Published:Updated:

நீ இன்றி நாங்கள் வாழ முடியாது அமேசான்... `பூமியின் நுரையீரலை'க் காக்க அழைக்கும் பிரபலங்கள்!

பா.கவின்

ஏற்கெனவே, நம்முடைய பூமியின் நுரையீரல் பாதிப்படைந்துள்ளது. அதுவும் இப்போது தீக்கிரையாகிக்கொண்டிருக்கிறது.

Amazon rain forest fire
Amazon rain forest fire

பிரேசிலில் உள்ள அமேசான் மழைக்காடுகள், கடந்த 10 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவுக்கு, கடந்த 2 வாரங்களாக தீக்கிரையாகிக்கொண்டிருக்கின்றன .

ரோமாரியோ, ஆக்ரி, அமேசோனாஸ் போன்ற பல மாநிலங்கள் இதனால் மிகவும் பாதிப்படைந்துள்ளன. இந்த பாதிப்புகளின் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ட்விட்டரில் # Pray for Amazonia, #Prayfor Amazon என்ற hastag -குகள் வைரலாக உபயோகிக்கப்பட்டுவருகின்றன .

உலக அளவில் பல முன்னணிப் பிரபலங்கள் ட்விட்டரில் அமேசான் காடுகளுக்கு ஆதரவாகப் பதிவிட்டுள்ளனர்.

பிரபல கால்பந்து விளையாட்டு வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ ( Cristiano Ronalo) ட்விட்டரில் அமேசான் காடுகளைப் பற்றி பதிவிட்டிருப்பதாவது... "உலகிற்குத் தேவையான 20% ஆக்ஸிஜனை உருவாக்கும் அமேசான் மழைக்காடுகள், கடந்த மூன்று வாரங்களாக எரிந்து கொண்டிருக்கின்றன. நம் பூமியைப் பாதுகாப்பது நமது கடமை! #Pray for amazonia என்று கூறியுள்ளார்.

பிரான்ஸ் ப்ரெசிடென்ட், இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " உண்மையைச் சொல்லப்போனால், எங்கள் வீடு எரிகிறது. பூமியின் நுரையீரலாக விளங்கி, 20% ஆக்ஸிஜனை அளித்துக்கொண்டிருக்கும் அமேசான் மழைக்காடுகள், தீக்கிரையாகிக்கொண்டிருக்கின்றன.

இது ஒரு சர்வதேச பிரச்னை ஆகும். G7 அமைப்பின் உறுப்பினர்களே! நாம் இந்த அவசரநிலை பற்றி இரண்டு நாள்களில் கலந்தாலோசிக்க வேண்டும்" என்று அழைப்பு விடுத்துள்ளார்.

பருவ நிலை மாற்றம்குறித்து ஆய்வு செய்துகொண்டிருக்கும் வானியல்ஆய்வாளரான எரிக் ஹோலந்தஸ்( Erric Holanthus) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ``ஈடு இணையற்ற காடுகளான அமேசான் காடுகள்தான் , நாம் பூமியில் வாழ்வதை சாத்தியமாக்கிக்கொண்டிருக்கின்றன. அவை இப்போது வரலாறு காணாத வகையில் எரிந்துகொண்டி ருக்கின்றன.

கார்பன் டை ஆக்சைடு வெளியிடப்படும் அளவு அதிகமாகி உள்ளது. கடந்த மாதம், நம் பூமியின் வரலாற்றிலேயே மிக வெப்பமான மாதமாகும். நாம் பருவநிலை அவசரத்தில் உள்ளோம்!" என்று அவர் எச்சரித்துள்ளார்.

ஹாலிவுட் நடிகரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான Leonardo Dicaprio-வின் பதிவில், ``3 மில்லியனுக்கு மேற்பட்ட உயிரினங்கள், ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட பூர்வீகக் குடிகளைத் தன்வசம்கொண்ட பூமியின் நுரையீரலான பிரேசிலின் அமேசான் மழைக் காடுகள், கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக எரிந்து கொண்டிருக்கிறது. இந்த வருட ஆரம்பத்திலிருந்து, இதுவரை 74 ஆயிரம் முறை இக்காடுகளில் தீப்பற்றியுள்ளது. இது, சென்ற ஆண்டைவிட 84% அதிகமான முறை தீப்பிடித்துள்ளது. (நேஷனல் இன்ஸ்டிடிட்யூட் ஃபார் ஸ்பேஸ் ரிசர்ச்) இப்படி அதிகமாக காடு அழிவதற்குக் காரணம், அதிபர் Jair Bolsonaro தான் என்று விஞ்ஞானிகளும் இயற்கைப் பாதுகாவலர்களும் கருதுகின்றனர். இவர், தான் பதவியேற்ற பிறகு மரம் வெட்டவும், காடுகளை அழித்துச் சமன் செய்யவும் விவசாயிகளுக்கும் மரம் வெட்டுபவர்களுக்கும் அனுமதி அளித்துள்ளார்...

நீ இன்றி நாங்கள் வாழ முடியாது அமேசான்... `பூமியின் நுரையீரலை'க் காக்க அழைக்கும் பிரபலங்கள்!

இறைவனிடம் வேண்டுவதைவிட, நாம் செய்யவேண்டிய சில காரியங்களாக இவர் கூறுவது...

* அமேசான் காடுகளைப் பாதுகாக்க Frontline Amazon-க்கு உதவி செய்யுங்கள்.

* தனிநபர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் காட்டை மீட்டெடுப்போம் என்று தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும்.

* இதுபற்றிய செய்திகளை செய்தி நிறுவனங்கள் உலக அளவில் பரவச் செய்ய வேண்டும்.

காட்டை அழிவிலிருந்து மீட்க, மாமிச உணவுகளைத் தவிர்த்தோ குறைத்தோ வாழப்பழகுங்கள்" என்று கூறினார்.

பாலிவுட் நடிகையான ஆலியா பட் வெளியிட்டுள்ள ட்விட்டர் அறிக்கையில், "நம் பூமியின் நுரையீரல் எரிந்துகொண்டே இருக்கிறது. 3 மில்லியன் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கும், ஒரு மில்லியன் பூர்வீகக் குடியினருக்கும் வீடாக உள்ளது அமேசான் மழைக்காடுகள் .

நம் பூமியின் கார்பன்-டை-ஆக்சைடு அளவை சரியான அளவில் வைக்க இக்காடுகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. நீ இன்றி நாங்கள் வாழ முடியாது அமேசான்" என்று அவர் கூறுகிறார்.

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ட்விட்டரில் கூறியுள்ளதாவது, "கடந்த இரண்டு வாரங்களாக எரிந்துகொண்டிருக்கும் அமேசான் காடுகளின் படங்களைப் பார்க்கையில், அவை இதயத்தை நொறுக்குவதாகவும் எச்சரிப்பதாகவும் உள்ளன.

இக்காடுகள், 20% ஆக்சிஜன் தேவையைப் பூர்த்திசெய்கின்றன. காடுகளில் தீ பரவுவது, நம் ஒவ்வொருவரையும் பாதிக்கக் கூடியது. இந்தப் பருவநிலை மாற்றத்தை பூமியால் தாங்கமுடியலாம். ஆனால், நாம் தாங்க முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.

நாசா வெளியிட்டுள்ள ட்விட்டர் அறிக்கையில்...

அமேசானின் காட்டுத்தீயால் ஏற்படும் புகை, பிரேசிலில் பல மாநிலங்களுக்குப் பரவியுள்ளது. நாசாவின் விண்வெளி எடுத்த படத்தில் அது பதிவாகியுள்ளது" என்று அவர்கள் கூறியுள்ளார்கள். அப்படத்தை அவர்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்கள்.

பல்கிவரும் ட்விட்டர் எதிர்ப்பால், அமேசானில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ-க்கு தன்னை காரணமாகக் கூறும் அரசு சார்பற்ற இயக்கங்களை கடுமையாகச் சாடியுள்ளார், பிரேசிலின் அதிபர் Jair Bolsonaro.