Published:Updated:

`நீங்க கடைசியா பாம்பை எப்போ பார்த்தீங்க?'

நாகம் ( Pixabay )

உலகிலேயே, பாம்பு கடித்து அதிகமான மரணங்கள் நிகழ்வது இந்தியாவில்தான். ஆனால், அவற்றை அடித்துக் கொல்வதுதான் பாம்பு கடி மரணங்களைக் குறைக்க நம்மிடமுள்ள ஒரே தீர்வா?

`நீங்க கடைசியா பாம்பை எப்போ பார்த்தீங்க?'

உலகிலேயே, பாம்பு கடித்து அதிகமான மரணங்கள் நிகழ்வது இந்தியாவில்தான். ஆனால், அவற்றை அடித்துக் கொல்வதுதான் பாம்பு கடி மரணங்களைக் குறைக்க நம்மிடமுள்ள ஒரே தீர்வா?

Published:Updated:
நாகம் ( Pixabay )

மனம், மீண்டும் மீண்டும் சாலையில் நசுங்கிக்கிடந்த சாரைப் பாம்பின் பக்கமே சென்றுகொண்டிருந்தது. பாம்புகள் சாலை விபத்தில் அடிபடுவது மிகவும் கொடுமை. நீளமான மெல்லிய உடலோடு அவை தரையில் ஊர்ந்து செல்லும்போது, ஏதேனும் வாகனம் அதன்மீது ஏறினால், வாகனம் ஏறிய பகுதி அப்படியே நசுங்கித் தரையோடு ஒட்டிக்கொள்ளும்.

அடிபட்டு நசுங்கிய பாம்பு, அந்த இடத்தைவிட்டு நகரமுடியாமல் இருக்க, அடுத்தடுத்து வரும் வாகன ஓட்டிகள், கொஞ்சம்கூட கீழே கவனிக்காமல் தொடர்ந்து அந்த உடலை நசுக்கிக் கொண்டேயிருக்க, கொஞ்சம் கொஞ்சமாக அந்தச் சிறிய உடலைவிட்டு உயிர் பிரியும்.

பச்சைப் பாம்பு/ Green Vine Snake
பச்சைப் பாம்பு/ Green Vine Snake
Subagunam Kannan

சென்னை, ஐஐடி வளாகத்திற்குப் பின்புறமிருந்த சாலையில் அடிபட்டு இறந்துகிடந்த சாரைப் பாம்பு கண்ணில் பட்டபோது, அந்த வலியை அதுவும் கொஞ்சம் உணர்ந்திருக்கும் என்பது உரைத்தது. அந்த உணர்வு இதயத்தைக் கனக்கவைத்தது.

பாம்புகளைக் கண்டாலே எதிரியைப் போல் உணரும் மனிதர்களுக்கு, அதன் மரண வலியைப் பற்றிய கவலை இருப்பதில்லை. மனிதர்களில் அதிகப் பேரின் விருப்பமிகு உயிரினங்களின் பட்டியலில் பாம்புகள் இருப்பதில்லை. அவை சூழலுக்குச் செய்கின்ற சேவைகளும் பெரும்பான்மை மக்களால் அங்கீகரிக்கப்படுவதில்லை. மாறாக, கண்ணில் பட்டால் மரண தண்டனையை மட்டுமே பெறுகின்றன. அந்த நிலை சமீபகாலமாகச் சில காட்டுயிர் ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகளின் முயற்சிகளால் மாறிக்கொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாம்புகள் குறித்து பலருக்கும் பல்வேறு விதமான உணர்வுகள் உண்டு. அவற்றைக் கண்டாலே அருவருப்படையும் மக்கள் இன்னமும் இருக்கிறார்கள். சிலருக்கோ, பாம்பைப் பார்த்தவுடன் அச்சம் மேலோங்கும். பிறகு, பார்ப்பதெல்லாம் பாம்பாகத் தோன்றும். இன்னும் பலர், அதை ஓர் எதிரியாகவே நினைத்து, பார்த்தவுடன் அடித்துக் கொன்றே தீரவேண்டுமென்று துடியாய்த் துடிப்பர். ஒரு சிலரே பாம்புகளை ஓர் உயிராக மதித்து அவற்றுக்குரிய வாழ்விடத்தைப் பாதுகாக்க முனைகின்றனர்.

இந்தப் பூமியில், பாம்பு என்ற ஓர் உயிரினம் ஒரு காரணத்தோடுதான் இருக்கிறது. நம்மைப் பயமுறுத்துவதோ காயப்படுத்துவதோ, நிச்சயமாக அந்தக் காரணங்களில் ஒன்றில்லை என்பதை உறுதியாக நம்பலாம்.

இவ்வளவு தூரம் பாம்புகள்மீது வெறுப்புணர்வும் அச்ச உணர்வும் ஏற்படக் காரணம், அவற்றால் ஏற்படுகின்ற ஆபத்துகள்தான். உலக அளவில் பாம்பு கடியால் ஆண்டுக்கு 1,00,000 பேர் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்தியாவில் பாம்பு கடிக்கு ஆளாகக்கூடிய மக்களின் மொத்த எண்ணிக்கை மட்டும் 81,000. அதில், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 11,000. உலகிலேயே அதிகமான பாம்பு கடி மரணங்கள் நிகழ்வது இந்தியாவில்தான். மரணம் குறித்து மனித இனம் கொண்டுள்ள அச்சம், அது ஏற்படுத்துகின்ற இழப்புகளே, அதைப் பார்த்தவுடன் நம்மை தற்காத்துக்கொள்ள அவற்றைக் கொல்ல முற்படுகிறோம்.

ஆனால், அவற்றை அடித்துக் கொல்வதுதான் பாம்பு கடி மரணங்களைக் குறைக்க நம்மிடமுள்ள ஒரே தீர்வா? இப்பூவுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்குமே வாழ உரிமையுண்டு. அவை, இந்தப் புவிக்குச் செய்யவேண்டிய சேவைகளைத் தொடர்ந்து செய்துகொண்டேயிருக்கின்றன. அவைகுறித்த புரிதலை நாம் வளர்த்துக்கொள்வதே அத்தகைய மரணங்களைத் தவிர்க்கும்.

இந்திய மலைப்பாம்பு/ Indian Rock Python
இந்திய மலைப்பாம்பு/ Indian Rock Python
Subagunam Kannan

ஆகவே, பாம்புகள் குறித்த புரிதல் சமுதாயத்தில் ஏற்பட வேண்டியது அவசியம். இதை ஒருவித தற்காப்பு யுக்தி என்றுகூட சொல்லலாம். ஆபத்து வருகிறதென்றால், அந்த ஆபத்து எங்கிருந்து வருகிறதோ அதைப் பற்றி புரிந்துகொள்ள வேண்டும்.

பாம்புகள் மனிதர்களைக் காயப்படுத்தவே, நஞ்சு நிறைந்த பற்களால் கடித்துக்கொல்லவே வருகின்றன என்ற மனநிலை பலரிடமும் உண்டு. இதில், சினிமாக்களுக்குப் பெரும் பங்குண்டு. பழிவாங்கும், பால் குடிக்கும் என்று அவைகுறித்த பல மூடநம்பிக்கைகள் மக்கள் மத்தியில் ஆழமாகப் பதியவைக்கின்றன. பாம்பு என்றாலே ஒருவித அச்ச உணர்வும் அருவருப்புமே ஏற்படும் அளவுக்கு மக்களை சினிமாக்கள் ஆளாக்கி வைத்துள்ளன. அந்த உணர்வுகளிலிருந்து வெளியேறும்போதுதான், அவை குறித்துத் தெரிந்துகொள்ள முடியும்; ஆரோக்கியமான பாதுகாப்பு முறையையும் மேற்கொள்வோம்.

இந்தப் பூமியில், பாம்பு என்ற ஓர் உயிரினம் ஒரு காரணத்தோடுதான் இருக்கிறது. நம்மைப் பயமுறுத்துவதோ, காயப்படுத்துவதோ இல்லை. உணவுச் சங்கிலி குறித்து அனைவருக்குமே தெரியும். அந்த உணவுச் சங்கிலியில் இரையாகவும் வேட்டையாடியாகவும் செயல்பட்டு, அதைச் சமநிலையிலேயே வைத்திருப்பதில் பாம்புகளின் பங்கு மிக முக்கியமானது. ஆகவே, ஆரோக்கியமான சூழலியல் அமைப்பு நிலவ வேண்டுமென்றால், அதற்கு பாம்புகளின் இருப்பும் அவசியம்.

பூச்சிகள், தவளை போன்றவற்றின் எண்ணிக்கையைப் பாம்புகள் கட்டுக்குள் வைக்கின்றன. சரி, ஒருவேளை பாம்புகளின் எண்ணிக்கை பெருகிவிட்டால் என்ன செய்வது. அதுவும் ஆபத்துதானே!

எலிகள், தவளைகள், பல்லிகள் என்று வேகமாக இனப்பெருக்கம் செய்யக்கூடிய உயிரினங்களின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் பாம்புகளுக்குப் பெரும் பங்குண்டு. சுற்றுச்சூழலில் அவை வேட்டையாடிகளாகவும் சில சூழல்களில் இரைகளாகவும் இருக்கின்றன.

ஒரு ஜோடி எலி, ஆண்டுக்கு சுமார் 800 குட்டிகளை ஈனுகின்றனவாம். அங்கு மரணித்துக் கிடந்த சாரை மட்டும் உயிரோடிருந்திருந்தால், அதன் வாழ்நாளில் குறைந்தபட்சம் 1000 எலிகளைச் சாப்பிட்டு தீர்த்திருக்கும். ஐஐடி வளாகத்திற்குப் பின்புறமுள்ள குடியிருப்புகளில் வாழும் மக்களும் எலித் தொல்லையிலிருந்து கொஞ்சம் விடுபட்டிருப்பார்கள்.

எலிகளின் எண்ணிக்கைப் பெருக்கம், மனிதக் குடியிருப்புகளில் பெரும் சிக்கலாக உள்ளது. கிராமப்புறங்களில், விவசாய நிலங்களில் அவை ஏற்படுத்தும் சேதங்கள் அதிகம். நகர்ப்புறங்களில் அதிகமாகச் சேரும் கழிவுகளால் எலிகளுக்கு உரிய வாழ்விடங்கள் கிடைத்து அவை பெருகுகின்றன. அதனால், நகர்ப்புற குடியிருப்புகளில் வாழும் மக்களும் அவதிக்கு ஆளாகிறார்கள். இதற்குக் காரணம், பாம்புகளின் எண்ணிக்கை குறைந்துவருவதுதான்.

பச்சைப் பாம்பு
பச்சைப் பாம்பு
Subagunam Kannan

15 ஆண்டுகளுக்கு முன்பு வரை, எங்கள் தெருக்களில் பாம்புகளை அடிக்கடி பார்ப்போம். வீடுகளைச் சுற்றியிருக்கும் புதர்க்காடுகளில், மரங்களில்... சாரைப் பாம்பு, ஓலைப் பாம்பு, பச்சைப் பாம்பு என்று பலவற்றைப் பார்ப்போம். குளக்கரைகளுக்குச் சென்றால், அங்கு நீர்க்கோலி என்ற தண்ணீர்ப் பாம்பு வகையை அதிகமாகப் பார்க்க முடியும். இப்போதெல்லாம், அப்படி காண முடிவதில்லை. காரணம், கடந்த சில பத்து ஆண்டுகளாகக் கண்ணில் படும் பாம்புகளை அடித்துக் கொன்றதுதான்.

அதன் விளைவாக... பயிர்களைச் சூரையாடும், வீடுகளை கலைத்துப்போடும் எலிக் கூட்டங்களை, பூச்சிக்கொல்லிகளோடு எதிர்கொள்கிறோம். கூடவே, அவை கொண்டுவரும் உடல்நலக் கோளாறுகளையும் சுமந்து நிற்கிறோம்.

பூச்சி, எலி, தவளைகளின் எண்ணிக்கையில் அதிகமாகி, சேதம் ஏற்படுத்தக்கூடிய உயிரினங்களை ஒரு கட்டுக்குள்ளேயே வைத்திருக்க இயற்கை அறிமுகப்படுத்தியவைதான் பாம்புகள். இதில் நஞ்சுள்ளது, நஞ்சற்றது எதுவாக இருப்பினும், நாம் அவற்றுக்குத் தீங்கு விளைவிக்காதவரை அல்லது அவற்றை ஆபத்தாக உணரும் வரை நமக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது.

பூச்சிகளை, கொசுக்களை, அவற்றின் முட்டைகளைத் தவளைகள் சாப்பிடுகின்றன. தவளைகளைப் பாம்புகள் சாப்பிடுகின்றன. அதன்மூலம் பூச்சிகள், தவளை போன்றவற்றின் எண்ணிக்கை கட்டுக்குள் இருக்கிறது. சரி, ஒருவேளை பாம்புகளின் எண்ணிக்கை பெருகிவிட்டால் என்ன செய்வது. அதுவும் ஆபத்துதானே!

கொம்பேறி மூக்கன்
கொம்பேறி மூக்கன்
Subagunam Kannan

மேலே குறிப்பிட்டதுபோல், வேட்டையாடிகளாக மட்டுமின்றி சில உயிரினங்களுக்கு இரையாகவும் பாம்புகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, மயில், பருந்து, கழுகு, வல்லூறு, வெள்ளைக்கண் வைரி போன்ற பல பறவைகள் பாம்புகளை வேட்டையாடுகின்றன. ஒருமுறை, திருக்கழுக்குன்றத்தில் ஒரு புதர்க்காட்டில் பறவை நோக்குதலில் ஈடுபட்டிருந்தபோது, சாரைப் பாம்பைப் பார்த்தேன். ஐந்து அடிக்குக் குறையாத நீளம். இருப்பினும், அங்கு உலவிக்கொண்டிருந்த வெள்ளைக்கண் வைரி என்ற வேட்டையாடிப் பறவையைப் பார்த்ததும் அதற்கு ஏற்பட்ட அச்சம், அங்கிருந்து மறைவான இடத்திற்குச் சென்றுவிட அது காட்டிய வேகம் என்று அனைத்துமே வெள்ளைக்கண் வைரியின் வேட்டையாடித் தன்மையைக் காட்டின.

`வல்லவனுக்கு வல்லவன் வரத்தானே செய்வான்' என்று ஒரு பழமொழி உண்டு. அதை இயற்கையின் உணவுச் சங்கிலியோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியும். இங்கு ஒவ்வோர் உயிரினத்திற்குமே அதற்குச் சமமான வல்லமையுள்ள உயிரினம் இருக்கவே செய்கிறது. அதுதான் இயற்கைச் சமநிலையையும் பராமரித்துக் கொண்டிருக்கிறது. இனி, எங்காவது பாம்புகளைப் பார்த்தால், அதை அதன் போக்கில் போகவிடுங்கள். ஒருவேளை உங்கள் வீட்டிற்குள் வந்தால், உங்கள் ஊரிலுள்ள பாம்புகள் மீட்பரை அழைத்து, அதை உயிரோடு மீட்டுக் கொண்டுபோகச் சொல்லுங்கள்.

Snake bites
Snake bites
Pixabay

பாம்புகளை வேட்டையாடும் மற்ற பறவைகள் மற்றும் விலங்குகளைவிட, ஆபத்தான வேட்டையாடி இப்போது பெருகிவிட்டது. அது வேறெதுவுமில்லை, மனித இனம்தான்.

`கடைசியாக நீங்கள் பாம்பை எப்போது, எங்கே பார்த்தீர்கள்? அப்போது என்ன செய்தீர்கள்?' என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

இந்த நிலை மாற வேண்டுமெனில், அவற்றை வெறுத்து ஒதுக்குவதைத் தவிர்த்து, அவை குறித்த புரிதலைப் பெற முயல வேண்டும். அவை குறித்துத் தெரிந்துகொள்ளத் தொடங்குங்கள். வெறுத்த நீங்களே பாம்புகளைப் பாதுகாக்கும் ஆர்வலராகக்கூட மாறிவிடுவீர்கள். ஆம், அவை அவ்வளவு அழகான உயிரினம்.