Published:Updated:

`புகைபிடிப்பவர்களே ப்ளீஸ் இதைச் செய்யாதீர்கள்..!' - உலகை அதிரவைக்கும் புகைப்படம்

மனிதனால் மற்ற உயிரினங்கள் சிக்கலைச் சந்திப்பது இன்று, நேற்று கதை இல்லை...!

குட்டிக்கு சிகரெட்டை ஊட்டும் தாய்
குட்டிக்கு சிகரெட்டை ஊட்டும் தாய் ( Karen Mason )

பல நேரங்களில் நாம் அலட்சியமாகச் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் எந்த அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது நமக்குப் புரிவதில்லை. பிளாஸ்டிக் பயன்பாடு தொடங்கி இதுமாதிரியான சிறிய விஷயங்கள்தான் நம்முடன் இந்த பூமியை பகிரும் மற்ற உயிரினங்களைப் பெருமளவில் பாதிக்கின்றன. அப்படி ஒரு பாதிப்பு படம்பிடிக்கப்பட இப்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைத் தொடங்கியிருக்கிறது ஒரு புகைப்படம்.

Vikatan

பறவைகளைப் புகைப்படம் எடுப்பவர் கரேன் மேசன். கடந்த வாரமும் ஃபுளோரிடா கடற்கரை ஒன்றில் எப்போதும் போல பறவைகளைப் படம்பிடித்துக்கொண்டிருந்திருக்கிறார். தனது குட்டிக்காக எடுத்துவந்த உணவை அன்பாக தாய் பிளாக் ஸ்கிம்மர் (Black Skimmer) பறவை கொடுக்கும் காட்சி அவரது கண்ணில் தென்பட்டிருக்கிறது. உடனே அதைப் புகைப்படம் எடுத்திருக்கிறார். ஆனால், சில நிமிடங்களுக்கு பிறகுதான் அவருக்கு ஒன்று புரிந்திருக்கிறது. தாய் எடுத்துவந்தது உணவில்லை மீதம் விடப்பட்ட ஒரு சிறிய சிகரெட் துண்டு என்பது.

இந்த புகைப்படத்தை "If you smoke, please don't leave your butts behind." ( தயவுசெய்து புகைப்பிடித்தால் மீதிமிருப்பதை கீழே விட்டுச்செல்லாதீர்கள்) என்று ஃபேஸ்புக்கில் அவர் பதிவிட இது கடந்த சில நாட்களாக உலகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது.

If you smoke, please don’t leave your butts behind

Posted by Karen Catbird on Monday, June 24, 2019

கடல் பறவைகள் குட்டிகளுக்காக உணவுத்தேடி கடலுக்குச் செல்வது வழக்கமாக நடப்பது. ஆனால் இப்போது நாம் கடலில் கொட்டிவைத்திருக்கும் குப்பைகளால் அவற்றுக்கு உணவு எது என்பதே சரியாக தெரிவதில்லை. அவ்வப்போது இந்த குப்பைகளை எடுத்து உணவா, இல்லையா என்று அவை சோதித்துப் பார்க்கின்றன. இந்த நிகழ்வைப் போன்று சில நேரங்களில் அவற்றால் வித்தியாசத்தைக் கண்டுபிடிக்கமுடியாமலும் போய்விடுகிறது என்பது சோகம்.

'வெறும் சிகரெட்தானே!?' என நீங்கள் நினைக்கலாம். ஆனால், பிளாஸ்டிக்கைவிடவும் கடலை அதிகம் அக்கரமித்திருக்கும் சிறிய குப்பை, மீதம் விடப்படும் சிகரெட் துண்டுகள்தானாம். அரசு சாரா கடல் பாதுகாப்பு அமைப்பு ஒன்று 1980-ம் ஆண்டு முதல் கடலில் கலந்திருக்கும் சிகரெட் துண்டுகளைச் சேகரித்துவந்துள்ளது. தற்போது வரை இப்படியான 6 கோடி துண்டுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். கடற்கரைகளில் பயன்படுத்தப்படும் சிகரெட் மட்டுமல்லாமல் அனைத்து ஆறுகளில் இருந்து வருவது, நேரடியாகக் கடலில் கொட்டப்படும் குப்பைகளில் இருப்பது என சிகரெட் பல வழிகளில் இங்கு வந்துசேருகிறது.

this Skimmer chick was offered a cigarette butt by it’s parent. It’s time we cleaned up our beaches and stopped treating them like one giant ash tray. #nobuttsforbabies

Posted by Karen Catbird on Wednesday, June 26, 2019

எப்படி இவ்வளவு தூர பயணத்தை இந்த சிகரெட் துண்டுகள் தாக்குப்பிடிக்கின்றன என நீங்கள் கேட்கலாம். சிகரெட்டில் இருக்கும் ஃபில்டர் செல்லுலோஸ் அசிடேட்(cellulose acetate) என்ற பிளாஸ்டிக் ஃபைபராலானது. இது அவ்வளவு எளிதில் மக்கிவிடாது. இதனால் நாம் நினைப்பதைவிடவும் 'புகைபிடிப்பது' பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

சிகரெட்
சிகரெட்

இப்படி மனிதனால் மற்ற உயிரினங்கள் சிக்கலைச் சந்திப்பது இன்று, நேற்று கதை இல்லை. இது தொடர்ச்சியாக நடந்துகொண்டேதான் இருக்கிறது. தினம் இதுபோன்று எதாவது ஒரு நிகழ்வு நமக்குத் தெரியவந்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால், நாம் என்ன செய்யப்போகிறோம்?