Published:Updated:

தேசியப் பறவையான மயில் விவசாயிகளின் எதிரியானது எப்படி?

சங்க காலத்திலிருந்து புள்ளோப்புதல் என்ற பறவைகளை விரட்டும் முறையைப் பின்பற்றி வருகின்றோம். அதாவது, பறவைகளை விளைநிலங்களிலிருந்து விரட்டிவிடுதல்.

பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் இல்லத்தில் மயில்களுக்கு உணவளிக்கும் காணொளி சமீபத்தில் வைரலானது. அதன்மூலம், தேசியப் பறவையின் மீதும் நாட்டின் இயற்கைச் சூழல் மீதும் அவருக்கு இருக்கும் காதலை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தினார். ஆனால், அவருக்கு இருக்கின்ற காதலும் மயில்களுக்கு உணவளிக்கும் அக்கறையும் அவருடைய அரசுக்கு இல்லாமல் போனதுதான் மக்களை வருந்தச் செய்வதாகப் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இந்திய நிலப்பரப்பில் லட்சக்கணக்கான மயில்கள் வாழ்கின்றன. கோவா, தெலங்கானா, தமிழகம் என்று மத்திய மற்றும் தென்னிந்தியப் பகுதிகளில் மயில்களுடைய எண்ணிக்கை அதிகரித்ததால், விவசாயிகள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். அதைக் கட்டுக்குள் கொண்டுவர இதுவரை அரசு உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ``மயில்களைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் நடவடிக்கைகளை எடுக்கின்ற அரசாங்கம், அதனால் விவசாய நிலங்களில் ஏற்படுகின்ற சேதங்களைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தது?" என்ற கேள்வியை விவசாயிகள் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பேரிழப்புகளைச் சரிக்கட்ட, பயிர்களைப் பாதுகாக்க, பல பகுதிகளில் தேசியப் பறவைக்கு விஷம் வைக்கப்படுவதும் நடைபெறுகிறது.

ஆண் மயில்
ஆண் மயில்
Pixabay

இந்தப் பிரச்னையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, கோவாவில் 2016-ம் ஆண்டு, விவசாயத்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் தவாத்கர், மயில்களை விவசாய நிலங்களை அழிக்கக்கூடிய ஆபத்தான உயிரினமாக அறிவித்து, அதன் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முயற்சி எடுக்க வேண்டுமென்று அறிவித்திருந்தார்.

தெலங்கானாவிலும் இதே நிலைதான். அங்கு விளைவனவற்றில் 15 முதல் 30 சதவிகிதம் வரையிலான பயிர்களை மயில்கள் அழித்துவிடுவதாக அம்மாநில விவசாயத்துறையின் பதிவுகள் கூறுகின்றன.

கடந்த 20 வருடங்களில்தான் இந்தப் பிரச்னை பெரிதாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு முன்பெல்லாம், விவசாயிகளுக்கும் மயில்களுக்கும் இடையில் இவ்வளவு பெரிய பகை இருந்தது கிடையாது. அதற்குக் காரணம், அப்போது நிலவிய இயற்கைச் சூழல் சமநிலை. அது, அவற்றுக்கும் சரி, நமக்கும் சரி சமமான பயன்களை வழங்கிக்கொண்டிருந்தது. அதற்கான சிறந்த உதாரணம்தான் இட்டேரி.

20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, கிராமப் புறங்களில், விவசாய நிலங்களில் கம்பி வேலிகளுக்கு வேலை இருக்கவில்லை. இட்டேரி என்றழைக்கப்படுகிற தாவர வேலிகளே அமைக்கப்பட்டிருந்தன. இதுவோர் உயிர்ச்சூழல் நிறைந்த சிறிய வாழ்விடமாக அந்நாள்களில் கருதப்பட்டன. முள் செடிகள், வேம்பு, கடம்பு, புரசை என்று பல்வேறு மரவகைகளும் ஆடாதொடை, ஆவாரம், பிரண்டை போன்ற செடி, கொடி வகைகளும் பல்வேறு வகையான புல் வகைகளும் இட்டேரி வேலியை நிறைத்திருக்கும். இவை பல்லிகள், பூச்சிகள், பறவைகள், சிறு சிறு பாம்பு வகைகள் என்று பல உயிரினங்களின் வாழ்விடமாகத் திகழ்ந்தன.

பாம்புராணி என்றழைக்கப்படும் அரணை
பாம்புராணி என்றழைக்கப்படும் அரணை
Pixabay

கறையான் புற்று, பெருச்சாளிகளுடைய வங்குகள், பாம்புகள், பாம்புராணி என்றழைக்கப்படுகின்ற அரணை, ஓணான், சின்னஞ்சிறு குருவி வகைகள் என்று பல்வேறு வகையான உயிரினங்களை அதில் பார்க்க முடியும். விவசாய நிலத்தின் ஈரப்பதம் அந்த இட்டேரிகள் அமைக்கப்பட்டிருக்கும் மண்ணிலும் இருக்கும். நிலத்தின் ஈரப்பதமும் இயல் வேலி கொடுக்கின்ற நிழலும் பல்வகைப் பூச்சியினங்களுக்கும் அடைக்கலம் கொடுத்தன. இந்த உயிரினங்களுக்கு வாழ்விடம் நல்கிய அந்த இயல் வேலியைச் சுற்றி, இவற்றை உணவாகக் கொள்கின்ற பாம்பு, பருந்து வகைகள், எறும்புத் தின்னி போன்றவையும் உலவிக்கொண்டிருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த உயிர்வேலிக்கும் மயில்கள் மற்றும் விவசாயத்துக்கும் இருந்த தொடர்பு இன்றியமையாதது. இன்று இட்டேரிகள் இல்லாமல் போனதும் அவற்றில் வாழ்ந்துகொண்டிருந்த உடும்பு, கீரி போன்ற வேட்டையாடிகள் இல்லாமல் போனதும் எப்படி மயில் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாக அமைந்தது என்பது குறித்துத் தெரிந்துகொள்ள திருப்பூரைச் சேர்ந்த இயற்கை ஆர்வலரும் காட்டுயிர் ஒளிப்படக் கலைஞருமான நல்லசிவனைத் தொடர்புகொண்டு பேசினோம். அப்போது அவர், ``உயிர்வேலிகள் அற்றுப்போனதால் அதை வாழ்விடமாகக் கொண்டு வாழ்ந்து, மயில்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் கீரி, உடும்பு, காட்டுப்பூனை மற்றும் வங்கு நரி போன்ற உயிரினங்கள் அற்றுப்போனது முக்கியக் காரணிகள் ஆகும்.

நகர்ப்புறங்களையொட்டிய வேளாண்காடுகளில் உயிர்வேலிகள் அற்றுப்போனதால் பறவைகளுக்கும் பாலூட்டிகளுக்குமான இயற்கை சமன்பாடு வெகுவாக சீர்குலைந்து காணப்படுகிறது.

மயில்களுக்குரிய வேட்டையாடிகளான உடும்பு, கீரி, காட்டுப்பூனை போன்றவை ஆண்மையைப் பெருக்கும் என்ற தவறான வழிகாட்டுதலால் நாட்டு மருந்துக்காக அழிக்கப்பட்டுவிட்டன.
க.வி.நல்லசிவன், இயற்கை ஆர்வலர்

நரிகளும் சில கிராமங்களில் விழா எடுக்கும்போது சாமிக்குப் படைக்க நரி வேட்டை என்ற பெயரில் காடுகாடாகத் தேடி நரிகளைப் பிடித்துச் சென்று கொன்றுவிடுகிறார்கள். தளிர்களையும் தாணியங்களையும் முக்கிய உணவாகக் கொண்ட மயில்கள் விவசாய நிலங்களில் விதைப்புச் செய்யப்படும் விதைகளைக் கிளறிச் சாப்பிடுகின்றன.

மிளகாய், தக்காளி போன்றவற்றைத் தளிராக இருக்கும்போதே கொத்தித் தின்கின்றன. மக்காச்சோளம், சோளம் போன்றவற்றை கதிர் பிடித்தவுடன் பிஞ்சாக உள்ளதை விரும்பிச் சாப்பிடுகின்றன. இதனால் பெருமளவு விவசாயம் ஆரம்ப நிலையிலேயே மயில்களால் அழிக்கப்படுகின்றன.

உயிர்வேலிகள் இருந்தபோது அதில் கிடைத்த இயற்கையான விதைகள் மற்றும் பழங்களை உண்பதோடு நில்லாமல் சிறுசிறு பூச்சிகள் மற்றும் சிறுபாம்புகள், பல்லிகள் போன்றவற்றையும் உணவாகத் தேடித் தின்றன. தற்போது கம்பி வேலியினால் உயிர்வேலிகள் அற்றுப்போய் மயில்களைக் கட்டுப்படுத்தும் வேட்டையாடிகளை நாம் இழந்ததால் மயில்கள் பெருகிவிட்டன.

மேலும் மயில்கள் ஒவ்வொரு முறையும் குறைந்தது 10 முட்டைகள் வரை இட்டு அடைகாத்து குஞ்சு பொரிக்கின்றன.

விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிரக்கும் மயில்கள்
விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிரக்கும் மயில்கள்

இதனால் அதிக இனப்பெருக்கத்தின் காரணமாகத் தற்போது சாலைகளைக் கடக்கும்போதும் விபத்துக்குள்ளாகின்றன. மயில்-மனித மோதல் இயல்பாக நடக்கிறது" என்று கூறினார்.

மயில்கள் நம் தேசியப் பறவை மட்டுமல்ல. அவை ஓர் உயிர்ச்சூழலின் அங்கமாகச் செயல்பட்டன. இப்போது அந்த உயிர்ச்சூழலில் வாழ்ந்த இதர உயிரினங்களுடைய இருப்பு குறைவது, அவற்றை மக்கள் மத்தியில் வில்லனைப் போல, விவசாயத்தின் எதிரியைப் போன்ற சித்திரிப்புக்கு ஆளாக்கிவிட்டது. இந்த நிலையை நம்மால் நிச்சயம் சரிசெய்ய முடியும் என்கின்றார், பறவை ஆராய்ச்சியாளர் ப.ஜெகநாதன்.

அவரிடம் பேசியபோது, ``மயில்களால் தொந்தரவு ஏற்படும் பகுதிகளில் மயில்களின் கணக்கெடுப்பு நடத்துவதும், அந்தப் பகுதிகளிலேயே எந்தெந்த இடத்தில் எத்தனை, அந்த இடங்களிலுள்ள பயிர்களின் விவரங்கள் குறித்த விவரங்களை சேகரித்தல் அவசியம். இதனால், எந்த இடத்தில், எவ்வளவு சேதம் ஏற்படுகிறது என்பதை சரியான அளவில் துல்லியமாக மதிப்பிட முடியும். எந்த வகையான பயிர்களை, எந்த நிலையில் (விதைகளையா, நாற்றையா), அவை, எங்ஙனம் சேதப்படுத்துகின்றன என்பதை அறிய வேண்டும். இந்த ஆராய்ச்சியின் மூலம் பிரச்னையின் தீவிரம் எங்கு அதிகமாக இருக்கிறது என்பதை அறிந்து, அதைச் சமாளிக்க வேண்டிய நடவடிக்கைகளையும் எடுக்க முடியும். இப்பகுதிகளில் மயில்களின் இரைகொல்லி உயிரினங்களின் எண்ணிக்கையையும் பரவலையும் கணக்கிடும் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதும் அவசியம்.

மயில்
மயில்
Pixabay

விளைநிலங்களுக்கு ஆண்டு முழுவதும் மயில்கள் சேதத்தை ஏற்படுத்துவதில்லை. அவை அதிகம் சேதம் விளைவிக்கும் காலம் (நாற்று நடும் காலத்திலா, விதை விதைத்த உடனேயா அல்லது அறுவடை சமயத்திலா) எப்போது என்பதைத் தெரிந்து அந்த வேளையில் பாதுகாப்பை, அவற்றை விரட்டும் முயற்சிகளை அதிகப்படுத்த வேண்டும். சங்க காலத்திலிருந்து புள்ளோப்புதல் என்ற பறவைகளை விரட்டும் முறையைப் பின்பற்றி வருகின்றோம். அதாவது, பறவைகளை விளைநிலங்களிலிருந்து விரட்டிவிடுதல். இவற்றோடு, மயில்களால் ஏற்படும் பயிர்ச் சேதங்களுக்கு காப்பீடு வழங்குவது விவசாயிகளுடைய பாதிப்புகளைச் சரிக்கட்ட உதவும்" என்று கூறினார்.

மயில்களும் மக்களும் இயைந்து வாழ்ந்துகொண்டிருந்த ஓர் உயிர்ச்சூழல், இன்று இல்லாமல் போனதால்தான் இந்தப் பிரச்னை என்று முழு முற்றாக ஆய்வாளர்கள் சொல்லவில்லை. ஆனால், அதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. அந்த உயிர்ச்சூழலைக் கிராமப்புறங்களில் மீட்டெடுப்பது, சில நன்மைகளைப் பயக்கும் என்று கூறப்படுகிறது. அதேநேரம், பறவையியலாளர் ப.ஜெகநாதன் குறிப்பிடுவது போல், நடைமுறைச் சாத்தியமான சில வழிமுறைகளையும் நாம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அரசாங்கமும் பயிர்களுக்கு மயில் மூலம் ஏற்படுகின்ற சேதங்களுக்குக் காப்பீடு வழங்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு