Published:Updated:

`இது வெட்கக்கேடான செயல்!’ - கிரேட்டா உருவ பொம்மைக்கு நேர்ந்த செயலால் கொதித்த ரோம் மேயர்

ரோம் நகரில் கிரேட்டா தன்பெர்கின் உருவ பொம்மையை மர்மநபர்கள் தூக்கில் தொங்கவிட்டுச் சென்றுள்ளனர்.

உருவ பொம்மை
உருவ பொம்மை

கிரேட்டா தன்பெர்க், ஸ்வீடனைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமி. காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தனி ஆளாக நின்று குரல் கொடுக்கத் தொடங்கி ஒட்டுமொத்த மக்களின் கவனத்தையும் ஈர்த்தார். இவரது முயற்சியின் காரணமாக காலநிலை மாற்றத்துக்கு எதிராக உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் வீதியில் இறங்கி குரல் கொடுத்தனர். `Friday For Future’ என்ற அமைப்பை ஏற்படுத்தி பல நாடுகளுக்குச் சென்று காலநிலை மாற்றம் குறித்துப் பேசிவருகிறார். ஆரம்பத்தில் கிரேட்டா சிறிய பதாகைகளுடன் தனது போராட்டத்தை முன்னெடுத்தார். இதையடுத்து வெள்ளிக்கிழமைதோறும் பள்ளியைப் புறக்கணித்து ஸ்வீடன் நாடாளுமன்றத்துக்கு வெளியில் போராட்டம் நடத்தி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தார்.

கிரேட்டா தன்பெர்க்
கிரேட்டா தன்பெர்க்

இதன்பலனாக, மக்கள் இவரின் பின்னால் திரண்டனர். கிரேட்டாவின் குரல் உலகம் முழுவதும் ஒலிக்கத் தொடங்கியது. சமீபத்தில் ஐ.நா.வில் பேசிய கிரேட்டா தன்பெர்க், நீங்கள் எங்களை ஏமாற்றி விட்டீர்கள் என உலக தலைவர்களைக் குறிப்பிட்டுப் பேசினார். இவரது பேச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ஸ்வீடன் அரசு இவரது பெயரை நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்தது. இந்நிலையில் இத்தாலியின் ரோம் நகரில் உள்ள பாலம் ஒன்றில் கிரேட்டாவின் உருவ பொம்மையை மர்ம நபர்கள் தூக்கில் தொங்கவிட்டுள்ளனர். அதில், `கிரேட்டா உங்கள் கடவுள்' என ஆங்கிலத்தில் எழுதியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ரோம் நகர மேயர் விர்ஜினியா ரக்கி, தனது ஆதரவை கிரேட்டாவுக்குத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல்

பருவநிலைமாற்றத்தைத் தடுப்பதற்கு கடமைப்பட்டிருப்பதை ஒரு போதும் நிறுத்தமாட்டோம்
விர்ஜினியா ரக்கி

“ கிரேட்டாவின் உருவபொம்மையை தூக்கில் தொங்கவிட்டிருப்பது வெட்கக்கேடான செயல். பருவநிலைமாற்றத்தைத் தடுப்பதற்கு கடமைப்பட்டிருப்பதை ஒரு போதும் நிறுத்தமாட்டோம்”என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.