Published:Updated:

எங்கு பார்த்தாலும் கழிவுகள்... சாட்டை எடுத்த நீதிபதிகள்..! - கனவு பூமியாக மாறுமா கொடைக்கானல்?

Kodaikanal Hills
Kodaikanal Hills

இயற்கை எழில் கொஞ்சும் இதன் அழகைக் காண உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். ஆனால், சுற்றுலாப் பயணிகளை வைத்து வருமானம் பார்க்கும் இடமாக மட்டுமே வியாபாரிகள் பார்க்கிறார்கள்.

மலைகளின் இளவரசி கொடைக்கானல். மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் அற்புதமான பகுதி. இங்கு 39 நீர்வழித் தடங்கள் இருக்கின்றன. அரியவகை தாவரங்கள், பறவைகள் உள்ளன. உலகில் காணக்கிடைக்காத ஏழு வகை தாவரங்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் இயற்கை அழகும் சூழலும் தமிழகத்தில் எங்கும் இல்லை. அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரியைத் தாண்டியதில்லை. ஊட்டியில்கூட 30 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகியிருக்கிறது. இயற்கை அன்னை தவழும் மலைப்பகுதி என்பதால்தான் சுற்றுலாப் பயணிகளின் கனவு பூமியாக இருக்கிறது.

Kodaikanal
Kodaikanal

இயற்கை எழில் கொஞ்சும் இதன் அழகைக் காண உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். ஆனால், சுற்றுலாப் பயணிகளை வைத்து வருமானம் பார்க்கும் இடமாக மட்டுமே வியாபாரிகள் பார்க்கிறார்கள்.

இதன் விளைவு, விதிமீறிய கட்டடங்கள், கண்ட இடங்களில் கொட்டப்படும் கழிவுகள், நட்சத்திர ஏரியில் கலக்கும் விடுதிகளின் கழிவுநீர் எனப் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இப்போது உலகின் உன்னதம், இயற்கையின் அருட்கொடை கொடைக்கானல் என்றால் சிரிக்கிறார்கள் வெளிநாட்டினர்.

சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களுக்கு இணையாக இங்கு குப்பைகள் கொட்டப்படுகின்றன. அழகு கொஞ்சும் பாம்பார் நீர்வீழ்ச்சியில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மிதக்கின்றன. வனங்களுக்குள் எங்கு சென்றாலும் உடைந்துபோன மதுபாட்டில்கள் கிடக்கின்றன.

Waste
Waste

கொடைக்கானல் சூழலையே நாசப்படுத்திய பாதரச ஆலை மூடப்பட்டுவிட்டது. ஆனால், அதன் கழிவுகள் இன்னும் ஆலை வளாகத்திலேயே புதைக்கப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் இந்தக் கழிவுகள் கரைந்து நீரில் கலக்கின்றன. இதனால் நீர்நிலைகளில் உள்ள மீன்களுக்கும் ஆபத்து. அதை உண்ணும் மனிதர்களுக்கும் ஆபத்து ஏற்படுகின்றன என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.

ஆண்டுக்கு 6 லட்சம் வாகனங்கள் இந்த நகருக்கு வந்து செல்கின்றன. இத்தனை சிறிய நகரில் இந்த வாகனங்கள் வெளியிடும் புகை, சூழலைப் பெருமளவில் மாசுபடுத்துகிறது. இயற்கையின் தாய்மடி, ஆரோக்கியமான சூழல், சுத்தமான மூலிகைக் காற்று என இருந்த கொடைக்கானலை இப்போது நினைத்துகூடப் பார்க்க முடியாது. இங்குள்ள சீதோஷ்ண நிலை மட்டும் மாறினால் போதும். இதுவும் வழக்கமான இந்திய நகரங்களில் ஒன்றாகிவிடும்.

இந்நிலையில் விதிகளை மீறிய கட்டடங்களுக்குச் சீல் வைக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியது. அதன் பிறகு 2,000-த்துக்கும் அதிகமான கட்டடங்களுக்குச் சீல் வைத்தார்கள். கொடைக்கானல் ஹோட்டல் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள் சங்கச் செயலர் அப்துல்கனி ராஜா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், கொடைக்கானல் நகராட்சியில் புதிய மாஸ்டர் பிளான் அமல்படுத்தப்படும் வரை விதிமீறிய கட்டடங்களுக்குச் சீல் வைப்பது, இடிப்பது போன்ற நடவடிக்கைகளுக்குத் தடைவிதிக்க வேண்டும்’’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

Waste
Waste

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்திருக்கிறது. ``2009-ம் ஆண்டு பாதரச ஆலை காரணமாகச் சுற்றுச்சூழல் மாசடைந்தது. இதனால் அந்த ஆலை மூடப்பட்டது. கொடைக்கானல் பகுதியில் விதிகளை மீறிய கட்டங்களை அனுமதிக்க முடியாது. இதுதொடர்பாக 2004-ம் ஆண்டு உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. தற்போது கொடைக்கானல் நகராட்சி புதிய மாஸ்டர் பிளானை அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. அது அரசின் இணையத்தளத்தில் மார்ச் மாதம் வெளியிடப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்த நீதிபதிகள், கொடைக்கானலின் இயற்கை வளத்தைப் பாதுகாக்க, இனி ஹோட்டல் கழிவுகளைக் கொடைக்கானலுக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும்.

இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் 6 மாதத்துக்கு ஒருமுறை ஆய்வு செய்து, உயர் நீதிமன்ற பதிவாளரிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையை அரசின் இணையதளத்திலும் வெளியிட வேண்டும். அதுதொடர்பாகப் பொதுமக்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் உரிமை வழங்கப்படுகிறது. சீஸன் நேரங்களில் அதிக வாகன போக்குவரத்து காரணமாகக் காற்று மாசு ஏற்படுவதால், தேவைப்படும் பட்சத்தில் வாகனங்களை மலை அடிவாரத்திலேயே நிறுத்திவிட்டு, சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் சூரியசக்தி மூலம் இயங்கும் வாகனங்கள், மின்னணு பொது போக்குவரத்து வாகனங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என அரசுக்கும் ஆணை பிறப்பித்தனர்.

Collector Vijaya Lakshmi
Collector Vijaya Lakshmi

இந்த உத்தரவு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், இதைப் பயன்படுத்தி அதிகாரிகள் மேலும் அதிகளவில் சம்பாதிப்பார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

நீதிமன்ற உத்தரவு தொடர்பாக, திண்டுக்கல் ஆட்சியர் விஜயலட்சுமி, கொடைக்கானலில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கிறார். இனிமேலாவது, விடுதிகளின் கழிவுகளை ஏரியிலும் சுற்றுப்புறத்திலும் கொட்டாமல் கொடைக்கானலுக்கு வெளியே கொட்டினால் ஓரளவுக்கு மீண்டும் தூய்மையான நகரமாக மாறும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அடுத்த கட்டுரைக்கு