் தலையீடுகள் எண்ணூர், பழவேற்காடு கடலோரப் பகுதிகளைப் பிரித்து, துண்டு துண்டாக வெட்டிக் கூறுபோட்டுக் கொலை செய்துகொண்டிருக்கிறது. இந்தத் திட்டம் வரவிருக்கும் பகுதி அலையாத்திக் காடுகள் நிறைந்தது. உப்பங்கழிகள் நிறைந்தது. இது பொருளாதாரச் சந்தைகளை மட்டுமே நம்பி இதுபோன்ற திட்டங்களைக் கொண்டுவருவது மிகப்பெரிய இழப்புகளைக் கொடுக்கும்" என்று கூறினார்.

சதுப்புநில ஆக்கிரமிப்பு
சதுப்புநில ஆக்கிரமிப்பு
க.சுபகுணம்
கனரக வாகனங்கள் நிறுத்துமிடம் அமைப்பதற்காகச் சதுப்பு நிலத்தை மணல் போட்டு மூடி மேடாக்கும் பணி நடந்துகொண்டிருக்கிறது...

குறைந்தது ஒரு மணிநேரம் நீங்கள் அத்திப்பட்டு கிராமத்தின் பக்கம் சென்று வந்தால், உங்கள் முகத்தை ஒரு வெள்ளைத் துணியை எடுத்துத் துடைத்துப் பாருங்கள். அதில் படிந்திருக்கும் கருப்பு நிற அழுக்குகள் அந்தப் பகுதியின் நிலைமையை வார்த்தைகளே இன்றி உரக்கக் கூறும். நீங்கள் எண்ணூர் ஆற்றங்கரைகளில் வெள்ள வடிகால் ஓரங்களில் நடந்துவிட்டு வந்தபிறகு உங்கள் கால் சட்டை, காலணி அனைத்தையும் ஒரே ஒருமுறை பார்வையிடுங்கள். அவை அந்த நிலத்தில் மணலுக்குப் பதிலாகப் பரவியிருக்கும் சாம்பல் கழிவுகளின் கதைகளைச் சொல்லும்.

இவ்வளவையும் தாண்டி அங்கு நீங்கள் நின்றிருக்கும்போது உடலை வாட்டும் வெப்பம், தன்னை நீரில் நனைக்குமாறு கெஞ்சிக் கேட்கும் வறண்டுபோன தொண்டைக்குழி உங்கள் உடலின் அத்தனைப் புலன்கள் வழியாகவும் அங்கு நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கும் மோசமான சூழலியல் சுரண்டலைப் பற்றி வரலாற்றுப் பாடமெடுக்கும்.

ஒரு நிலத்தின் பிரச்னையை ஒளிப்படங்கள் மூலமாக, காணொளிகள் மூலமாக, எழுத்து மூலமாக விவரிக்கலாம். ஆனால், எதிலுமே விவரிக்க முடியாத அளவுக்குப் பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது எண்ணூர். அவை போதாதென்று மேலும் அதிகச் சேதங்களை இந்தத் திட்டம் உண்டாக்கும்.