Published:Updated:

ஆகஸ்ட் அதிசயம்... கோவையில் கொட்டித் தீர்க்கும் மழை!

கோவை மழை நீர்
கோவை மழை நீர்

அணைகள் வேக வேகமாக நிரம்பி வருகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து முடங்கிப் போய் கிடக்கிறது. கடந்த வாரம் வரை, நீர்நிலைகள் மைதானமாக காட்சியளித்த நிலையில், தற்போது சாலைகளே நீர்நிலைகளாக மாறிவிட்டன.

புதன்கிழமை மழை பெய்யத் தொடங்கியபோது, இதுவும் சாதாரண மழைதான் என்று கோவை மக்கள், தங்களது டே பிளானை (Day plan) அமைத்திருப்பார்கள். ஆனால், மழை வேறு பிளானை செயல்படுத்திவிட்டது.

சுண்ணாம்பு கால்வாய்
சுண்ணாம்பு கால்வாய்

புதன்கிழமை தொடங்கிய மழை, வெள்ளிக் கிழமை வரை கொட்டிக்கொண்டிருக்கிறது. வால்பாறை முற்றிலுமே முடங்கிப் போய்விட்டது. பழங்குடி கிராமங்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.

தொடர்மழை காரணமாக, கோவையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செல்வபுரம் டூ பேரூர் சாலை தற்காலிகமாக மூடப்பட்டுவிட்டது.

மழை நீர்
மழை நீர்

தனது வழியெங்கும் நொய்யல் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கிறது. ஒண்டிப்புதூர் அருகே, நொய்யலில் கழிவுநீர் கலந்து நுரைகள் பறந்துகொண்டிருக்கின்றன.

தொடர் மழை... புத்துணர்வு பெறும் கோவை நீர்நிலைகள்!

கடந்த 24 மணி நேரத்தில் கோவையில் அதிகபட்சமாக சின்னக்கல்லாறு 372 மி.மீ, சின்கோனா 315 மி.மீ, சோலையாறு அணை 282 மி.மீ, வால்பாறை தாலுகா 260 மி.மீ, பொள்ளாச்சி160 மி.மீ, கோவை தெற்கு 120 மி.மீ, பீளமேடு 106 மி.மீ மழைப்பொழிவை பெற்றுள்ளன.

கோவை மழை
கோவை மழை

மொத்தமாக கோவை மாவட்டத்தில், 244 செ.மீ பெய்துள்ளதாக பேரிடர் மேலாண்மை தரப்பில் தெரிவித்துள்ளனர். `ஆகஸ்ட் மாதத்தில் (ஆல் டைம் ரெக்கார்டு), கோவைக்கு கிடைத்த சிறந்த மழைப்பொழிவு இதுதான்’ என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

பில்லூர் அணை, தற்போது முழுக் கொள்ளளவை எட்டிவிட்டது. சிறுவாணி அணையின் நீர் மட்டம் 36 அடியைத் தாண்டிவிட்டது. கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் சிறுவாணி அணை நிரம்ப உள்ளது.

சித்திரை சாவடி அணை
சித்திரை சாவடி அணை

சித்திரைசாவடி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக, நொய்யல் ஆற்றில், 4,650 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. பில்லூர் அணையிலிருந்து 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கோவை குற்றாலம், வைதேகி நீர் வீழ்ச்சி, குரங்கு அருவி போன்றவற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால், குற்றாலம் மற்றும் குரங்கு அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை குற்றாலம்
கோவை குற்றாலம்

ஆத்துப்பாலத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள பாலங்கள் தண்ணீரில் தத்தளிக்க, புதிதாகக் கட்டப்பட்டு வரும் உக்கடம் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் பாதிப்படைந்துள்ளன.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், ``கோவையில் மழையால் பெரிய பாதிப்பு இல்லை. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், பவானி மற்றும் நொய்யல் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இடங்களுக்குச் செல்லவும். அவசர உதவிக்கு, 0422 2390261, 2390262, 2390263, 8190000200 (வாட்ஸ் அப்), 7440422422 ஆகிய உதவி எண்களைத் தொடர்புகொள்ளலாம்” என்று கூறியுள்ளது.

மழை செல்ஃபி
மழை செல்ஃபி

கடந்த சில மாதங்களாக தண்ணீருக்காக தவித்துக் கொண்டிருந்தனர். தண்ணீர் வந்துவிட்டது. அதை எப்படி சேமிக்கப் போகிறோம்?

அடுத்த கட்டுரைக்கு