``ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுவோம்; நகரின் பசுமைக்காக ஒருநாள்!" - `ஈரோடு விதைகள்' குழுவின் சமூக சேவை
100 வாரங்களைக் கடந்து, இரண்டு ஆண்டுகளாக எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் எங்க சமூகப் பணியைத் தொடர்ந்து செய்துவருகிறோம்.

ஈரோடு மாநகரைப் பசுமையான நகரமாக மாற்றும் நோக்கத்தில் செயல்படுகிறது, `ஈரோடு விதைகள்' அமைப்பு. வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மரக்கன்றுகளை நடும் ஆக்கபூர்வமான பணிகளைச் செய்கிறது இந்த அமைப்பு. இதில், வேலைக்குச் செல்வோர், தொழில்முனைவோர்கள், மாணவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் தன்னார்வலர்களாக இருக்கின்றனர். இந்த அமைப்பின் தலைவர் இளங்கோவனிடம் பேசினோம்.

``2013-ம் ஆண்டு நண்பர்களுடன் இணைந்து, மூன்று குழுக்களாக ஈரோடு மாநகரில் மரக்கன்றுகளை நடும் முயற்சிகளைத் தொடங்கினோம். சில காரணங்களால் அந்த அமைப்பிலிருந்து பிரிந்து வந்து, 2017-ம் ஆண்டு `ஈரோடு விதைகள்' என்ற அமைப்பை நண்பர்கள் சிலருடன் இணைந்து உருவாக்கினேன். பிறகு, இளைஞர்கள் பலரும் தன்னார்வலர்களாக எங்க அமைப்பில் இணைந்தார்கள்.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் மரம் வளர்க்க ஆசைப்பட்டால், எங்க அமைப்பை அணுகுவாங்க. உடனே, நான் அல்லது எங்க குழுவினர் அந்த இடத்துக்குச் சென்று பார்ப்போம். அந்த இடத்துல மரம் நட்டால் நன்றாக வளரும், மக்கள் நல்லா பார்த்துப்பாங்களா போன்றவற்றை உறுதி செய்துக்குவோம். பிறகு, அந்தப் பகுதியில் மரக்கன்றுகள் நடும் தகவலை எங்க வாட்ஸ்அப் குரூப்ல பதிவிட்டுவிடுவேன்.

ஞாயிற்றுக்கிழமையில் அந்தப் பகுதிக்குச் சென்று மரக்கன்றுகளை நடுவோம். அத்துடன் எங்க பணிகள் முடியாது. நட்ட மரக்கன்றுகள் சரியாக வளருதான்னு அவ்வப்போது நேரில் சென்று பார்ப்போம். 100 வாரங்களைக் கடந்து, இரண்டு ஆண்டுகளாக எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் எங்க சமூகப் பணியைத் தொடர்ந்து செய்துவருகிறோம். தேவையான மரக்கன்றுகளை வாங்குவது மற்றும் பராமரிப்புச் செலவு உட்பட எல்லாச் செலவுகளையும் குழுவிலுள்ள உறுப்பினர்களே ஏத்துக்கிறோம்.
ஈரோடு மாநகரில் மட்டும் இதுவரை 2,000 மரக்கன்றுகளை நட்டிருக்கிறோம். ஒவ்வொரு பகுதியிலும் குறைவான மரக்கன்றுகளை நட்டாலும், அவை சிறப்பாக வளர்வதை உறுதிசெய்வோம். மரக்கன்றுகள் நடுவது தவிர, ஏழை எளிய மக்களின் கல்வி மற்றும் மருத்துவ நலனுக்கான பல்வேறு சமூகப் பணிகளையும் செய்துவருகிறோம்" என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார், இளங்கோவன்.