Published:Updated:

45 டிகிரி வெயில்... சமாளிக்க தண்ணீர் தேடி ஓடும் ஃபிரான்ஸ்... என்ன நடக்கிறது ஐரோப்பாவில்?

ஃபிரான்ஸ்
ஃபிரான்ஸ் ( AP )

சூழலியல் பிரச்னைகள் பல கோணங்களில் பல்வேறு காரணங்களால் ஏற்படுகின்றன. நாம் இயற்கையின் நிறைய இடங்களில் கை வைத்துவிட்டோம். ஒவ்வொன்றுக்குமான எதிர்வினை ஒவ்வொரு விதமாகத்தானிருக்கும்.

பூமி சூடாகிக் கொண்டிருக்கிறது என்று நாம் 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே கேட்டுக் கொண்டிருக்கிறோம். கடந்த சில ஆண்டுகளில் அதற்கான பலன்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இருந்தும் இன்றுவரை இதற்குக் காரணமான பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றுவதில் கொஞ்சமும்கூட அக்கறையின்றியே வாழ்ந்து வருகிறோம். இதை மக்களின் குற்றமாகச் சொல்வது சரியா என்ற கேள்வியும் எழுகிறது. நுகர்வுக் கலாச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியதிலிருந்தே இந்தச் சூட்டை நாம் உணரத் தொடங்கிவிட்டோம். திரும்பிய திசையெங்கும் குவிந்து கிடக்கும் விளம்பரங்கள், மக்கள் மத்தியில் நுகர்தலை ஊக்கப்படுத்திய அரசுகள் அந்த அரசுகளை ஊக்கப்படுத்திய பெரு நிறுவனங்கள் அனைத்தும்தான் இதற்குப் பொறுப்பாளிகள்.

இல்லினாய் என்ற அமெரிக்க மாகாணத்தின் காவல் துறை கடந்த வாரம் சமூக வலைதளத்தில் இப்படிப் பதிவேற்றியது,

வெப்பம்
வெப்பம்
Pixabay
குற்றச் செயல்கள் புரிய முடியாத அளவுக்கு வெளியே அவ்வளவு வெப்பமாக உள்ளது.

அதாவது, குற்றவாளிகளும்கூட வெளியே வருவதற்கு அஞ்சும் அளவுக்கு அமெரிக்காவின் வெப்பம் அதிகமாகியிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். தட்பவெப்பநிலை 40 டிகிரியைத் தொட்டுவிட்ட நிலையில் வெப்பம் தாளாமல் அமெரிக்கா முழுவதும் சுமார் 100 மில்லியன் மக்கள் அவதியுறுகின்றனர். கடந்த 18-ம் தேதி, அமெரிக்காவின் பிரபல கால்பந்து வீரர் மிட்ச் பெட்ரஸ் (Mitch Petrus) ஒரு நாள் முழுக்க வெயிலில் பயிற்சி எடுத்ததில் வெப்பம் தாளாமல் உயிரிழந்துள்ளார். இதேபோல், மேலும் ஐந்து மரணங்களுக்கு வெயில்தான் காரனமென்று பதிவாகியுள்ளது.

இந்த ஆண்டின் இரண்டாவது கோடைக்காலத்தை ஐரோப்பியர்கள் அனுபவித்து வருகிறார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு, சஹாராவிலிருந்து பயணித்து வந்த வெப்பக் காற்று கடும் வெயிலுக்குக் காரணமாக அமைந்தது. அந்த மாதம்தான் ஐரோப்பிய கண்டத்தின் மிக அதிக வெப்பமான ஜூன் மாதம் என்றும் பதிவானது. மேற்கு ஐரோப்பாவின் உயரமான மலைத்தொடர் பிளாங்க் (Mont Blanc). வழக்கமாக ஜூன் மாதத்தில் உறைந்து கிடக்கும் மலைப்பகுதியில் இந்த ஆண்டு 7 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. பிரான்சில் 45.9 டிகிரி பதிவாகியுள்ளது. முந்தைய ஆண்டுகளைவிட 2.6 டிகிரி அதிகம். அலாஸ்கா, போர்ச்சுகல் போன்ற நாடுகளில் காட்டுத்தீ காடுகளைத் தின்றுகொண்டிருக்கின்றன.

பாரீஸ்
பாரீஸ்
AP

இதேபோல் அதீத வெப்பத்தை இதற்கு முன்னும் சந்தித்திருக்கிறோம். 2003-ம் ஆண்டு ஐரோப்பாவில் இரண்டு வாரங்களுக்கு நீடித்த வெப்ப அலை ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களைப் பலி வாங்கியது. அப்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சம்பவமாக அது கூறப்பட்டது. அது நடந்து பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து, பிரிட்டனின் காலநிலை ஆராய்ச்சி மையமான ஹாட்லி சென்டரில் நிகோலஸ் கிரிஸ்டிடிஸ் என்ற ஆய்வாளர் ஓர் ஆய்வு மேற்கொண்டார். அதில், ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இத்தகைய பிரச்னை நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று விரைவடைந்துவிட்டதாகக் கண்டுபிடித்தார். அதுமட்டுமில்லை, 2040-க்குப் பிறகு இது வழக்கமான ஒன்றாகிவிடக் கூடுமென்றும் அவர் எச்சரித்தார்.

2004-ம் ஆண்டுக்கு முன் வரையிலுமே பல ஆண்டுகளாகப் பூமியின் எந்தவிதக் காலநிலை பிரச்னைகளையும் நாம் காலநிலை மாற்றத்தோடு ஒப்பிடவில்லை. அப்படி ஒப்பிடுவதை அதீதக் கற்பனை என்று சொல்லி நிராகரித்துக் கொண்டிருந்தோம்.

2004-ம் ஆண்டில் அனைத்தும் மாறத் தொடங்கியது.

2003-ம் ஆண்டு நிகழ்ந்த ஐரோப்பிய அதீத வெப்ப அலைச் சம்பவம் பல கேள்விகளைத் தோற்றுவித்தது. அது பல ஆய்வுகளுக்கு வித்திட்டது. அதன்பிறகு, பசுமை இல்ல வாயுக்கள் வளிமண்டலத்தில் கலக்கத் தொடங்கிய பிறகு நிகழும் காலநிலைச் செயற்பாடுகளையும் அதற்கும் முன்பிருந்த காலநிலைச் செயற்பாடுகளையும் பீட்டர் ஸ்காட் என்ற ஆய்வாளரும் அவரது குழுவும் ஆராய்ந்து ஒப்பிட்டனர். அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் மிக முக்கியமானது. அதுவரை நடைபெற்ற இரண்டு முக்கியமான வெப்ப அலைச் சம்பவங்களுக்கு மூல காரணம் பசுமை இல்ல வாயுக்களால் நிகழ்ந்த காலநிலை மாற்றம்தான் என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.

அதுதான் காலநிலை மாற்றம் குறித்த ஆய்வுகளைக் குதிரை வேகத்தில் முடுக்கிவிட்டது. இதுவரை இருந்ததைவிட மோசமான வறட்சியைக் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம் சந்தித்து வருகிறது. அந்தக் கடுமையான வறட்சிக்கும் 2017-ம் ஆண்டு தெற்கு ஐரோப்பா அதீத வெப்பத்தை அனுபவித்ததற்கும் காரணம் அதிகமாகிவிட்ட பசுமை இல்ல வாயு வெளியீடுதான் என்பதைச் சமீபத்திய ஆய்வுகள் உணர்த்தியுள்ளன. வேர்ல்டு வெதர் ஆட்ரிபியூஷன் (World Weather Attribution) என்ற அமைப்பு அதே ஆண்டில் வெளியிட்ட ஓர் ஆய்வறிக்கை, பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் காரணமாக முடுக்கிவிடப்பட்டுள்ள காலநிலை மாற்றம்தான் இந்தப் பிரச்னைகளுக்குக் காரணம் என்று உறுதி செய்தது.

காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம்
Pixabay

அவர்கள் வெப்ப அலைகளை மட்டுமே இதன் விளைவுகளாகக் கூறவில்லை. வெள்ளம், புயல் போன்றவையும் காலநிலை மாற்றத்தின் தடயங்களைக் கொண்டிருப்பதை நிரூபித்துள்ளார்கள். 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹார்வி என்ற சூறாவளி அமெரிக்காவைத் தாக்கியது. அது டெக்சாஸில் நிலைகொண்டதால் கடுமையான மழை பெய்து வெள்ளமும் வந்தது. அதனால், எண்பதுக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். அதேசமயத்தில், மழை பொழியும் அளவு 8% முதல் 19% வரை உயர்ந்ததற்கு காலநிலை மாற்றம்தான் காரணமென்று ஆய்வுகள் நிரூபித்தன. 2012-ம் ஆண்டு வரையிலுமே அமெரிக்க வானிலை ஆய்வு மையம் பல சுதந்திரமான ஆய்வுகளின் தொகுப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தது. அந்த ஆய்வுகளில் 70 சதவிகிதம் காலநிலை மாற்றம் வழக்கமான வானிலை நிகழ்வுகளில் ஏற்படுத்தும் மாற்றம் குறித்தவை.

ஒருபுறம் காலநிலை மாற்றம் தீவிர சிக்கல்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. மறுபுறம், அதுகுறித்துச் சரியான புரிதலின்றி ஏற்படும் சூழலியல் பேரிடர்கள் அனைத்திற்கும் காலநிலை மாற்றத்தையே காரணமாகச் சொல்லிவிட்டு வசதியாகத் தப்பித்துக்கொண்டிருக்கிறோம். உதாரணத்திற்கு, கடந்த 2014-ம் ஆண்டு தென் கிழக்கு பிரேசிலில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. சாவோ பாலோ, ரியோ டி ஜெனிரீயோ போன்ற நகரங்களின் நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பு மூன்று மற்றும் ஐந்து சதவிகிதத்திற்ௐகும் கீழே சென்றுவிட்டது. அந்தப் பேரிடர் ஏற்படக் காரணமாகப் பலரும் காலநிலை மாற்றத்தைக் குற்றம் சாட்டினர்.

உலக வெப்பமயமாதல்
உலக வெப்பமயமாதல்
Pixabay

அதற்கு அடுத்த ஆண்டே ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஃபிரெட்ரிக் ஓட்டோ வெளியிட்ட ஆய்வறிக்கையில் அங்கு ஏற்பட்ட வறட்சிக்கான காரணிகளில் பசுமை இல்ல வாயுக்களின் பங்கு இருப்பதாகத் தெரியவில்லை என்று உறுதியானது. 1960-ல் இருந்த மக்கள் தொகையைவிட அந்த நகரங்களில் இப்போது மூன்று மடங்கு அதிகமாகியுள்ளது. நுகர்வு அதிகமானது, காடழிப்பு, அதீதச் சுரண்டல் போன்றவைதான் அங்கு பற்றாக்குறை ஏற்பட்டு வறட்சிக்கு வழி ஏற்படுத்தியிருக்கிறது.

Vikatan

அதேபோல், 2013-ம் ஆண்டு பிலிப்பைன்ஸில் ஹையன் என்ற மிகப்பெரிய சூறாவளி 6,000 பேரைப் பழிவாங்கிச் சென்றது. அதற்கும் காலநிலை மாற்றமே காரணமாக்கப்பட்டது. 2015-ம் ஆண்டு நடந்த ஆய்வுகள் அந்தப் பேரழிவுக்குக் காரணம் அங்கிருந்த புதைபடிம எரிபொருள் எடுக்கும் நிறுவனங்கள்தான் என்று தெரியவந்தது.

சூழலியல் பிரச்னைகள் பல கோணங்களில் பல்வேறு காரணங்களால் ஏற்படுகின்றன. நாம் இயற்கையின் நிறைய இடங்களில் கை வைத்துவிட்டோம். ஒவ்வொன்றுக்குமான எதிர்வினை ஒவ்வொரு விதமாகத்தானிருக்கும். அந்த எதிர்வினைகள் அனைத்துக்கும் ஒரேமாதிரியாகச் செயலாற்ற முடியாது. அவற்றைச் சரியாகப் புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டும்.
பசுமை இல்ல வாயுக்கள்
பசுமை இல்ல வாயுக்கள்
Pixabay

இனி வரும் காலங்களில் சூழலியல் பேரிடர்கள் வழக்கமான ஒன்றாகத்தான் இருக்கப் போகின்றன. இன்றே அப்படித்தான் இருக்கிறது. இயற்கைப் பேரிடர்களுக்குக் காரணம் காலநிலை மாற்றம் மட்டுமே இல்லை. காலநிலை மாற்றம், உலக வெப்பமயமாதல் என்று அனைத்திற்கும் காரணமாக இருக்கும் அடிப்படைக் குற்றங்களை எதிர்த்துத்தான் முதலில் போராடவேண்டும். மக்களைக் குற்றவாளிக் கூண்டில் நிற்கவைத்து விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளும் அதேவேளையில் அவர்களைவிடப் பல மடங்கு இவற்றில் பங்கு வகிக்கும் தொழிற்சாலைகளும் பெரு நிறுவனங்களும் களையெடுக்கப்பட வேண்டும்.

இதைச் சமாளிக்க, பொருளாதார நலன்களை மட்டுமே கருத்தில்கொண்ட முன்னேற்றத்தைத் தவிர்க்க வேண்டும். அதற்கு முதலில் நடைபெறும் பேரிடர்களின் அடிப்படைக் காரணிகளை நாம் கண்டறிய வேண்டும். சரியான புரிந்துணர்வின்றி சூழலை அணுகுவது அபாயத்தில்தான் முடியும்.

அடுத்த கட்டுரைக்கு