Published:Updated:

`சொந்த காசைப்போட்டு குளத்தை தூர் வாரிய அரசு ஊழியர்கள்' - கரூர் ஆச்சர்யம்!

துரை.வேம்பையன்
நா.ராஜமுருகன்

ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் 50 பேர், தங்களது சொந்த பணத்தைப் போட்டு, ஒரு குளத்தைத் தூர்வாரி அதிசயிக்க வைத்திருக்கிறார்கள்.

தூர்வாரும் அரசு ஊழியர்கள்
தூர்வாரும் அரசு ஊழியர்கள்

அரசு ஊழியர்கள் என்றாலே, 'அவர்கள் வேலையையே ஒழுங்காகப் பார்க்க மாட்டார்கள். செய்யும் வேலைக்கே கையூட்டு வாங்குவார்கள்' என்பதாக அர்த்தம் கற்பிக்கப்படுகிறது. ஆனால், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் 50 பேர், தங்களது சொந்த பணத்தைப் போட்டு, ஒரு குளத்தைத் தூர் வாரி அதிசயிக்க வைத்திருக்கிறார்கள்.

ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள்
ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் இருக்கிறது சேந்தமங்கலம் (மேல்பாதி) ஊராட்சி. இந்த ஊராட்சியில் இருக்கும் நவமரத்துப்பட்டியில் அமைந்திருக்கிறது காமாட்சி குளம். 5.67 ஏக்கர் பரப்பளவுள்ள இந்தக் குளம்தான், நவமரத்துப்பட்டி மட்டுமன்றி, சுற்றியுள்ள 8 கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி இருக்கிறது. ஆனால், கரூர் மாவட்டத்தில் பல வருடங்களாகக் கடும் வறட்சி நிலவுவதாலும், இந்தக் குளம் சரியாகப் பராமரிக்கப்படாததாலும், கடந்த 10 வருடங்களாகத் தண்ணீரின்றியும் தூர்ந்தும் கிடக்கிறது இந்த காமாட்சி குளம்.

இதனால், நவமரத்துப்பட்டி மக்கள் குடிக்கவும் விவசாயம் செய்யவும் தண்ணீரின்றி அல்லாடி வருகிறார்கள். நிலத்தடி நீர்மட்டமும் இந்தக் கிராமத்தில் 1,300 அடிகளுக்குக் கீழே போக, `தண்ணீர் தண்ணீர்' பட கிராமம்போல கடும் வறட்சியின் பிடியில் நவமரத்துப்பட்டியும் சிக்கத் தொடங்கியது. இந்நிலையில்தான், அரவக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம், கிராம செயலர்கள், அலுவலக உதவியாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் என்று 50 ஊழியர்களை இணைத்து, தங்களுக்குள்ளேயே ரூ.50,000 வரை நிதி திரட்டி, அதைக் கொண்டு காமாட்சி குளத்தை வெற்றிகரமாகத் தூர் வாரி முடித்திருக்கிறார்கள்.

குளத்தை தூர் வாரும் ஊழியர்கள்
குளத்தை தூர் வாரும் ஊழியர்கள்

இந்த முயற்சியை முன்னெடுத்த அரவக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலரான வெங்கடாசலத்திடம் பேசினோம். "அரசு ஊழியர்ன்னாலே, பார்க்க வேண்டிய வேலையை மந்தமாகப் பார்ப்பார்கள் என்ற பிம்பம் இருக்கு. அதை மாற்றி, மக்களுக்கு நாங்கள் சார்ந்த துறை ரீதியான பணிகள் மட்டுமன்றி, பொது விஷயங்களிலும் உதவணும்னு நினைக்கிறவன் நான். ஏற்கெனவே, கரூர் மாவட்டம் அதிகம் வெயில் அடிக்கும் மாவட்டமாக மாறிடுச்சு. 4 சதவிகிதம் மட்டுமே இங்கே காடு உள்ளது. நிலத்தடி மட்டம் அதலபாதாளத்துக்குப் போயிடுச்சு.

 ‘என்னைச் `சோர்' எனக் கூறுவதை நிறுத்துங்கள்’ - கிறிஸ் கெயிலைச் சந்தித்த விஜய் மல்லய்யா!

இதை மாற்ற கரூர் மாவட்டம் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திக்கிட்டு வருது. நீர்நிலைகளைத் தூர்வாருதல், மாவட்டம் முழுவதும் பனைவிதைகளைத் தூவுவது, வீட்டுக்கு இரண்டு நொச்சி மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதுனு பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. எங்களையும், 'ஒவ்வொரு பி.டி.ஓ-வும் நீர்நிலைகளைத் தூர்வார தனிப்பட்ட முறையில் ஆர்வம்காட்டணும்'னு சொன்னாங்க. அதனால்தான், எங்க ஒன்றியத்தில் உள்ள இந்த காமாட்சி குளத்தை, 50 ஊழியர்களும் சொந்த காசைப்போட்டு, இந்தக் குளத்தைத் தூர்வாரினோம். கரைகளைப் பலப்படுத்தியதோடு, அந்தக் குளத்துக்குத் தண்ணீர் வரும் வாரிகளையும் தூர்வாரி இருக்கிறோம். 'மக்களை நோக்கிய பயணம்'ங்கிற பெயர்ல இந்தக் குளத்தைத் தூர் வாரி முடித்துள்ளோம்.

வெங்கடாசலம் (அரவக்குறிச்சி பி.டி.ஓ)
வெங்கடாசலம் (அரவக்குறிச்சி பி.டி.ஓ)

வரும் மழைக்காலத்தில் இந்தக் குளம் முழுமையாக நிரம்பி, 8 கிராமங்களின் நீராதாரத்தை மேம்படுத்தும். ஏற்கெனவே, குளித்தலை பிளாக் பி.டி.ஓ-வாக இருந்தப்போ, இதேபோல் ஊழியர்கள் அனைவரையும் இணைத்துக்கொண்டு, ஐயர்மலை கிரிவல பாதையில் உள்ள மானாவாரி குளத்தைத் தூர்வாரினோம். காமாட்சி குளம் நாங்கள் தூர் வாரும் நான்காவது குளம். ஒவ்வொரு அரசு ஊழியரும் மக்களில் ஒருவர்தானே? அதனால், மக்களுக்கு பயன்தரும் வகையில் இன்னும் பல குளம், ஏரிகளைத் தூர் வார இருக்கிறோம்" என்றார் மகிழ்ச்சியாக!

வாழ்த்துகள்!