Published:Updated:

`4 பட்டாம்பூச்சி இனங்கள், ஒரு பறவையினம்!' - சேலம் கணக்கெடுப்பில் தென்பட்ட புதிய உயிரினங்கள்

சாக்லேட் ஆல்பெட்ராஸ்
சாக்லேட் ஆல்பெட்ராஸ்

``காமன்டின்செல் என்ற பட்டாம்பூச்சி மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், கிழக்கு தொடர்ச்சி மலையில் பார்த்ததில்லை. இதுவே புதிய வரவாக உள்ளது''

சேலம் வன எல்லையில் பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது. இந்தக் கணக்கெடுப்பு பணியைச் சேலம் வனத்துறையும் சேலம் இயற்கைக் கழகமும் இணைந்து நடத்தின. சேலம் வன எல்லையில் புதிய வரவாக ஒரு பறவையும், நான்கு பட்டாம்பூச்சிகளும் இருப்பது தெரிய வந்திருக்கின்றன.

முருகேசன்
முருகேசன்

இதுபற்றி சேலம் இயற்கைக் கழகத்தின் செயலாளர் முருகேசன், ``வனங்களில் காணுயிர்ச் சூழலை உருவாக்குதல் மற்றும் அவற்றை மேம்படுத்துதல், பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சி இனங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கத்தில் வனங்களில் ஒவ்வொரு ஆண்டும் பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவது வழக்கம். அதையடுத்து இந்த ஆண்டும் சேலம் வனத்துறையில் உள்ள சேலம் சேர்வராயன் தெற்கு, வடக்கு, ஓமலூர், மேட்டூர், கல்வராயன், டேனிஷ்பேட்டை, வாழப்பாடி, ஆத்தூர், தம்மம்பட்டி என 9 வனச் சரக அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டோம்.

இந்தக் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையின் சார்பாக 50 பேரும், இயற்கைக் கழகத்தின் சார்பாக 85 பேரும் என மொத்தம் 135 பேர் இந்தப் பணியில் ஈடுபட்டோம். வனத்துறையும், இயற்கைக் கழகமும் இணைந்து ஒரு குழுவிற்கு 3 முதல் 5 பேர் சேர்ந்து மொத்தம் 17 குழுக்களாகப் பிரிந்து 9 சரகத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பை பைனாகுலர், நவீன கேமரா உதவியோடு 2 நாள்கள் நடத்தினோம்.

போர்லைன்ப்ளூ
போர்லைன்ப்ளூ

இந்தக் கணக்கெடுப்பில் 214 பறவைகளும் 136 பட்டாம்பூச்சிகளும் பதிவு செய்யப்பட்டன. இந்த வருடத்தில் புதியதாக ஒயிட் ரம்புடு ஸ்பைன்டேல் ஒரு பறவையும், சாக்லேட் ஆல்பெட்ராஸ், காமன்டின்செல், போர்லைன் ஃளூ, ஓபேக் சிக்ஸ் லைன் ப்ளூ என 4 பட்டாம் பூச்சிகளும் புதிய வரவாக இருந்தன.

இதில் ஒயிட் ரம்புடு ஸ்பைன்டேல் என்ற பறவை சேலம் வனத்துறைக்குப் புதியதாக இருந்தது. இப்பறவை சேலம் வன எல்லையில் கூட்டம் கூட்டமாக இருக்கிறது. அதேபோல காமன்டின்செல் என்ற பட்டாம்பூச்சி மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், கிழக்கு தொடர்ச்சி மலையில் பார்த்ததில்லை. இதுவே புதிய வரவாக உள்ளது.

ஓபேக் சிக்ஸ் லைன்ப்ளூ
ஓபேக் சிக்ஸ் லைன்ப்ளூ

இதுதவிர மேட்டூர் பண்ணவாடி காவிரி ஆற்றுப்படுகையில் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் குவிந்து இருக்கின்றன. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு சேலம் வனத்துறைக்கு உட்பட்ட பகுதிகள் செழிப்பாக இருந்தன. பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சி இனங்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கின்றன'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு